கிராமங்களில் உள்ள இளைஞர்களின் சூட்டிகையையும் சமயோசிதத்தையும் சோதிக்கப் பெரியவர்கள் சில சோதனைகளை வைப்பது உண்டு. அவற்றில் ஒன்று வெற்றிலை- பாக்கு சோதனை.
ஒரு இளைஞன் தான் செய்கிற வேலையில் எவ்வளவு கவனமாக இருப்பான் என்பதை அறிய அவனை வெற்றிலை பாக்கு வாங்கி வருமாறு அனுப்புவார்கள்.
அவன் வாங்கி வந்த முறையை வைத்து அவனது குணாம்சங்களை எடை போடுவார்கள்.
சில இளைஞர்கள் சொன்னதை அப்படியே கேட்டு வெறும் வெற்றிலையையும் பாக்கையும் வாங்கி வருவார்கள். அப்படி வாங்கி வந்தால் அவர்கள் செய்யும் வேலையில் குறைவான கவனமும் பொறுப்புணர்ச்சியும் உள்ளவர்கள். ஏனென்றால் வெற்றிலை போடுவதற்கு அடிப்படைத் தேவையான சுண்ணாம்பை அவர்கள் எடுத்துவர மறந்துவிட்டார்கள்.
எனவே அவர்களைச் சுண்ணாம்பு வாங்க மறுபடியும் கடைக்கு அனுப்புவார்கள். அவன் சுண்ணாம்பு எடுத்துவந்ததோடு சோதனை முடிந்துவிடுவதில்லை.
சுண்ணாம்பு எடுத்து வந்த முறையிலும் சோதனை உண்டு. ஒரு வெற்றிலை பூராவும் சுண்ணாம்பை அள்ளி வைத்துக் கொண்டு வந்தால் அந்த இளைஞன் ஊதாரியானவன்.அவன் செய்யும் வேலையில் சிக்கனமாக இருக்க மாட்டான்.
ஒரு வெற்றிலை போடு வதற்குத் தேவையான அளவில் மட்டுமே சுண்ணாம்பைச் சரியாக எடுத்து வரும் இளைஞனே வேலை செய்வதற்கு பொருத்தமானவன் எனப் பெரியவர்கள் முடிவு செய்வார்கள்.
அவனைத்தான் தாங்கள் செய்ய நினைக்கும் வேலைக்கோ பணியாளர்களைக் கேட்கும் மற்றவர்களுக்கோ பரிந்துரைப்பார்கள். இன்றைய நவீன நேர்காணல்களுக்கு முன்னாடியானதாக நாம் இந்த வெற்றிலை- பாக்குச் சோதனையை எடுத்துக்கொள்ளலாம்.