பன்னாட்டு நிறுவனங்களின் மேலாளர்களாகப் பணியாற்ற இந்தியர்கள் சிறப்புத் தகுதி படைத்தவர்கள். காரணம் நம் கலாச்சாரத்தின் பன்முகத்தன்மைதான். பலதரப்பட்ட மனிதர்களையும் பலதரப்பட்ட வியாபாரச் சூழல்களையும் அனுசரித்துப் போகும் பக்குவம் நம்மவர்களுக்கு இயல்பாகவே உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
கம்பெனியில் பன்முகத்தன்மை
1990 -களில் நான் ஒரு கார் கம்பெனியில் பணியாற்றினேன். அங்கு ஆள் எடுக்கும்போதுதான் கலாச்சாரப் பரிவர்த்தனை என்ன என்பதை முதல் முறையாகக் கண்டேன். தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலிருந்தும் ஐ.டி.ஐ முதல் பிஸினஸ் ஸ்கூல் வரை மாணவர்களைத் தேர்வு செய்வது என் வேலை.
உடன் வந்த மேலாளர்கள் அனைவரும் வட இந்தியர்கள். யாருக்கும் தமிழ் தெரியாது. நம் பசங்களுக்கும் ஆங்கிலம் வராது. இறுதித் தேர்வுக்கு வரும் கொரியா நாட்டவர்களுக்கு இரண்டும் தெரியாது. மொழி மட்டுமா, உணவு, கலாச்சாரம் என அனைத்திலும் வேறுபாடுகள்.
கடைசியில் தேர்ந் தெடுத்தவர்களை இருங்காட்டுக் கோட்டைக்கு வரவழைத்து பயிற்சி அளித்து, மீனம்பாக்கத்தில் விமானம் ஏற்றினோம். சியோல், உல்சான், பூசான் என கொரியாவின் நகரங்களில் 6 மாதங்கள் இருந்த பின் தான் சென்னையைப் பலர் முதல் முறையாகப் பார்த்தார்கள்.
இவர்கள் சாப்பிட நம்ம ஊர் சமையல் கலைஞரை கொரியாவில் பணியில் அமர்த்தினோம். விமானத்தில் காய்ந்து போய் இறங்கினால் மணக்க மணக்க புளியோதரையும் எண்ணெய் வடியும் அப்பளமும் இன்றும் எங்கள் நினைவில் நீங்காதவை. சாம்பாரை மொண்டு மொண்டு குடித்த ஆட்களும் உண்டு.
ஆச்சரியம் என்னவென்றால், அதே ஆட்கள் திரும்பி வரும்போது கொரிய உணவையும் கொரிய மொழியையும் கொரியக் கலாச்சாரத்தையும் மிக இயல்பாக உள்வாங்கிக்கொண்டார்கள். குரூப் ஃபோட்டோவுக்குப் புன்னகைக்க “சீஸ்” என்பதற்கு “கிம்சி” என்றார்கள்!
பன்முக இசைவே ஒரு திறனாய்…
இது பன்னாட்டு கம்பனிகள் வந்ததால் ஏற்பட்ட மாற்றங்கள் அல்ல. இயல்பாகவே நம் சமூகத்தில் அனைத்துப் பிரிவு மக்களையும் அணைத்துச் செல்லும் கலாச்சாரம் இருக்கிறது. சென்னையில் ஒரு தெருவை எடுத்துக்கொண்டால் அங்கு நாயரின் தேனீர் கடை, மார்வாடியின் அடகுக் கடை, இஸ்லாமியரின் மெத்தைக் கடை, சிந்திக்காரரின் இனிப்புக்கடை என இருப்பதை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்தியாவின் பன்மொழித் தன்மை நம் இசைவுத்தன்மையை பதப்படுத்திருக்கிறது.
இதனால் Global managers ஆக செயல்படுவதற்கு நம் இந்தியர்கள் அதிகம் தகுதி படைத்தவர்கள் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. நிறுவனங்களில் இன்று Diversity என்ற ஆங்கிலச் சொல் பெரும் புழக்கத்தில் உள்ளது. உலக அளவில், அதற்கான பயிற்சிகளும் நடைபெறுகின்றன.
இனி வருங்காலங்களில் வேலைத் தேர்வில் கூட இந்த பன்முக கலாச்சாரத் தன்மை ஒரு திறனாய் பாவித்து சோதனை செய்யப்படும் என்பது என் யூகம்.
சிறுக்கும் எண்ணம்
ஆனால், நிதர்சனத்தில் இன்று நம்மில் பலர் இந்தப் பன்முகக் கலாச்சாரத்தை மதிப்பதில்லை. கலாச்சாரப் பரிவர்த்தனை செய்ய முயல்வதில்லை. அது நம் தனிச்சிறப்பு என்பதை மறந்து விட்டோம்.
அதை விடப் பெரும் பிரச்சினை நாம் நம் வேர்களை மறந்து வருவது. தாய் மொழியில் கல்வி என்றில்லை, எதையுமே படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. பாரம்பரியம் பற்றியெல்லாம் கவலையில்லை. வரலாறு தெரியாது. நம் முன்னோர்கள் பற்றிய அடிப்படைத் தகவல்களைக்கூடத் தேடிப்போவதில்லை.
தொழில் கல்வியும் ஆங்கிலமும் போதும் என்ற எண்ணம் ஒரு தட்டையான வாழ்க்கை முறைக்கு நம்மவர்களை தள்ளிவிட்டிருக்கிறது.
பப்ளிக் எக்ஸாம் என்றால் விளையாட்டை நிறுத்திவிடுகிறோம். ப்ரபஷனல் கோர்ஸ் என்றால் அவர்களே மொழிகளை நீக்கிவிடு கிறார்கள். பணம் பண்ண உதவாத எந்த அறிவையும் சிறப்பாகக் கொண்டாடுவதில்லை. இதனால் நம் எண்ணமும் செயலும் சிறுத்துக் கொண்டு வருகின்றன.
வேர்களை மறப்பதா?
பல இன்டர்வியூகளில் தங்களின் சொந்த ஊர் பற்றி ஒன்றுமே சொல்லத் தெரியாத பலரை சந்திக்கிறோம். குறிப்பாக, அயல் நாட்டவர்கள் முன்னிலையில் தங்கள் வேர்களை அறியாதவர்கள் (அறிய முயலாதவர்கள் ) மேம்போக்காக பதில் கூறுகையில் அவர்கள் நல்ல எண்ணத்தை ஏற்படுத்துவதில்லை.
இதற்குக் காரணம் நேரக் குறைவோ, வாய்ப்பின்மையோ அல்ல. மனப்பான்மைதான். “எதுக்கு தேவையில்லாததை தெரிஞ்சிகிட்டு?” என்ற எண்ணம்தான் உண்மையான காரணம்.
யு.பி.எஸ்.சி போன்ற போட்டித் தேர்வுகளுக்காகப் படிப்பவர்கள் பொது அறிவு தேர்வு எழுதுவதற்காக எல்லாத் தகவல்களை திரட்டிப் படிப்பார்கள். விரல் நுனியில் வைத்திருப்பார்கள். காரணம் தேர்வில் ஜெயிக்க. இன்று கார்ப்பரேட் வேலைகளுக்கு தொழில் தெரிந்தால் போதும் என்கிற எண்ணம் தான்
பொது அறிவைப் போக்கிவிட்டன. இதில் விசித்திரம் என்னவென்றால் இன்று கூகுளும் விக்கிபீடியாவும் உங்கள் தேடலை துரிதப்படுத்தியுள்ளன. ஆனால் அவசரமாகத் தேவைப்படாத எதையும் பலர் நாடிப்போவதில்லை.
பன்முக கலாச்சார நுண்ணறிவு
உங்கள் கலாச்சாரத்தின் குறுக்கு வெட்டு தெரியுமா? எத்தனை பிற கலாச்சாரங்கள் பற்றி உங்களுக்குத் தெரியும்? மற்ற கலாசாரங்களி லிருந்து எவ்வளவு விஷயங்களை உள் வாங்கியிருக்கிறீர்கள்?
எவ்வளவு விஷயங்களில் பிறரை பாதித்திருக் கிறீர்கள்? யோசியுங்கள். பன்முக கலாச்சார நுண்ணறிவு உங்கள் வேலைத் தேர்விலும், தொழில் வாழ்க்கையிலும் பயன்படும்.
“என்ன செய்யலாம் இதற்கு? ” என்று கேட்பவர்களுக்கு ஒரு ஹோம் ஒர்க்.
தமிழ் நாட்டில் வாழ்பவர்களுக்கு இது குறிப்பாகப் பயன்படும்.
உலகப் பெருங்கிராமம்
கீழ்க்கண்ட ஊர்களைப் பற்றி என்னவெல்லாம் தெரியும் என்று யோசியுங்கள். ஸ்ரீவில்லிப்புத்தூர், கீழ்வெண்மணி, கங்கைகொண்ட
சோழபுரம், சித்தன்னவாசல், சுசீந்திரம், காரைக்கால், பத்மநாபபுரம் மற்றும் செஞ்சி.
இவர்களைத் தெரியுமா என்று பாருங்கள்.
அகிலன், ஆத்மாநாம், பால தண்டாயுதம், கக்கன், தாள முத்து நடராசன், சுந்தர ராமசாமி, டி.கே.பட்டம்மாள், மணியம் செல்வன், வாசன், சத்தியமூர்த்தி மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன்.
முதலில் நம் வேர்களை அறிந்து கொள்வோம். நம் கலாச்சாரம் அறிவோம். பின் பிற கலாச்சாரங்கள் அறிவோம்.
நாம் உண்ணும் உணவில் எத்தனை கலாச்சாரங்கள் கலந்திருக் கின்றன என்று ஆராய்ந்து பாருங்கள். உலகம் எனும் பெரும் கிராமத்தின் ஒருங்கிணைப்பு தெரியும்!