Friday, August 14, 2015

லதா மங்கேஷ்கரின் வாழ்க்கை - முன்னேற விரும்புகின்றவர்களுக்கு அவர் வாழ்க்கை ஒரு அருமையான பாடமாகும்.

இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் வாழ்க்கை, வேதனைகளும் சோதனைகளும் நிறைந்தது. ஆயினும் முன்னேற விரும்புகின்றவர்களுக்கு அவர் வாழ்க்கை ஒரு அருமையான பாடமாகும்.
ஒரு பெண்ணால் முன்னேற முடியுமா? வறுமை நிறைந்த தன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியுமா? அதுவும் இளமை ததும்பும் பருவத்தில் தன்னைக் காத்துக்கொண்டு தன் குடும்பத்தைக் காப்பாற்றமுடியுமா?
என்றால் “முடியும்" என்று முன் உதாரணமாக நிற்கிறார் 30 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை புரிந்த இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்.
பதின்மூன்று வயதில் தன் தந்தையை இழந்த அவர், தன் இரண்டு சகோதரிகளையும் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றார். வறுமைதான் அவருக்கு பெரும் சொத்தாக அமைந்தது.
அவர் தந்தை ஒரு பாடகர், நடிகரும் கூட. சிறு வயதில் 7ஆம் வயதிலேயே அவரோடு மேடையில் பாடவும், சில சமயங்களில் நடிக்கவும் சென்றுள்ளார் சிறுமி லதா.
தந்தையின் இறப்புக்கு பிறகு எப்படியாவது குடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டும் என்று ஒரு நாடகக் கம்பெனி விடாமல், ஸ்டுடியோ விடாமல் ஏறி இறங்கினார்: “”குரல் சரியில்லை” இசை யமைப்பாளர்கள் அளித்த பதில்.
அவர் அழகாக இருந்ததால் நடிக்கவே அழைத்தர்கள். ஆனால், லதாவுக்கு நடிப்பில் விருப்பமில்லை. இசையில்தான் பெரும் விருப்பம். அதனால் பாடுவதையே விரும்பினார்.
நடிப்பா? பாடலா? என்றமுடிவுக்கு வரவேண்டிய கட்டம். சலனத்திற்கு ஆளாகாமல் ஒன்றையே தேர்ந்தார். பாடல்தான் தனது வாழ்க்கை என்ற முடிவுக்கு வந்தார். இதுதான் அவரது வாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது.
ஒரு பட உரிமையாளர் வினாயக் என்பவர் பாட வாய்ப்பு நல்கினார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவர் மாரடைப்பில் இறந்து போனதும் மீண்டும் வாழ்வில் வறுமைப் புயல் வீசத் தொடங்கியது.
“வாழ்க்கை யில் ஒரு இலட்சியத்தை எடுத்துக்கொள். அதையே உன் உயிராகவும் உடம்பாகவும் போற்று. நாடி நரம்புகளில் எல்லாம் உன் இலட்சியம் எல்லாம் குருதியோடு கலந்து ஓடட்டும். மற்ற எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு, அது ஒன்றையே உன் கண்முன் நிறுத்திப் பாடுபடு. இது ஒன்றுதான் வெற்றிக்கு வழிணி என்ற விவேகானந்தரின் கருத்தை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தியவர் லதா மங்கேஷ்கர்.
இன்று 30 ஆயிரம் பாடல்களுக்குமேல் பாடி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். நாம் எப்போதும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்பது, முன்னேற விரும்புகின்றவர்கள் மேற்கொள்ள வேண்டிய பாடம். லதா 24மணி நேரமும் வாய்ப்பை எதிர்நோக்கி தன்னைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டிருந்தார்.
ஒருநாள் வேலைதேடி சோர்ந்துபோய் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த பொழுது எதிர்பாராதவிதமாக ஒரு இசையமைப்பாளர் “குலாம் ஹைதர்” என்பவரைச் சந்தித்தார்.
லதாவின் குரல் வளத்தை அரிய விரும்பிய அவர் அந்த இடத்திலேயே கையிலிருந்த சிகரெட் தகரப் பெட்டியைக் கொடுத்த, அதிலேயே தாளம்போட்டு பாடச்சொன்னார். லதா அப்படியே பாடினார். அவர் நெடுநாள் தன்னை தயார் செய்து கொண்டிருந்த திறமைக்கு அன்று ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அந்தத் திறமையும் அவருக்கு கை கொடுத்தது. அன்றிலிருந்து அவர் படிப்படியாக வெற்றிப் படிகளில் ஏறத்தொடங்கினார்.
“திறமையான மாலுமிக்கு காற்று கூட அவன் சொல்லுகின்ற திசையில் வீசும்ணி என்பார்கள். லதாவின் வாழ்வில் அது உண்மையாயிற்று.
இன்று 85 வயதாகும் லதா தன் வாழ்வை இசைக்காகவே அர்ப்பணித்துக் கொண்டார். திருமணம் செய்து கொள்ளவில்லை. சோகமாகட்டும், மகிழ்ச்சியாகட்டும், பக்தி யாகட்டும் ஒன்றிப் பாடுகின்ற தன்மையால் அந்த உணர்ச்சிகளைக் கேட்போர் உள்ளத்திலும் வரவழைத்து விடுவார். அதுதான் அவரது வெற்றியின் இரகசியமாகும்.
திரைப்படப் பாடல்கள் மட்டுமன்றி, கர்நாடக இசையிலும் தேர்ச்சி பெற்றார். இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமியைப் போன்று இன்று புகழ் பூத்து விளங்குகிறார். மராட்டிய மண்ணில் பிறந்த அவர், மராட்டிய வீரன் சிவாஜியைப் போல, மராட்டிய நாவலாசிரியர் காண்டேகரைப் போல, இசைக்குயில் லதா மகேஷ்கரும் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார்.
அன்றைய அதே அடக்கம், அதே பணிவு, இன்றும் அவரோடு நிலைத்து நிற்பதால் புகழ் பூத்த பெண்மணியாக, சாதனை படைத்த பெண்மணியாகத் திகழ்கிறார். பெண்ணால் அதுவும் அழகான இளம் பெண்ணால் முடியுமா? என்று ஐயத்தை எழுப்புகின்றவர்களுக்கு லதா மங்கேஷ்கர் ஒரு விடையாகவே விளங்குகிறார்.
Thank you : Thannambikkai 0 - www.v4all.org 


No comments:

Post a Comment