Tuesday, January 20, 2015

மென்திறன் எனும் மேன்மைத் திறன்



ஒவ்வொரு இளைஞருக்கும் கனவும் குறிக்கோளும் இருக்கும். இந்த நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும், நமது படிப்புக்கு ஏற்றாற்போல வேலை கிடைக்க வேண்டும் என்றெல்லாம் தீர்மானித்திருப்பீர்கள். அதே நேரம் நிறுவனங்களும் இப்படிப்பட்ட இளைஞர்கள்தான் வேண்டும் என்று வழிமுறைகளை நிர்ணயித்திருப்பார்கள்.
ஒரு இளைஞரின் வாழ்க்கை கல்லூரியில் தொடங்கி, அவர் வேலை செய்யப்போகும் நிறுவனங்களில் மேலும் விரிவடைகிறது. இந்தச் சமூகத்தில் அவர்களுக்குக் கிடைக்கப்போகிற அங்கீகாரம் அவர்கள் செய்யப்போகும் வேலையைப் பொறுத்தும் அமையும்.
வேறுபட்ட தகுதிகள்
பல்வேறுவகையான தகுதிகள் உங்களுக்கு வேண்டும் என்றும் நிறுவனங்கள் இன்று எதிர்பார்க்கின்றன. உதாரணமாக, ஒரு பெரிய நிறுவனத்துக்கு 30 இளைஞர்கள் வேலைக்கு வேண்டும். உங்கள் கல்லூரிக்கு மாணவர்களைத் தேர்வு செய்ய வருகிறார்கள். அங்கே 50 மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் நல்ல மதிப்பெண்களை பெற்றவர்கள். நல்ல தொழில்ரீதியான அணுகுமுறையும் அவர்களுக்கு இருக்கிறது.
இந்த நிலையில் எப்படி 50 பேரிலிருந்து 30 பேரைத் தேர்வு செய்வது? அந்த ஐம்பது பேரும் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்தச் சூழலில் நிறுவனங்கள் இந்த 50 மாணவர்களிடம் எவருக்கெல்லாம் கல்வியைத் தவிர, வேறு திறமைகள் இருக்கின்றனவா என்று பார்ப்பார்கள். அவர்களைத்தான் வடிகட்டி தேர்ந்தெடுக்கிறார்கள்.
மென்திறன்
அந்த இதர தகுதிகளைத்தான் மென் திறன் என்று சொல்கிறார்கள். அது என்ன மென் திறன்?
நல்ல தொடர்புடைய பேச்சுத் திறமை, தனித்தன்மை கொண்டு விளங்குதல், கூர்ந்து கவனித்தல், வித்தியாசமான சிந்தனை கொள்ளு தல் உள்ளிட்டவை மென்திறனில் அடங்கும்.
தொடர்பு கொள்ளும் பேச்சுத் திறனை எடுத்துக்கொள்வோம்.
ஒரு மாணவர் நடைமுறைக் கல்வியில் சிறந்தவராக இருக்கலாம். நன்கு படித்திருக்கலாம். பாடப்படிப்பில் சிறந்தவராக இருக்கலாம்.ஆனால் நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்குச் சொல்லத் தெரிந்தால்தான் அந்தத் திறமை வெளிப்படும். பல மாணவர்கள் கேள்வி கேட்கப்படும் நேரத்தில் பதில் சொல்லத் தெரியாமல் தவிப்பார்கள். ஆனால் அதையே செய்து காட்டச் சொன்னால் அருமையாகச் செய்வார்கள். துரதிர்ஷ்டம் என்னவென்றால் அதை அவர்கள் பேசி நேர்முகத் தேர்வில் புரியவைக்கத் தவறிவிடுகிறார்கள்.
வெறும் பேச்சுக்கும், தொடர்புகொள்ளும் பேச்சுத் திறனுக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு திரைப்படத்தையோ கிரிக்கெட்டையோ பார்க்கிறோம். அவற்றின் காட்சிகள் பற்றி விவாதிக்கிறோம்.
“மங்காத்தா படம் பார்த்தியா? தல என்னமா ஸ்டெப், போட்டார் பாத்தியா?”
“வோர்ல்ட் கப் பைனல்ல குலசேகராவின் பந்தை சிக்சர் அடிச்சிட்டு நம்ம தோனி ஒத்த கையில பேட்டைச் சுத்துவார் பாரு? என்ன கெத்துடா?”
இப்படிப் பல விஷயங்களைப் பேசுகிறோம். விவாதிக்கிறோம். மற்றவர்களைப் பற்றி வம்பு பேசுகிறோம். அவை பொழுதுபோக்குவதற்காகப் பயன்படுமே தவிர, ஒரு தீர்வை உண்டாக்கப்போவதில்லை.
பல உணர்வுகள்
ஆனால் கம்யூனிகேஷன் என்பது அப்படியல்ல. ஒரு தீர்வை நோக்கிப் பேசப்படும். பேசுபவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் ஒரு உறவை உண்டாக்கும். நமக்கும், நம் குடும்பத்துக்கும் இடையே, ஒரு மாணவர், ஆசிரியருக்குமிடையே, அலுவலகத்தில் பணிபுரிகின்றவர்களுக்கு இடையே என்று பல்வேறுவிதமாக இந்தத் தொடர்பு விரிவடைகிறது.
பொதுவாக கம்யூனிகேஷன் என்பது அன்பு, கட்டளை, வேண்டுகோள், அதிகாரம், பொறுப்பு இப்படிப் பலவித உணர்வுகளை வெளிப்படுத்துவது. தன்னுடைய தேவைகளை மற்றவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள ஒவ்வொருவருக்கும் உதவும் ஒரு பெரிய சாதனமே கம்யூனிகேஷன். இதுவே மென் திறனில் மிக முக்கிய பகுதி.

No comments:

Post a Comment