Monday, August 3, 2015

அட்சயதிருதியால் ஏற்படும் பலன்கள்!

அட்சயதிருதியால் ஏற்படும் பலன்கள்!


அ-
+
Temple images

அட்சய திருதியை நாளில் விரதம் இருப்பது, பூஜைகள் செய்வது, புதிய பொருட்களை வாங்குவது இவற்றை விட முக்கியமானது, தானமளிப்பதும், முன்னோர் கடன்களைச் செய்வதும்தான். இல்லாதோருக்கு உங்களால் இயன்ற அளவுக்கு உதவுவது இவற்றினாலும் தர்மதேவதையின் அருளைப் பெற்று, புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். திருமகள் அம்சமாக நல்ல மனைவி அமைய விரும்புவோர், தங்களுக்கு நல்ல மருமகள் வர விரும்பும் பெற்றோர், அட்சய திருதியையில், திருக்கோயிலில் வைத்து பெண் பார்க்கும் வைபவத்தையோ நிச்சயதார்த்தத்தையோ நடத்தினால் விரும்பியபடி மணமகள் அமைவாள்.
தூவுங்க சாணம்! சூடுங்க மாலை: சித்திரையில் வரும் அட்சயதிரிதியை, புரட்டாசியில் வரும் விஜயதசமி ஆகிய இருநாட்களிலும் பாவ கிரகங்களின் ஆதிக்கமே கிடையாது. இந்த நாட்கள் சுபம் நடத்துவதற்கேற்ற முகூர்த்தநாட்கள். எந்த சுபவிஷயத்தையும் இந்நாளில் தொடங்கலாம். கன்னிப்பெண்கள் இந்தநாளில் நல்லகணவர் அமைய வேண்டி எருவை(காய்ந்த மாட்டுச்சாணம்) சந்திரனை நோக்கி தூவி மூன்றாம்பிறையை தரிசிக்க வேண்டும்.  வழிபாட்டை முடித்ததும், சிவன்கோயிலில் இருக்கும் அம்மன் சந்நிதியில் தீபமேற்றி வணங்க வேண்டும்.
பிற மாநிலங்களில் அட்சய திரிதியை: ஒடிசாவில் அட்சயதிரிதியை அன்று நிலத்தை உழுது விவசாயப்பணியை தொடங்குகின்றனர். பூரி ஜெகந்நாதர்  கோயிலில் அட்சயதிரிதியை ரதயாத்திரை சிறப்பாக நடக்கும். வங்காளத்தில் வியாபாரிகள் காலத்தில் புதுக்கணக்குகளை இந்த நாளிலேயே தொடங்கி வந்தனர் (தற்போது லட்சுமி பூஜை மட்டும் செய்கின்றனர்) மத்தியபிரதேசம், உஜ்ஜயினியில் இந்நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்து மதம் மட்டுமில்லாமல், சமண (ஜெயின்) மதத்தினரும் இந்நாளில் சமண தீர்த்தங்கரரான ரிஷபதேவரை வணங்கி  தானம் செய்கின்றனர்.
அட்சயதிருதியை நன்னாளில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சுவர்ண கவுரி விரதம் அனுஷ்டிக்கின்றனர். இந்த நாளில் கவுரி எனப்படும் பார்வதி தேவி தன் பிறந்த வீட்டிற்கு வருவதாகவும் அடுத்த நாள் விநாயகர் வருவதாகவும் ஐதிகம். அன்றைய தினம் குழந்தை பேறு, சுமங்கலி பாக்யம் உடல்நலம் ஆகியவற்றின் பொருட்டு சுமங்கலிப் பெண்கள் பல வகை தான தர்மங்கள் செய்கின்றனர். அட்சயத் திருதியை அன்று மஹா லக்ஷ்மியை தரிசிப்பதும் வழிபடுவதும் மிகவும் விசேஷமாகும். கேரளா மாநிலம் அடுவாச்சேரி என்ற இடத்தில் வாசுதேவ புரம், மஹா விஷ்ணு கோயிலில் அருள்பாலிக்கும் மஹாலக்ஷ்மியை அட்சய திருதியை முதல் தொடர்ந்து எட்டு நாட்கள் மட்டுமே தரிசிக்க முடியும் மற்ற நாட்களில் இந்த தேவி மஹா விஷ்ணுவுக்கு பணிவிடை செய்வதாக ஐதீகம்.
புத்தமதத்தில் குபேரன்: சீனா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் குபேரனை சிரிக்கும் சிருஷ்டியாக வணங்குகின்றனர். குள்ளமான, கள்ளமில்லாத, சிரித்த முகமாக கனத்த தொப்பையும், கையில் கலசமும், பொன்மூட்டை, ஆபரணங்கள் என ஸ்வர்ண நிறமாக பல்வேறு அமைப்புகளில் ஆராதிக்கின்றனர். மதங்கள் மாறுபட்டாலும் குபேர அம்சம் ஒன்றுதான். புத்தமதத்திலும் குபேர வழிபாடு இருப்பதால், சீனர்களும் குபேர வழிபாடு செய்கின்றனர்.
அத்தனை பேருக்கும் படியளப்பவள்: உலக உயிர்களுக்கு படியளிக்கும் அம்பிகை அன்னபூரணியாக  விளங்குகிறாள். அன்னபூரணி தன்னுடைய பாத்திரத்திலிந்து உலகிற்கு அன்னம் வழங்கிய நாள்  என்பதால், தயிர்ச்சாதம் தானம் செய்வது புண்ணியமானது ஆகும். அவள் வைத்திருக்கும் அன்னபாத்திரம் அள்ள அள்ளக் குறையாது. இந்நாளில் செய்யும் தானம், தர்மம், யாகம் இவற்றுக்கு மிகுந்த புண்ணியம் உண்டு. அன்னதானம் அளித்தல், கோடையின்  வெப்பம் தணிக்க தண்ணீர் பந்தல், நீர்மோர், பானகம் கொடுத்தல், குடை, காலணி வழங்குதல் ஆகியவையும் தானதர்மத்தில் அடங்கும்.
அட்சய திரிதியை சுபநிகழ்ச்சிகள்: புதுவீடு குடியேறுதல்,  வியாபாரம் தொடங்குதல், கல்வி,கலை பயில ஆரம்பித்தல் போன்ற சுபநிகழ்ச்சிகள்  செய்வதும் அட்சயதிரிதியையில் மேற்கொள்வது சிறப்பு. அட்சய திரிதியை நாளுக்கு எந்த கிரக தோஷமும் கிடையாது. எனவே, இந்த நாள் அக்னி நட்சத்திர காலத்தில்  வந்தாலும் கூட, சுபநிகழ்ச்சிகளை தடையின்றி செய்யலாம்
லட்சுமி காசு வாங்குவோமா!
வைகுண்ட வாசனான விஷ்ணுவை மகாலட்சுமி தங்கக்காசுகளால் பூஜிக்கும் நாள் அட்சயதிரிதியை. இந்நாளில் லட்சுமி படம் பொறித்த தங்க காசுகளை வாங்கினால் வீட்டில் செல்வ வளம் பெருகும். பெருமாள் கோயிலில் தாயார் சந்நிதியில் நெய் தீபமேற்றி வழிபட வாழ்வு சிறக்கும்.
பரசுராமர்  பிறந்தநாள்: பரசுராமர் பிறந்த நாள் தந்தை சொல்லே மந்திரம் என்று வாழ்ந்து காட்டிய பரசுராமர் அவதரித்த நன்னாள், பலராமர் தோன்றிய பொன்னாள் அட்சய திருதியையே!
மூன்றாம் நிலவே!
அமாவாசையில் இருந்து மூன்றாம்நாள் வரும் திதி திரிதியை. இவற்றில் மிக உயர்ந்தது அட்சய திரிதியை. மூன்றாம் பிறை பார்த்தால் செல்வவளம் பெருகும். மூன்றாம் பிறை என்றால் என்ன தெரியுமா?  சந்திரனுக்கு தட்சன் தன் 27 மகள்களையும் திருமணம் செய்து கொடுத்தார். அவர்களில் ரோகிணி, கார்த்திகை ஆகிய மனைவிகள் மீது மட்டும் அதிக பாசம் கொண்டார். இதனால், மனம் வருந்திய மற்ற மனைவிகள் தங்கள் தந்தையிடம் புகார் செய்தனர். நீ அழகாய் இருப்பதால் தானே ஆட்டம் போடுகிறாய். உன் முகப் பிரகாசம் மறையட்டும், என்று சாபமிட்டார். இதையறிந்த ரோகிணியும், கார்த்திகையும் தட்சனிடம் சென்று அவரது சாபத்தை திரும்பப்பெற வலியுறுத்தினர். தட்சனுக்கு அப்போது தவவலிமை குறைந்திருந்ததால் அவனால் சாபத்தை திரும்பப் பெற முடியவில்லை. உடனே அந்தப் பெண்கள் சிவனை நினைத்து கடும் தவத்தில் ஈடுபட்டனர். மகிழ்ந்த சிவன் அவர்களுக்கு காட்சியளித்தார். சந்திரனை தன் சிரசில் மூன்றாம் பிறையாக அமரும் பாக்கியத்தை அருளினார்.  திரிதியை அன்று சந்திரப்பிறையை வணங்கினால், சிவனின் சிரசையே நேரில் கண்டதாக அர்த்தம். இதைப் பார்ப்பவர்கள் சகல செல்வமும் கிடைக்கும்.

No comments:

Post a Comment