மென்டர் (வழிகாட்டி) என்னும் ஆங்கிலச் சொல்லுக்கான அர்த்தம் அகராதியில், ஆலோசகர், பயிற்றுநர், ஆற்றுப்படுத்துபவர், குரு, ஆசிரியர், ஆசான் என்றெல்லாம் இருக்கிறது. நம்பிக்கைக்குரிய ஆலோசகர் என்றும் ஒரு விளக்கம் சொல்கிறது. உங்களுக்கு ஒரு வழிகாட்டி வேண்டுமானால் நீங்கள் நல்ல மாணவராகவும் சீடராகவும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்தல்
சீடன் என்றால் சார்ந்துள்ளவர், பொறுப்பை ஏற்பவர் என்றும் பொருள் உண்டு. உங்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களுக்கு, பல்வேறு வழிகாட்டிகளை நீங்கள் வைத்திருக்கலாம். உதாரணத்துக்கு உடல் ரீதியான ஆலோசனைகளுக்கு ஒருவர். ஆன்மிகத்துக்கு ஒருவர். நிதி ஆலோசனைக்கு ஒருவர் என்று வைத்திருக்கலாம். எல்லா அம்சங்களுக்கும் ஒரே நபர் வழிகாட்டியாக இருப்பது சிறப்புதான். ஆனால் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவசியம் அல்ல.
எப்படி ஒரு வழிகாட்டியைத் தேர்ந்தெடுப்பீர்கள்?
1. நீங்கள் கொண்டிருக்கும் ஈடுபாடு அவருக்கும் இருக்க வேண்டும். நீங்கள் பெற அல்லது அனுபவிக்க விரும்பும் ஒன்றை அவரும் விரும்ப வேண்டும். உதாரணமாக, நீங்கள் இசைக்கருவி வாசிப்பவராக இருப்பின் அவரும் அதில் தேர்ந்தவராக இருப்பது அவசியம்.
2. அவர் உங்களது வழிகாட்டியாக இருக்க ஒப்புக்கொள்ள வேண்டும்.
3. வேண்டாம், கூடாது என்பதை உங்களிடம் சொல்லக்கூடியவராக இருக்க வேண்டும்!
4. ஒவ்வொரு அம்சத்திலும் நீங்கள் மதிக்கத்தக்க ஒரு வாழ்க்கை முறை அவரிடம் இருக்க வேண்டும்.
5. எந்த விவகாரமாக இருந்தாலும் நீங்கள் நேர்மையாக இருக்கும் ஒரே இடமாக அவர் இருக்க வேண்டும்!
அவசியம்
ஒரு வழிகாட்டியை வைத்திருக்க வேண்டியதன் அவசியம் வெற்றியாளர்களுக்குத் தெரியும். அந்த வழிகாட்டி, உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் தெரிந்தவராக இருக்க வேண்டும். நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்துப் போற்றும் ஒருவர் உங்களது வழிகாட்டியாக ஆக முடியாது. உங்களால் அணுகக்கூடியவராக இருக்க வேண்டும்.
நீங்கள்தான் உங்கள் குருவைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். அவர் உங்களைத் தேர்ந்தெடுப்பதில்லை. உங்களை ஒருவர் தேடிவந்து தனது சிறகுக்குள் வைத்து வழிநடத்த விரும்பலாம். ஆனால் நீங்கள் விரும்பாதவரை அவர் உங்களது வழிகாட்டி அல்ல.
உங்களது வழிகாட்டி, அந்தப் பணியை ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் ஏதேனும் தவறான செயலில் இறங்கும்போது அந்த இடத்திலேயே அதைச் சுட்டிக்காட்டி சரிசெய்யக்கூடியவராக அவர் இருத்தல் வேண்டும். ஏனெனில் ஒரு வழிகாட்டி கூறும் அறிவுரை, திருத்தம் அல்லது விமர்சனத்தை எப்போது நீங்கள் விருப்பமில்லாமல் கேட்கத் தொடங்குகிறீர்களோ அப்போது அவர் உங்கள் குருவாகத் தொடர மாட்டார்.
No comments:
Post a Comment