Thursday, August 20, 2015

மூலதனமான தன்னம்பிக்கை

கோவை மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் மகளிர் மேனிலைப்பள்ளியில் உதவியாசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றேன். அப்போது எனக்குள் ஒரு உறுதியை எடுத்துக் கொண்டேன். படிப்பை முடித்தவுடன் எந்தவித கஷ்டமும் இல்லாமல் அரசு பணி ஒதுக்கீடு செய்திருக்கிறது. அதற்கு நன்றிக்கடனாக எந்த எதிர்பார்ப்பும் இன்று என்னிடம் பயிலும் மாணவர்களுக்கு சொல்லித் தருவதுடன் அவர்களை மேம்பாடையச் செய்ய வேண்டும் என்று உள்ளத்தில் உறுதிமொழியை எடுத்துக்கொண்டேன்.
அந்தப் பள்ளியில் நான் பணியாற்றி 29 ஆண்டுகளில் நூறுசதவீதத் தேர்ச்சியையும், சராசரி மதிப்பெண்களில் அதிகபட்ச சராசரியையும் எனது பாடத்தில் வைத்திருந்தேன். அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைவாக இருந்த காலத்திலும் கூட என்னுடைய பாடத்தில் தேர்ச்சி சதவீதம் நூறுசதவீதமாக இருந்து கொண்டிருக்கிறது இன்றுவரை. மேலும் என் பாடத்தில் மாவட்ட அளவில் முதன்மையும், மாநில அளவில் முதன்மையும் கொடுத்திருக்கிறேன். இதற்குக் காரணம் என்னுடைய அர்ப்பணிப்பு உணர்வும், மாணவர்களை புரிந்துகொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு பாடம் எடுக்கும் திறமையும் தான்.
இப்படி 29 ஆண்டுகளைச் சிறப்பாகச் சென்று கொண்டிருந்த என் ஆசிரியப் பணியில் தலைமையாசிரியர் உயர்வு பெற்றேன். அப்போதே ஒரு முடிவெடுத்தேன். எந்த வகையிலும் முன்னேற்றமடையாத ஒரு பள்ளிக்குத் தலைமையாசிரியராகச் சென்று அந்தப் பள்ளியை பிரமாதமான பள்ளியாக மாற்றிக்காட்ட வேண்டும் என்று. அப்படி பார்த்தபோது தற்போது நான் பணியாற்றும் பள்ளி மிகவும் பின்தங்கிய தேர்ச்சி சதவீதத்தையும், மாணவர்கள் பலர் ஒழுங்கீனமாகவும் இருப்பதாக அறிந்தேன். நமக்கான பள்ளி இதுதான் என்று முடிவு செய்து தலைமையாசிரியராக பணியில் சேர்ந்து கொண்டேன்.
கோவை மாவட்டம் இராமநாதபுரம் மாநகராட்சி ஆண்கள் மேனிலைப்பள்ளித் தலைமையாசிரியர் திரு. ராமதாஸ் அவர்கள் இந்தாண்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதைப் பெற்றிருக்கிறார். கோவை மாவட்டத்தில் சிறிய ஊரான இருகூர் கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவர் அதே ஊரில் உள்ள மேனிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அவர் உயர்கல்வியான கல்லூரிப் படிப்பை சென்னையில் உள்ள பிரசிடென்சி காலேஜில் முடித்தவர். ஆசிரியர் பணியை முடித்தவுடன் கோவை மாவட்டத்தில் இராமகிருஷ்ணாபுரம் மகளிர் பள்ளியில் உதவியாசிரியராகப் பணியில் சேர்ந்த அவர் 29 ஆண்டுகள் அங்கு பணியாற்றிவிட்டு, தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்று இப்பள்ளிக்கு வந்து, இன்று பள்ளியின் தேர்ச்சி சதவீதத்தை 58 சதவீதத்திலிருந்து 93 சதவீதத்திற்கு உயர்த்தி மாநகராட்சி பள்ளிக்கு ஒரு முன்னுதாரணமாக மாற்றிக் காட்டியுள்ளார்.
இத்தகைய அளப்பரிய சாதனையைத் தொட எவ்வளவு தூரம் பயணம் செய்தார், அப்பயணத்தில் பெற்றஅனுபவங்கள் முதலியவற்றைநம்முடன் பகிர்ந்து கொண்டதிலிருந்து…
“முதலில் இந்த விருதை எனக்களித்த தமிழக அரசுக்கும், விருதுக்குக் காரணமாக இருந்த அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் நமக்கு இது கிடைக்க வேண்டும் என்று எண்ணி செயல்பட மாட்டேன். அப்படித்தான் இந்த விருதுக்காக நான் உழைக்கவில்லை. நான் பெற்றகல்வியை, அறிவை என் மாணவர்கள் பெறவேண்டும் என்று தான் உழைத்தேன்.
நான் பள்ளியில் படிக்கும்போதே கல்லூரியை சென்னையில் உள்ள பிரசிடென்சி காலேஜில் தான் படிக்க வேண்டும் என்று இலக்கை நிர்ணயித்துக்கொண்டு, அந்த இலக்கை அடையவேண்டும் என்று கடுமையாக உழைத்தேன். பலன் கைமேல் கிடைத்தது. என் எண்ணத்தைப் போல் அதே கல்லூரியில் சேர்ந்து படித்தேன். அப்போதுதான் உணர்ந்தேன் விவேகானந்தர் சொன்னதைப் போல் நாம் என்னவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆவாய் என்றகூற்றை, கல்லூரி படிப்பு முடித்தவுடன் பி.எட். படிப்பில் சேர்ந்தேன்.
ஆசிரியர் பயிற்சி முடித்தவுடன் சில மாதங்களிலேயே பள்ளியில் சேர்ந்தவுடன் உள்ளூர் பெருமக்களிடமும், மாணவர்களின் பெற்றோர்களிடமும் சில உறுதிமொழிகளை வாங்கிக்கொண்டு, கல்வித்துறையின் வழிகாட்டல்களை முழுமையாகப் பின்பற்றி தரமான கல்வியை மாணவர்களுக்கு கொடுக்கும் பள்ளியாக உருவாக்கிக் காட்ட வேண்டும் என்று முடிவு செய்து பல கடினமான நடவடிக்கைகளை மேற்கொண்டேன். குறிப்பாக அப்போது மாநகராட்சியின் கமிஷனராக இருந்த திரு. அன்சுவ் மிஸ்ரா அவர்களின் சீரிய வழிகாட்டலால் பல மாற்றங்களைப் பள்ளியில் புகுத்தினேன். அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி என்று ஒரு குறிக்கோளை அடிப்படையாக வைத்துச் செயல்பட ஆரம்பிதேன்.
பெரும்பாலான மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் கல்வியின் அவசியம் தெரியாமல் இருந்தது. முதலில் அவர்களுக்கு கல்வியின் அவசியத்தை எடுத்துக் கூறினோம். மாணவர்களுக்கு அதுவரை இருந்த படிக்கும் சூழலையும், அவர்களின் மனநிலைக்கு ஏற்ப கற்பிக்கும் முறையையும் கொண்டுவந்தோம். மாணவர்களுக்கு படிக்கும் சூழலை உருவாக்கும் பொருட்டு எக்கோலஜிக்கல் பேலன்ஸிக்காக பள்ளியில் கிட்டத்தட்ட 500 மரக்கன்றுகளை வைத்து வளர்த்தோம். பள்ளியின் சூழல் இப்படி மாற்றியமைக்கப்பட்டதால் மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து படிக்க ஆரம்பித்தனர். அதற்கு முன்பு வரை இருந்த வருகைப் பதிவும் அதிகரிக்க ஆரம்பித்தது.
இப்படி மாணவர்கள் கல்வி பயில ஆர்வமூட்டியதுடன் மாலைவேலையில் தனிப்பயிற்சியைப் பின்தங்கிய மாணவர்களுக்குக் கொடுத்தோம். எங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைக்குழந்தைகள் என்பதால் மாலை வகுப்புகளுக்கு இலவசமாக சுண்டல் கொடுத்து பசியைப் போக்கி பாடத்தில் கவனத்தைச் செலுத்த வைத்தோம்.
விளையாட்டுப் பருவத்தில் உள்ள குழந்தைகளின் மனநிலையைப் புரிந்து அவர்களுக்கு ஏற்றவாறு பள்ளிப்பாடத்தை கற்றுக்கொடுக்க ஆசிரியர்களை பழக்கப்படுத்தியதுடன், கற்றலில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தினோம். அதில் முதல் படியாக மாணவர்களை தரம் பிரித்தோம். பள்ளிக்கு விடுமுறையின்றி வரும் மாணவர்கள், பள்ளிப் பாடங்களை ஆர்வமாய் படிக்கும் மாணவர்கள் என்று தனித்தனியாகத் தரம் பிரித்து ஒவ்வொருவருக்கும் ஏற்றவகையில் பாடங்களை எங்கள் ஆசிரிய பெருமக்களைக் கொண்டு நடத்தினோம்.
ஒரு கட்டத்திற்குப் பிறகு, எங்களின் பள்ளி மாணவர்களைவிட ஆசிரியர்கள் அதிக ஆர்வத்துடன் பாடங்களில் எப்படி புதுமையைப் புகுத்தலாம் என்று யோசித்து, அவற்றைசெயல்படுத்தினார்கள். அத்தகைய புதுமைக்கும், அர்ப்பணிப்பு உணர்வுக்கும் பரிசாக தேர்ச்சி சதவீதம் 58 சதவீதத்தில் இருந்து 93 சதவீதமாக உயர்ந்தது.
தொடர்ந்து புதுமைப்படுத்துதலில் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலில் கவனத்தைத் திருப்பினோம். மாணவர்களைக் கொண்டே நாற்றங்காலில் விதைகளை போட்டு, வளர்த்தி, நிலத்தில் அவற்றைநட்டுவைத்து வளர்க்கச் செய்தோம். இதனால் பள்ளியைச் சுற்றியும் மரங்களாகவும், நல்ல சுற்றுச்சூழலும் ஏற்பட்டது. தற்போது கூட 2000 மரக்கன்றுகள் நாற்றங்காலில் வைத்திருக்கிறோம். மழையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். மழைக் காலத்தில் அத்தனை மரக்கன்றுகளையும் மாணவர்களை வைத்தே நட்டுவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
இதைத்தவிர மாணவர்களின் ஆளுமையை வளர்க்கும் பொருட்டு என்.சி.சி., என்.எஸ்.எஸ். விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடுத்துவதுடன் அவற்றைஎன் மேற்பார்வையிலேயே கவனித்துக் கொள்கிறேன். இத்தகைய பயிற்சியை மாணவர்களுக்குத் தருவதால் உடல் ரீதியாக அவர்கள் பலமிக்கவர்களாவதுடன் மன ரீதியாகவும் தின்மை பெறுகிறார்கள்.
இத்தகைய பயிற்சிக்குப் பின்னர் மாணவர்களின் ஒழுக்கம் அதிகரித்ததுடன் கற்றலிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் 40, 50 என்று மதிப்பெண்கள் பெற்றமாணவர்கள் 70, 80 என்று பெறுவதைக் காணும்போது மேலும் மகிழ்ச்சி பொங்குகிறது” என்று தன்னுடைய அனுபவங்களைச் சொல்லிக் கொண்டே சென்ற தலைமையாசிரியர் திரு. ராமதாஸ் அவர்கள் பல மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் முன்னுதாரணமாக காட்சியளிப்பதற்குக் காரணம் தனக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்களான திரு. காமராஜ், திரு. குமாரசாமி மற்றும் திரு. விஸ்வநாதன் ஆகியவர்களின் ஆளுமையும், கற்பித்தலின் வடிவமும் தான் என்றார். தொடர்ந்து இத்தகைய வெற்றிக்குக் காரணம் இப்பள்ளியின் ஆசிரியப் பெருமக்களும், பெற்றோர்களும், மாணவர்களும் தான் என்றவர், தனிப்பட்ட முறையில் தனக்கு ஊக்கம் கொடுத்த தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்கு இந்நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முடித்தவர் தன்னுடைய எதிர்கால கனவான இப்பள்ளியின் தேர்ச்சி 100% சதவீதமாகவும், மாணவர்கள் மாநில அளவில் ரேங்கும் பெற உழைக்கத் தயாரானார். அவரின் எதிர்கால கனவு நனவாகி இதுபோல் பல விருதுகளையும், பாராட்டுக்களையும் பெறமுன்னேற்றத்தின் மூலதனமான தன்னம்பிக்கை வாழ்த்துகிறது.

No comments:

Post a Comment