Monday, August 10, 2015

விரிந்திருக்கின்ற பூமியெங்கும் பாதைகள்...


நடந்தால் பாதை; படுத்தால் படுக்கை!

பாதைகள்... விரிந்திருக்கின்ற பூமியெங்கும் பாதைகள்...www.v4all.org

ஒரு வழிப்பாதை... இருவழிப்பாதை.. நான்கு வழிப்பாதை ... ஆறுவழிப் பாதை என்று பாதைகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருக்கின்றன. இவற்றிற்கிடையில் அவசர வழிப்பாதைகளும் அங்கங்கே உண்டு.

அனைத்துப் பாதைகளிலும் பயணங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. ஒவ்வொரு பாதையிலும் ஒவ்வொருவிதமான பயணம். பாதைகளில் பயணங்கள் நல்லதுதான். அதுவும் விபத்துகள் இல்லாத பயணங்கள் மிகவும் நல்லதுதான்.

பயணங்களால் தேசங்கள் இணையும். கட்டப்பட்டிருக்கின்ற தடுப்புச் சுவர்கள் உடையும். மனிதநேயம் மலரும். அன்பும் அரவணைப்பும் பெருகும். பண்பாடுகள் பரிமாறப்படும். வாழ்க்கைத் தரம் உயரும்.

ஒரு பயண மொழி "ஒருவன் மரணத்திற்கு முன்னதாக பத்தாயிரம் புத்தகங்கள் படித்திருக்க வேண்டும். பத்தாயிரம் மைல்கள் நடந்திருக்க வேண்டும்''. இது சீனநாட்டின் பழமொழி. அவர்களின் வாழ்வியல் பயணமொழி.

இனிய இளைஞனே! இந்த இரண்டும் இப்போது உனக்கு வேண்டும்.

புத்தகங்கள் கலங்கரை விளக்குகள். நல்ல பாதையை நாள்தோறும் காட்டும். நடை நோய்க்குத் தடை. நடைதான் உனக்கான விடையையும் தரும். அதனால் இந்த இரண்டும் இப்போது உனக்குத் தேவை.

மாவீரன் அலெக்சாண்டர் எட்டு ஆண்டுகளில் பதினெட்டாயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளான். நான்கு பெரிய நதிகளைக் கடந்துள்ளான். அப்போது அவன் கண்களுக்குத் தெரிந்திருந்த மொத்த உலகமும் அவனுக்குச் சொந்தமாக இருந்தது. பயணங்கள்தான் அவனது வெற்றிக்குக் காரணமாக இருந்துள்ளது. அத்துடன் அவன் தேர்ந்தெடுத்த பாதைகளும்தான்.

உனது பயணமும் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் பயணமாய் இருக்கட்டும். ஓடிக் கொண்டிருந்தால் தான் நதி. ஓரிடத்தில் தேங்கி விட்டால் அது குளம். குளத்தில் தேங்கிய நீர் நாற்றமெடுக்கும். நோய்களைப் பரப்பும். அது போல்தான் வாழ்க்கைப் பயணத்தில் தேங்கிப் போகிறவர்களும் குளத்தின் நீரைப் போலத்தான் இருப்பார்கள். ஓடிக்கொண்டே இருக்கும் நதிதான் தூய்மையாக இருக்கும். அதுதான் ஊருக்கு உதவும்.

கவிஞர் கல்யாண்ஜியின் ஒரு கவிதைப் பயணம்...

இக்கரைக்கும் அக்கரைக்கும்
பரிசில் ஓட்டிப் பரிசில் ஓட்டி
எக்கரை என்கரை என்று மறக்கும்
இடையோடும் நதி மெல்லச் சிரிக்கும்

இயந்திரமயமாகிப் போன பயணத்தில் எப்படியாவது பொருள் தேடும் அவசரத்தில் மாற்றுப்பாதையில் வாழ்வியல் விழுமியங்களை இழந்து கொண்டிருக்கின்ற சாரமற்ற வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளது இக்கவிதை.

இரவு பகலாக அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் மாறிமாறிப் படகுப் பயணம் செய்வதால் எந்தப் பக்கம் தன்னுடைய சொந்தப் பக்கம் என்ற உணர்வும் இல்லாமல் போகிறது. படகுக்காரனின் பரிதாபத்தைப் பார்த்து இயற்கையின் இளவரசியாய்த் திகழும் நதிப் பெண் தன் இதழ் விரித்து மெல்லச் சிரிப்பதாகக் கவிஞன் பேசுகிறான்.

ஆம்! பணத்தைத் தேடி அலையும் பாதைகளில் அன்பும், பாசமும் இயற்கையின் நேசிப்பும், அனைத்தும் கேள்விக் குறிகளாகிவிட்டன. இதுதான் இன்றைக்குப் பலரின் பயணங்களாகிவிட்டன.

இனிய தோழனே!

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நதியின் பாதையும் பயணமும், ஓடக்காரரின் பாதையும் பயணமும் வெவ்வேறு விதமானவை. நீ போகிற பாதையை நீதான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏற்கனவே பழக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகள் வழியே போக நினைத்திருக்கின்றீர்களா? அல்லது தொடக்கத்திலேயே பழக்கப்பட்ட பாதையில் போகாமல் வேறு வழியில் போக நினைக்கிறீர்களா? அல்லது சிறிது தூரம் அந்த வழியே போய்விட்டுப் பிறகு விதிமுறைகளை உடைத்தெறிய நினைக்கின்றீர்களா? அது உங்கள் விருப்பம்.

உங்கள் விருப்பம் எதுவானாலும் பார்த்துப் போவதற்குக் கண்கள் ஒளியுடன் இருக்க வேண்டும். நடந்து போவதற்குக் கால்கள் வலுவுடன் இருக்க வேண்டும்.

நதி நடந்து போவதற்கு யார் பாதையைப் போட்டுக் கொடுத்தார்கள். மலையில் பொழிந்த மழைநீர் ஆறாக ஓடத் தொடங்கியதுடன் தானாக ஒரு பாதையை ஏற்படுத்திக் கொண்டுதான் ஓடுகின்றது. பாறைகளை உடைத்துக் கொண்டும், மண்ணை இருபுறமும் கரை சேர்த்துக் கொண்டும் தன் பாதையில் எதிர்ப்படுகின்ற மரங்கள், செடிகள், விலங்குகள் எல்லாவற்றையும் எதிர்கொண்டு தனக்கென்று ஒரு பாதையை ஏற்படுத்துகின்றது. நதிக்குள் இருக்கும் ஒரு சக்தியைப்போல் உனக்குள்ளும் வாழ்வதற்கு ஒரு சக்தி இருக்கின்றது. நதியின் பாதையாய் உனது பாதையை உருவாக்கிக்கொள்.

எளிமையான ஒருவெற்றிப் பாதையை உனது விழிகளுக்குக் காட்டுகின்றேன். மனதில் தோன்றும் எண்ணங்கள்தான் பாதையை தீர்மானிக்கின்றன. தாமஸ்மோர்ட் என்னும் ஆஸ்திரேலியர் குளிர்சாதனப் பெட்டியை முதன் முதலில் கண்டுபிடித்தவர். கண்டு பிடிப்பதற்குக் காரணம் எளிமையான எண்ணம் தான்.

இறந்து போன மிருகம் உறைபனியினுள் புதைந்து போய் கொஞ்சமும் கெடாமல் இருந்தது என்ற செய்திதான். இதனை ஆதாரமாகக் கொண்டு புதுவிதமான முறையில் ஏதாவது கண்டுபிடிக்க இயலுமா? என்று அவர் எண்ணினார். மிருகமே கெடாமல் இருந்தால் அன்றாடப் பொருட்களை குளிர் அறைக்குள் வைத்தால் அவை எப்பொழுதும் போலவே இருக்கும் என்று நம்பினார். அதன் வழியே ஆய்வைத் தொடர்ந்தார். பலரும் நகைத்தார்கள். அவரோ தன்னுடைய எண்ணத்தில் உறுதியாக இருந்தார். இப்படித்தான் `பிரிஜ்ஜைக்` கண்டுபிடித்தார் . இதுவும் நடந்து செல்கையில் கிடைத்த ஒரு பாதைதான்.

சில நேரங்களில் எந்தப் பாதையில் செல்வது என்று குழப்பத்தில் நீந்திக் கொண்டிருப்பதை விட ஏற்கனவே போடப்பட்ட பாதைகளில் பயணிப்பது சுலபம்தானே. அதற்கு வெற்றி பெற்றவர்களின் பாதைகளைப் பின்பற்றுங்கள். அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூர்ந்து கவனியுங்கள். இதுவும் வெற்றிக்கான ஒரு பாதைதான்.

இதோ, கடந்து வந்த ஒரு பாதையின் கதை. கலில்ஜிப்ரானின் உருவகக் கதை. ஒரு பள்ளத்தாக்கில் இரண்டு நீரோடைகள் பேசிக் கொண்டன. ஒரு நீரோடை மற்றொரு நீரோடையைப் பார்த்து "நண்பனே! நீ எவ்வாறு இங்கு வந்து சேர்ந்தாய். நீ வந்த பாதை எப்படியிருந்தது'' என்று கேட்டது.

அதற்கு அந்த நீரோடை, "என் வழி மிகவும் கடினமானதாக இருந்தது. நீர் இரைக்கும் இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கினேன். அது பிறகு உடைந்துவிட்டது. வாய்க்கால் வழியாகவே வந்தேன். வயலுக்கு நீர் பாய்ச்சும் விவசாயி இறந்துவிட்டார். வயலுக்குப் பாயவில்லை. வீணாகப் பொழுது போக்கும் மக்கள் வாழும் பகுதி வழியாக எப்படியோ கஷ்டப்பட்டு இங்கு வந்து சேர்ந்தேன்.''

"ஆமாம்! நீ கடந்து வந்த பாதை எப்படி இருந்தது?''

அதற்கு மற்றொரு நீரோடை சொன்னது. "எனது பாதை மிகவும் வித்தியாசமானது. நான் மணம் பரப்பும் மலர்கள் நிறைந்த பாதை வழியாகவும் மெல்லிய செடி கொடிகள் படர்ந்துள்ள தரை வழியாகவும் வந்தேன். பலரும் வழியில் என்னை விரும்பி மொண்டு குடித்தனர். குழந்தைகள் தங்கள் பட்டுப் பாதங்களை என் மீது தொட்டுத் தொட்டு வைத்து மகிழ்ந்தனர். வழியெங்கும் மகிழ்ச்சி ஆரவாரம் அது. எப்படி உன் பாதை துன்பமாக இருந்தது கேட்பதற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றது.

இவ்வாறு இந்த நீரோடைகள் பேசிக் கொண்டிருக்கையில் ஆறு உரக்கக் கூறியது.

வாருங்கள், வாருங்கள் நாம் எல்லோரும் கடலுக்குப் போகிறோம். இனிமேல் எதுவும் பேசாதீர்கள். இப்போது என்னுடனே இருங்கள். நீங்கள் வந்த பாதை மகிழ்ச்சியானதா, துன்பமானதா என்ற பாகுபாடு இல்லாமல் நாம் எல்லோரும் கடலுக்குள் போகிறோம். நீங்களும் நானும் நம் அன்னையாம் கடலின் இதயத்தினுள் சேரும்போது கடந்து வந்த பாதையை மறப்போம்'' பயணத்தின் நிறைவு இது தான்.

இலக்கை நோக்கிய பயணத்தில் இடைïறுகளைக் கண்டு அஞ்சாதீர்கள். சேரும் இடத்தைப் பொறுத்துப் பயணம் சிறப்புப் பெறலாம். ஆம். கோயிலுக்குள் போனதும் தண்ணீர் தீர்த்தமாகிறது. சாதம் பிரசாதமாகிறது. சாம்பல் திருநீறாகிறது. இது போல் ஒவ்வொரு பயணத்தின் பாதையும் இருக்கட்டும்.

அந்தப் பயணத்தை நோக்கி நடந்து கொண்டே இருங்கள். வெற்றி தேவதை உங்கள் முகவரியை விசாரிக்கத் தொடங்கும் வரை நடந்து கொண்டே இருங்கள். பாதங்கள் நடக்கத் தயாராக இருந்தால் பாதைகள் மறுப்புச் சொல்லப் போவதில்லை. உழைப்பின் ரதங்கள் ஓடி வரும் பாதையில் தடையாக வைத்திருக்கும் கற்கள் தூள் தூளாகும்.

இந்தப் பயணத்தைப் பற்றி கவிஞர் மு.மேத்தா.

தூங்கி எழுந்தால்
பூமி உனக்குப் படுக்கையாகிறது
விழித்து நடந்தால்
அதுவே உனக்குப் பாதையாகிறது!
ஒளி குறைந்த வீதியில்
நடக்கும் போதும்
உன் விழிகளுக்கு வழி தெரியும்
இதயத்தில் தீபம்
எரிந்து கொண்டிருந்தால்!

ஆம்! இந்த நம்பிக்கை தீபத்தை விழிகளில் ஏற்றுங்கள். இந்தப் பூமியெங்கும் புதையல்கள் புதைந்து கிடக்கின்றன. அதை எடுக்க வேண்டாமா? உருண்டோடிக் கொண்டிருக்கின்ற இந்தப் பூமிப்பந்தில் நீ தான் பூமத்திய ரேகை. இப்பொழுதே பயணத்தைத் தொடங்குங்கள். இந்தப் பூமியில் நீ நடந்தால் பாதை... படுத்தால் படுக்கை. பாதைகளும் பயணங்களும் உங்களுக்குள்தான் இருக்கின்றன.

பேராசிரியர் க.ராமச்சந்திரன்

No comments:

Post a Comment