அந்த ரயிலில் ஒரு மனிதர் கரெக்டா நேரந்தவறாம வருவார். அந்த அரை மணி நேரப் பயணத்தில் மக்களை அலசி, நாட்டை அலசி, உலகத்தை அலசி கடைசியா அவருடைய ஸ்டேஷன் வந்ததும் இறங்கிவிடுவார். மறுபடியும் சாயந்திரம் ஐந்தரை மணிக்கு கரெக்டா ரயில் பிடிச்சு வீட்டுக்குப் போய்டுவார்.
அதே ரயிலில் இன்னொரு பெர்சனாலிட்டியைப் பார்த்தேன். அவர் அணிந்திருந்த காலணியிலிருந்து பயன்டுத்திய செல்போன் வரை அனைத்தும் அவர் வாழ்க்கைத் தரம் சற்றே உயர்ந்திருப்பதை படம் பிடித்துக் காட்டின.
இருவரும் நண்பர்கள் போல் தினமும் பேசிக்கொண்டே வரு வார்கள். ஆனாலும் முதலாமவர் இரண்டாமவரின் வாழ்க்கைத்தர முன்னேற்றம் பற்றி யோசித்ததாகவோ தன்னுடைய வாழ்க்கைத்தரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துப் பேசியதாகவோ தெரியவில்லை.
எந்திரன் ஆளுமை
முதலாமவர்தான் நாம் அலச வேண்டிய எந்திரன் டைப் ஆளுமை கொண்டவர். இத்தகைய பெர்சனாலிட்டி உடையவர்கள் தன்னிடம் இருப்பதை வைத்துத் தன்னிறைவு அடைந்ததாக நினைத்துக்கொண்டு, இருப்பதை வைத்துக்கொண்டு வாழப் பழகிவிடு கிறார்கள்.
இந்த மாதிரியான வாழ்க்கை சரியா, தவறா என்ற தர்க்க்கத்துக்குள் நாம் போக வேண்டாம். இத்தகைய பெர்சனாலிட்டி உள்ள மனிதர்களை நம் அலுவலகத்திலோ வெளியிலோ வீட்டிலோ கையாள வேண்டிய நேரத்தில் அதை எப்படிச் செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.
இந்த மாதிரி பெர்சனாலிட்டி உடையவர்கள் ஆபீசுக்குச் சரியான நேரத்துக்கு வருவார்கள். ப்ரேக் டைம், லஞ்ச் டைம், ஆபீஸ் முடியற டைம் எல்லாம் தெரிஞ்சுக்க நீங்க வாட்ச் பார்க்கணுங்கிற அவசியம் இல்லை. இவர் சீட்டப் பார்த்தா போதும். எல்லாம் தெரிஞ்சுடும். சீட்டில் இருக்கும் நேரத்தில் கொடுத்த வேலையை கரெக்டா செஞ்சு முடிச்சுடுவார். எதுவும் வேலை கொடுக்கலைன்னா சும்மா இருக்கற வேலையை கரெக்டா செய்வார். வேலையைத் தேடி அவர் போக மாட்டார். வேலை அவரைத் தேடி வந்தால் செய்வார்.
போதுமென்ற மனம்
இத்தகைய பெர்சனாலிட்டி உடை யவர்கள் அதிகம் பேசுவார்கள், ஆனால் அது ஆபீஸ் சம்பந்தப்பட்ட விஷயமா இருக்காது. புதுசா ஒரு வேலை கொடுத்தா அது அவர் ஏற்கனவே செஞ்ச வேலையோட கிளை வேலையா இருந்தா அதை செய்ய முயல்வார். புது வேலையா இருந்தா தன்னால் செய்ய முடியாது என நாகரிகமாகச் சொல்லிவிடுவார்.
இவர்கள் பத்து வருஷமா ஒரே ஆபீஸுக்குப் போவார்கள். ஒரே தடத்தில் போவார்கள். புதிய ஆபீஸுக்குப் போகவோ புதிய தடத்தில் பயணம் செய்யவோ விரும்ப மாட்டார்கள். ‘லைப் ல எதுக்கு ரிஸ்க்?’ என நினைப்பார்கள். வீட்டிலும் ஆபீஸிலும் கொடுத்த வேலையைத் தவிர, வேறு எந்த வேலையும் செய்ய மாட்டார்கள். ஒரே மாதிரியான வாழ்க்கைத் தரத்திற்குப் பழக்கப்பட்டவர்கள். “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்பதே இவர்கள் தாரக மந்திரம்.
கண்ணோட்டம்
இன்று பெரும்பாலான மக்கள் போதும்கிற மனநிலைக்குத் தள்ளப்படுவது வேலையைப் பற்றிய அவர்களுடைய கண்ணோட்டம்தான். வேலையையைப் பற்றிய கண்ணோட்டத்தில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன.
1. செயல்முறை (Process)
2. பார்வை (Perception)
செயல்முறை என்றால் ஒரு விஷயத்தைச் செய்வதற்கான செயல் திட்டம் (Action Plan). உதாரணத்துக்கு நான் ஒரு ஓவியன். ஒரு ஓவியம் வரைய நினைக்கிறேன். என்ன மாதிரி ஓவியம் வரையலாம்? நான் பார்த்த காட்சிகளை வரையலாமா, அல்லது என் கற்பனையில் வரும் ஏதோவொரு காட்சியை வரையலாமா என முடிவு செய்ய வேண்டும். ஓவியம் வரையத் தேவையான பொருட்கள் எல்லாம் உள்ளனவா எனப் பார்த்து சரியாக எடுத்துவைக்க வேண்டும். இதைத்தான் செயல் திட்டம் என்பார்கள்.
இப்படியாக வரைந்த ஓவியத்தின் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்பதைப் பற்றி யோசிப்பது பார்வை. ஒரு செயலின் நோக்கம், பயன் மதிப்பு, தாக்கம் ஆகிய அனைத்தையும் தழுவிய பார்வை. இயந்திரம் மாதிரி வேலை செய்பவர்கள் தங்கள் வேலையை இத்தகைய விரிவான கண்ணோட் டத்தில் பார்ப்பதில்லை.
கையாளுதல்
இவர்களைக் கையாளும் போது இவர்களுடைய இத்தகைய மனநிலையை மனதில் நிலை நிறுத்திக்கொண்டு நாம் கையாள வேண்டும். எல்லை: ஓவர்டைம், இன்சென்டிவ், போனஸ் போன்ற விஷயங்கள் இவர்களைப் பெரிதாகப் பாதிக்காது. எனவே, அவர்கள் கூடுதல் முனைப்புடன் எந்த வேலையையும் செய்ய மாட்டார்கள். எந்த வேலைக்காக நியமிக்கப்பட்டார்களோ, அதைத்தவிர வேறு வேலைகளை அவர்களுக்கு கொடுப்பதைத் தவிர்க்கலாம்.
தெளிவு: அவர்களை வேலையில் நியமிக்கும்போதே அவர்கள் செய்ய வேண்டிய வேலையைத் தெளிவாக விளக்கிவிட வேண்டும். அந்த வேலையைச் செய்வதற்கான பயிற்சிகளையும் அவருக்குக் கொடுக்க வேண்டும்.
புதிய வேலை: திடீரென நிறுவனத்துக்குத் தேவை என்று வேறு துறை சார்ந்த வேலைகளை அவர் மீது திணிக்கக் கூடாது.
வசதிகள்: அவர் தேவையான வசதிகளைச் செய்துதரச் சொல்லிக் கேட்க மாட்டார். ஆனால், செய்துகொடுத்தால் வாங்கிக்கொள்வார். தேவையான விஷயங்களைச் செய்து கொடுத்தால் நிறுவனத்தின் வேலையை, அவர் நல்லபடியாகச் செய்து முடிப்பார்.
குடும்பம்: குடும்பம் பற்றி அதிகம் பேச மாட்டார். அதனால் நாமும் அதைப் பற்றிப் பேச வேண்டியதில்லை.
உணர்ச்சி: இவர்களை உணர்வுபூர்வமாகக் கையாள வேண்டாம். நடைமுறை சாத்தியங்களை மனிதில் கொண்டு கையாள வேண்டும்.
எந்திரன் படத்தின் சிட்டி ஞாபகம் வந்ததா?
No comments:
Post a Comment