சென்னையில் புகழ் பெற்ற அந்த சாப்ட்வேர் கம்பெனி மிகவும் பரபரப்பாக இருந்தது. இளம் ஆண்கள், பெண்களின் நீண்ட வரிசை. கேப்டன் பிரபாகரன் ரேஞ்சுக்கு செக்யூரிட்டி மிரட்டிக்கொண்டிருந்தார். “இன்டர்வியூவுக்கு வந்தவங்கள்லாம் லைன்ல நில்லுங்க.. பைக்கை வெளியே விடுங்க சார்.
பயோடேட்டா எடுத்து வெளில வச்சிக்குங்க. எப்படி டிரஸ் பண்ணிகிட்டு வருதுங்க பார். இதுங்கள்லாம் எப்படி முன்னேறப் போகுதோ? போன்லாம் உள்ள எடுத்துட்டு போகக் கூடாது சார்” என சுட்டெரிக்கும் வெயிலில் அவர் வேறு சுட்டுக்கொண்டிருந்தார்.
“என்னடா நடக்குது இங்கே” என்று வடிவேலு ஸ்டைலில் எனக்குள்ளேயே கேட்டுக்கொண்டு, கார் கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன். “இன்னிக்கு இன்டர்வியூ சார். அதான்” என்றார் ரிசப்ஷனிஸ்ட்.
அந்தக்கால இன்டர்வியூ
20 வருஷத்துக்கு முன்னாடி ப்ளாஷ் பேக். அப்பாவின் நண்பர் கம்பெனியில் இன்டர்வியூ. அப்பாவின் நண்பர் ஒரு பெரிய சேர்ல உக்காந்திருக்கார். வேலைக்கு வந்தவங்கள்ல சிலர் ரிசப்ஷன்ல உக்காந்திருக்காங்க. கழுத்தில சுருக்கு மாட்டிகிட்ட மாதிரி சிலர் ‘டை நாட்’ கூட சரியாம போடாம, சிலர் தொப்பைக்கு கீழே தொங்கற மாதிரியும், சிலர் மொத்தமா வயிற்றுக்கு மேலயும் ‘டை’ கட்டிக்கிட்டு இருக்காங்க. பல வருடம் கழிச்சி பாலிஷ் போட்ட ஷூ... இப்படித்தான் இன்டர்வியூக்கு வந்திருக்காங்க.
ஒரு இன்டர்வியூன்னா 10-12 பேர் இருந்த காலம். ஓரளவுக்கு கேள்வி இப்படித்தான் கேப்பாங்கன்னு முன்னமே தெரிஞ்சி ரெடி பண்ணிகிட்டு வந்துடலாம். மிஞ்சி மிஞ்சி என்ன கேப்பாங்க? What is your name? What is your background? ஏன் மார்க் கம்மி? 3-4 தலைநகரம் பேர் சொல்லு, இந்த நாட்டோட பிரதமர் யாரு, அவரைப் பத்தி சொல்லுங்க... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்தக்கால இன்டர்வியூ
கவனத்தை தற்காலத்திற்கு கொண்டு வந்து எதிரே கவனித்தேன். இன்டர்வியூவுக்கு வந்திருந்த இரண்டு மாணவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“டேய், ஐஸ் பக்கெட் சேலஞ்ச்ங்கறாங்களே என்னடா அது.?” உடன் வந்த நண்பன் வெறுப்பாய் அவனைப் பார்த்து, “ரொம்ப முக்கியம். என்னடா Succession Plan அப்படின்னா என்னடா? அதை முதல்ல பாரு” என்றான் வேண்டா வெறுப்பாய். மெல்ல இருவரும் முனகிக்கொண்டிருந்தார்கள்.
“ வேலைக்கு ஆள் வேணும்னு Ad பார்த்ததிலிருந்து உயிர் போகுதுடா. நாம ஒரு பயோ டேட்டா ரெடி பண்ணி கம்பெனிக்கு அனுப்புறோம். அதை டைப் பண்ணவன் Careerக்கு பதிலா Carierன்னு டைப் பண்ணி வச்சிருக்கிறான். Career னா உங்களோட வாழ்க்கைப் பாதை. Carier நீங்க ஓட்ற சைக்கிளோட காரியர்னு சொல்லி பயோ டேட்டா திரும்பி வந்திருச்சி.
அப்படியே இந்த பயோ டேட்டா உள்ள போனா, முதல்ல Aptitude Test வைக்கறாங்க. என்னடா இந்த டெஸ்ட்னு பார்த்தா அதுல Quantitative Test யாம், Reasoning Ability, Verbal Ability யாம். இது எல்லாத்திலியும் எனக்கு IQ, EQ எப்படின்னு test பண்ணி பாப்பாங்களாம்.
சரி அதை நான் பல புத்தகங்களை படிச்சி சமாளிச்சிறேன்னு வச்கிக்கோ. அதுக்கப்புறமும் வேலை கிடைச்சிதா.? GD ன்னு ஒண்ணு வைக்கறாங்க. 15 நிமிஷம். 6 பேர். 15க்கும் மேற்பட்ட திறன்களை டெஸ்ட் பண்றாங்க.
பேசணுங்கறாங்க. பேசிட்டே இருந்தாலும் தப்பு, பேசாம இருந்தாலும் செலக்ட் பண்றாங்க. கொஞ்சமா பேசினாலும் செலக்ட் பண்றாங்க. ஒரு வார்த்தை பேசினா இல்லைங்கறாங்க. தலை சுத்துது. இதை தாண்டி நேர்முகத் தேர்வுக்கு போனா tell me about yourself னு ஆரம்பிச்சி கேள்வியை சரமாரியா கேக்கறாங்க. நானும் பல புக் படிச்சி பல சினிமாக்களை பார்த்து.
ஏற்கனவே வேலை கிடைச்சவங்களோட அனுபவத்தை வச்சி பேச ஆரம்பிச்சி, அம்மா, அப்பா, குடும்பம்னு சொல்ல ஆரம்பிச்சா உங்கள பத்தி கேட்டா உங்க அப்பா அம்மாவ யார் கேட்டா? நீ எப்படிப்பட்டவன்? அதைச் சொல்லு. உன் ஆட்டிட்யூட் பத்தி சொல்லுன்னு ஏதோ ஒரு புரியாத பாஷைல கேக்கறாங்க.
அதையும் சமாளிச்சி வேலை கிடைச்சா “Fresh man induction.” communication, thinking skills” அப்படி இப்படின்னு என் ப்ராஜக்ட் மேனேஜர் 15 நாள் ட்ரெய்னிங் கொடுப்பாராம்;. அதையும் முடிச்சி வேலைக்கு சேர்ந்தா மூணு மாசத்துக்கு ஒரு தரம் Skill Assesmentன்ற பேர்ல என்னதான்டா கண்டுபிடிப்பாங்க,,, அப்படின்னு புலம்பித்தள்ளினான் அந்த மாணவன்.
வேலைக்கான சவால்
அது ஒரு தனி மனிதப் புலம்பல் அல்ல. வேலை தேடப்போகும், தேடிக்கொண்டிருக்கும் அனைவரின் கவலை. இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கும் இது ஒரு சவால். இல்லையென்றால் அவர்கள் திவால்.
“ உன் வேலையைச் சிறப்பாகச் செய். உயிருடன் இருப்பவர்களோ, இறந்தவர்களோ, இன்னும் பிறக்காதவர்களோ இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியாது என்னும் அளவுக்குச் சிறப்பாகச் செய்.” மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் சொன்னார். அதைப்போல், வாழ்க்கையை அமைக்க வழி என்ன ?
வேலை கிடைப்பதற்கும், வேலையை திறம்படச் செய்வதற்கும் இன்றைக்கு அனைத்துத் தரப்பினருக்கும் ஒரு திறன் தேவைப்படுகிறது. அடுத்ததாக அதை நாம் அலசுவோம். கட்டுரையாசிரியர் ரைப் அகாடமியின் இணை நிர்வாக இயக்குநர்.
No comments:
Post a Comment