எல்லோரும் மற்றவர்களைப் பார்த்து உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்கத் துடிப்பார்கள். அது மட்டுமல்ல பலர், வெற்றி பெற்றவர்களைப் பார்த்து, அவரின் வெற்றியின் ரகசியம் என்னவாக இருக்கும்? யாரோ பலே பார்ட்டியின் சப்போர்ட் இருக்கும் போல… இல்லேன்னா எப்படி வெற்றியை இவ்வளவு எளிதில் அடைந்து இருக்க முடியும்' என்று தலையைப் பிய்த்துக் கொள்வதும் உண்டு. இதோ அந்த ரகசியம் உங்களுக்கு மட்டும்!!
ஒரு மகாராஜா தன் அரண்மனையில் மிகச் சிறந்த சேவல் ஓவியத்தை வைக்க நினைத்தார். மன்னனின் ஆசை காட்டுத் தீ போல் எல்லா ஊரிலும் பரவியது. ஏத்தனையோ ஓவியங்கள் வந்தும் அவற்றில் மன்னனுக்கு முழுத் திருப்தி ஏற்படவில்லை. மற்ற நாடுகளில் உள்ள ஓவியர்களுக்காக ஒரு போட்டி வைத்தார் மன்னர்.
அவரது ஆசை போல், மற்ற நாட்டு ஓவியர்கள் வரைந்த படங்கள் மன்னரின் பார்வைக்காக வைக்கப்பட்டன. மன்னர் தான் குழந்தையாக இருந்த போது தனக்கு ஓவியம் கற்றுக் கொடுத்த அந்த வயதான ஓவிய ஆசிரியரை இப்போட்டியின் நீதிபதியாக நியமித்தார்.
எல்லா ஓவியங்களையும் பார்த்த அந்த வயதான ஆசிரியர் மீண்டும் ஒருமுறை ஓவியங்களைப் பார்த்தார். கன்னத்தைத் தடவிய படியே நடந்த அவரிடம், மன்னர்.
"என்ன சிறந்த சேவல் ஓவியத்தைத் தேர்வு செய்து விட்டீர்களா?" என ஆசையாகக் கேட்டார். "இந்தப் போட்டிக்கு இதில் எந்த ஓவியமும் தகுதி ஆனது இல்லை" என்றார். ஆசிரியர் அமைதியாக, எல்லோரும் வாயடைத்துப் போனார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு, "இந்த ஓவியங்கள் வைத்த அறையில், சேவல்களை விடுவோம். ஒரே இனத்தைச் சேர்ந்த மற்ற சேவலைப் பார்த்ததும், சேவலுக்குச் சண்டை போடத் தோன்றும். அப்படி எந்தச் சேவல், எந்த ஓவியத்தைப் பார்த்துச் சண்டை போடத் துவங்குகிறதோ, அந்த ஓவியம்தான் மிகச் சிறந்த ஓவியம் என்று முடிவு செய்வோம்" என்றார் அந்த ஓவிய ஆசிரியர்.
அவரது வார்த்தைக்கு மறு வார்த்தை பேசாமல், மன்னர் அந்த அறையில் நிறைய சேவல்களைக் கொண்டு வந்து விட கட்டளை பிறப்பித்தார். ஆனால் வந்த சேவல்கள் எந்த ஓவியத்தையும் பார்த்துச் சண்டை போடாமல், நேரே வெளியே வந்தன.
மன்னர் மனம் தளராமல், "சேவல்களைச் சண்டை போடத் தூண்டும் அந்த ஓவியத்தை நீங்கள் ஏன் வரையக்கூடாது?" என ஓவிய ஆசிரியரைப் பார்த்துக் கேட்டார்.
"மன்னர் உங்கள் சித்தம். ஆனால் எனக்கு ஆறு மாத கால அவகாசம் தேவை" என்றார் முதியவர். மன்னரும் சரி என்று "ஆறு மாதம் கழித்து, இதே அறையில் இப்போட்டி நடக்கட்டும்" என்று கட்டளை பிறப்பித்தார். காலம் சுற்றியது. சரியாக ஆறு மாதம் ஆனதும், அதே அறையில் எல்லா ஓவியர்களும் மீண்டும் கூடினார்கள். ஆனால் அந்த முதியவர் கையில் எந்த ஓவியத்தையும் கொண்டு வரவில்லை. மன்னர் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
"மன்னா ! இப்போது இங்கேயே அரை மணியில் வரைகிறேன். எனக்கு அதற்கான உபகரணங்கள் தேவை" என்று முதியவர் கூறியதும், அனைத்தும் வந்து சேர்ந்தன. ஓவியர் கடகடவென ஓவியத்தை வரைந்தார். பிறகு அதை மற்ற ஓவியங்களோடு வைத்தார். மீண்டும் அந்த அறைக்குச் சேவல்கள் அனுப்பப்பட்டன. எல்லோரும் மிக ஆவலாகக் காத்திருக்க, அவரது ஓவியத்தைப் பார்த்து ஒரு சேவல் அதில் வரையப்பட்டிருந்த சேவலை நிஜ சேவலாக நினைத்துச் சண்டைக்குப் போனது ! அப்போட்டியில் வெற்றி பெற்றது இவரது ஓவியம்தான் !
மன்னனுக்கு ரொம்ப சந்தோஷம். "உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? ஏன் ஆறு மாத காலம் உங்களுக்குத் தேவைப்பட்டது? இருப்பினும், நீங்கள் அப்போது எதுவும் வரையாமல், கடைசியில் வரைய அரைமணி நேரம் ஏன் கேட்டீர்களா?" என மன்னர் அந்த முதியவரிடம் கேட்டார்.
"மன்னா, கடந்த ஆறு மாதமாக நான் கோழி, சேவல்களோடு வாழ்ந்தேன் . அவை எப்படி உணவு உண்கிறதோ, அதுபோன்றே நானும் உணவு உட்கொண்டேன். அவை எப்படி நடக்கிறதோ அது போலவே நானும் நடந்தேன். அவை எப்படி தூங்குகிறதோ அது போலவே நானும் தூங்கினேன். நானே கோழியாக ஒன்றிப்போய் கோழியாகவே மாறி விட்டேன். அதற்குப் பிறகுதான் நான் அந்த சேவல் படத்தை வரைந்தேன்" என்று அந்த முதியவர் கூறினார்.
ஆகவே ஒரு காரியத்தில் ஒன்றிப் போதல் என்பது மிகவும் அவசியம். வெற்றியின் ரகசியம் ஈடுபட்ட காரியத்தில் ஒன்றிப் போவதுதான். அது எந்தக் காரியமாக இருந்தாலும் முழு ஈடுபாடும், ஒன்றிப் போவதும் முக்கியம்.
-www.v4all.org
No comments:
Post a Comment