Tuesday, January 20, 2015

உங்களைத் தேர்வு செய்பவர் நீங்களே!



சிறந்த விற்பனையாளனாகத் தொடர்ந்து பெருமை பெற்றுவரும் உங்கள் சகாவுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?
உங்கள் தம்பி விளையாட்டில் பிரமாதமாக இருக்கும்போது நீங்கள் ஏன் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்க்கிறீர்கள்?
உங்களுக்குத் திறன்களும் பிரமாதமான புத்திசாலித்தனமும் உண்டு. ஆனால் நீங்கள் இன்னும் அவற்றைப் பயன்படுத்தத் தீர்மானிக்கவில்லை. கடும் பயிற்சியில் இறங்கவோ, உங்கள் நம்பிக்கையை வளர்த்தெடுக்கவோ செய்யவேயில்லை. அதனால் நீங்கள் கடிவாளத்தை விடாமல் இருக்கிறீர்கள்.
நான்சியின் கதை
நான்சி என்ற ஒரு பெண்ணின் கதையைக் கேளுங்கள். அவள் 9 வயதில் அம்மாவால் கைவிடப்பட்டாள். தனது ஆறு வயது, மூன்று வயது தம்பிகளுக்கு அன்னையாக மாறினாள். அவள் தினசரித் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. உணவைத் திருடித் தம்பிகளுக்குக் கொடுக்க வேண்டி இருந்தது. அவர்களுடன் விளையாடவும் வேண்டும். வீட்டு வேலைகளைச் செய்யுமாறு நான்சியிடம் கத்திவிட்டு அவளது குடிகார அம்மா, வெவ்வேறு ஆண்களுடன் பின்புற அறைக்குள் சென்று மறைந்துவிடுவாள்.
ஒரு கட்டத்தில் குழந்தைகள் பாட்டி வீட்டுக்குச் சென்று வாழத் தொடங்கினார்கள். பாட்டி இறந்தவுடன் வேறு வேறு அநாதை விடுதிகளுக்கு அனுப்பப்பட்டனர்.
நான்சி நூலகங்களுக்குப் போனாள். அவளால் எவ்வளவு முடியுமோ அத்தனை நூல்களைப் படித்தாள். அவள் பள்ளிக்குச் சென்றபோது கற்றுக்கொடுக்கப்பட்ட பாடங்களை ஆசையோடு படித்தாள். ஆசிரியர்களை விஞ்சினாள். மற்ற மாணவர்களைவிடத் தான் சிறந்த மாணவி என்று நான்சிக்குத் தெரியும்.
புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணராகத் தன்னைப் பாவித்துக்கொண்டாள். நிறைய ஏழைக் குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றுவதாக நினைத்தாள். சிறந்த ஆசிரியராக மாறித் தன்னைப் போன்ற எண்ணற்ற மாணவர்களுக்கு உதவுவதாக நினைத்தாள்.
அவள் என்னவானாள்? சிறந்த ஆசிரியையாகவும் பாடகியாகவும் விளங்கினாள். ஏழை மற்றும் வறிய நிலையில் உள்ளவர்களின் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டுவர நான்சியால் முடிந்தது.
எப்படி இந்த உயர்வு?
இப்படியான வெற்றியைப் பார்க்கும் யாருக்கும் அதிசயமாக இருக்கும். ஆன்மிக ரீதியாகவும், உடல் ரீதியாகவும், உணர்வு அடிப்படையிலும் அவர்கள் முழுமையாகக் குணமடைந்து அதைச் சாதிக்க முடிந்தது என்பதும் வியப்பாக இருக்கும். இத்தனை மோசமான அனுபவங்களைத் தாண்டி ஒருவர் எப்படி உயர்ந்த இடத்துக்குச் செல்ல முடிகிறது?
அத்தகைய பயங்கரங்களைச் சந்தித்தவர்கள் கோபம், வெறுப்பு அல்லது மன அழுத்தமுடையவர்களாக இருப்பார்கள். அதனால்தான் நான்சியின் சகோதரர்களால் அந்தச் சூழ்நிலையிலிருந்து தப்பிக்க முடியவில்லை. ஒருவர் தற்கொலை செய்தார். இன்னொருவர் மதுவுக்கு அடிமையாகி, வீடற்றவராகத் திரிந்தார்.
காரணி
சூழ்நிலைகளைத் தாக்குப்பிடித்து உயர்பவர் என்ன செய்கிறார்? பதில் மிகவும் எளிமையானது. இன்னல்களிலிருந்து மீண்டு வெற்றிபெற்றவர்களுக்கும், துயரத்தின் குழிகளில் வீழ்ந்து அவதிப்படுபவர்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான் இருக்கிறது. புத்துயிர்ப்பு பெறுவதற்கான தனிநபர் ஒருவரின் போராட்டம்தான் அது.
இதைத்தான் நான் மீ ஃபேக்டர் (நான் என்னும் காரணி) என்கிறேன். எனது வாழ்க்கையிலிருந்து உதாரணம் தருகிறேன். என் வீட்டில் பிறந்த மூன்று பையன்களில் நான்தான் கடைசி. எனது பெரிய அண்ணன் லாரன்ஸ் (லாரி) என்னைவிட இரண்டு வயது மூத்தவன். வில்லி என்னைவிட 11 மாதங்கள் மூத்தவன். நாங்கள் எல்லாரும் ஒரே விதமான சூழ்நிலைகளில்தான் வளர்க்கப்பட்டோம். தந்தை, தாய் எல்லாரும் ஒன்றுதான். ஆனால் ஒரே வித்தியாசம் அந்த யு ஃபேக்டர்தான். நாங்கள் மூவரும் எங்கள் சூழ்நிலைக்கு வெவ்வேறு விதங்களில் எதிர்வினை யாற்றினோம்.
வாய்ப்பும் தேர்வுகளும்
என் பெரிய அண்ணன் லாரி, தற்போது மூன்றாவது முறையாகச் சிறையில் இருக்கிறார். தொடர் கொள்ளைக் குற்றத்திற்காக 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவர் அவர். எனது இரண்டாவது அண்ணன் வில்லி, திருச்சபையில் 18 வயதில் சேர்ந்தார். தற்போது அரசு ஜூனியர் உயர்நிலைப்பள்ளியில் முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கிறார். அவருக்கு 30 வயதாகப் போகிறது.
நான் ஆயிரக்கணக்கான மக்களிடம், உண்மையான மன, ஆன்மிக, உடல் வளத்தை அடையும் அனுபவம் குறித்து ஊக்குவிக்கவும் தன்னிறைவு பெறவும் ஆண்டுதோறும் பேசிக்கொண்டிருக்கிறேன். ஒரே சூழ்நிலையில் வளர்ந்த மூன்று சகோதரர்கள் எப்படி வெவ்வேறு எதிர்காலத்தை அடைந்தார்கள்? மீ ஃபேக்டர்தான் அதற்குக் காரணம்.
நான் எனது இரண்டு சகோதரர்களையும் முழுமையாக நேசிக்கிறேன். வில்லி தனது தேர்வுகளை இளம்வயதிலேயே மேற்கொண்டுவிட்டான். அவன் தனது சூழலின் விளைபொருளாக மாற மறுத்துவிட்டவன். நியாயத்தின் பக்கம் நிற்க எப்படியோ வில்லி தீர்மானித்துவிட்டான். எங்களுக் கிருந்த பல சபலங்களுக்கு அவன் ஆட்படவேயில்லை.
ஒரே விதமான தேர்வுகளை மேற்கொள்ளும் ஒரே விதமான வாய்ப்புகள் எங்களிடம் இருந்தன. ஆனால் எங்களது முடிவுகளும் அதற்கெனச் செயல்பட்ட விதமும்தான் அவரவர் தேர்வுகளை உருவாக்கின. நாங்கள் யாரும் ஒருவரைவிட ஒருவர் மேம்பட்டவர் அல்ல. ஆனால் நாங்கள் ஒருவருக்கொருவர் வித்தியாசமானவர்கள். நான் ஒருவரைத் துப்பாக்கி முனையில் மிரட்டிக் கொள்ளையடிக்கவில்லை என்றாலும் சிறைத் தண்டனையைப் பெறுவதற்கான காரியங்களில் பங்கேற்றிருக்கிறேன். நான் பிடிபடுவதற்கு முன்பே என்னை மாற்றிக்கொள்ள முடிவுசெய்தேன்.
எங்கள் மூன்று பேருக்கும் பொதுவான அம்சங்கள் நிறைய உண்டு. மூவரும் மிகுந்த நேசம் கொண்டவர்கள். எங்களுக்குச் சட்டை இல்லாவிட்டாலும், இல்லாதவருக்குக் கொடுக்கக்கூடியவர்கள். எங்கள் பெற்றோருக்கும் அந்த இயல்பு உண்டு. நாங்கள் பேசுவதிலும், புரியும் செயல்களிலும் ஒற்றுமை உண்டு. தவறிலிருந்து சரியானதைத் தீர்மானிக்கும் அதே வாய்ப்புகள் எங்களுக்கு இருந்தன. நாங்கள் மேற்கொண்ட தேர்வுகள்தான் எங்களை வித்தியாசப்படுத்தின. ஒரு நபர் தன் முன் இருக்கும் சாத்தியங்களுக்குச் செய்யும் எதிர்வினைதான் அவரது தனிப்பட்ட தேர்வாகிறது. அதைத்தான் நான் மீ ஃபேக்டர் என்கிறேன்.

No comments:

Post a Comment