நேர்முகத் தேர்வு தொடங்கவிருக்கிறது. உள்ளுக்குள் பதற்றம் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாதபடி அமர்ந்திருக்கிறான் ஞானசேகர். சில நொடிகளுக்குப் பிறகு தேர்வாளர்களில் ஒருவர் பேசத் தொடங்குகிறார்.
தேர்வாளர் 1 – உங்க பெயர்?
ஞானசேகர் - ஞானசேகர் சார்.
தேர்வாளர் 1 – ஞானேஸ்வரா?
ஞானசேகர் - இல்லை. ஞானசேகர்.
தேர்வாளர் 2 – என்ன படிச்சிருக்கீங்க?
ஞானசேகர் – (தேர்வாளர்கள் கையில் தனது தன்விவரக் குறிப்பு இருப்பதைப் பார்த்து) - என்னுடைய சி.வி.யிலேயே அதைக் குறிப்பிட்டிருக்கேன் சார்.
தேர்வாளர் 2 – அதை உங்க வாயாலே ஒருமுறை சொல்லுவீங்களா, மாட்டீங்களா?
ஞானசேகர் - நான் EEE படிச்சிருக்கேன் சார்.
தேர்வாளர் 1 – ECE-யா?
ஞானசேகர் - இல்லை சார். EEE
தேர்வாளர் 1 – நாங்க எந்த வேலைக்காக உங்களை இன்டர்வியூ செய்றோம்னு தெரியுமில்லையா?
ஞானசேகர் - நிச்சயம் தெரியும் சார்.
தேர்வாளர் 1 – இந்த வேலை சுலபமா செய்யக்கூடிய வேலை இல்லை.
ஞானசேகர் - தெரியும் சார்.
தேர்வாளர் 2 – தீர்மானங்களை உடனுக்குடன் எடுக்க வேண்டியிருக்கும்.
ஞானசேகர் - தெரியும் சார்.
தேர்வாளர் 1 – உங்களால் பிரஷருக்கு நடுவே வேலை செய்ய முடியுமா?
ஞானசேகர் - முடியும். சார், நான் ஒரு கதை சொல்லவா?
(தேர்வாளர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கின்றனர். பிறகு அவர்களில் ஒருவர் ஞானசேகரைப் பார்த்து ‘சொல்லு’ என்பது போலக் கையசைக்கிறார்.)
ஞானசேகர் - மூன்று சின்ன கதாபாத்திரங்கள். முதலாவதில் கேரட். இரண்டாவதில் முட்டை. மூன்றாவதில் நன்கு வறுக்கப்பட்ட காப்பிக் கொட்டைகள்....
(விரிவாக இதைச் சொல்லி முடிக்க முழுமையாக இரண்டு நிமிடங்கள் தேவைப்படுகின்றன ஞானசேகருக்கு. இறுதியாக...)
ஞானசேகர் - நானும் காப்பிக் கொட்டைகள் மாதிரிதான் சார். ஒர்க் பிரஷர் போன்ற சோதனைகளுக்கு சுலபமாகத் தாக்குப் பிடிப்பேன்.
(நேர்முகத் தேர்வு தொடர்கிறது).
முணுமுணுப்பு
ஞானசேகரின் நேர்முகத் தேர்வு பற்றிக் கொஞ்சம் அலசலாமா? அவனுக்குக் குரல் மிகவும் மெலிந்திருக்க வேண்டும். அதனால்தான் இரண்டு தேர்வாளர்களுமே அவன் தொடக்கத்தில் கூறும் பதில்களை மீண்டும் கேட்டுத் தெளிவு பெறுகிறார்கள். நேர்முகத் தேர்வில் உங்கள் குரல் பளிச்சென்று இருக்க வேண்டும். அதிகார தொனி கூடாதுதான். அதற்காக முணுமுணுப்பதுபோல் இருக்கக் கூடாது. மிகவும் உற்றுக் கேட்டால்தான் உங்கள் பதிலைப் புரிந்து கொள்ள முடியும் என்றால், அது சந்தேகமில்லாமல் நீங்கள் தேர்வு செய்யப்படும் வாய்ப்பைக் குறைக்கும்.
Electrical and Electronics Engineering பிரிவை முடித்திருக்கிறார் ஞானசேகர். இதைக் குறிப்பிடும்போது ஒன்று அதை முழுவதுமாகக் குறிப்பிட வேண்டும். அல்லது குழப்பம் நேராதபடி, பலரும் குறிப்பிடுவதுபோல ‘ட்ரிபிள் ஈ’ என்று கூறியிருக்க வேண்டும். அப்போது குழப்பம் வந்திருக்காது.
தகவல் பரிமாற்றம் அல்ல
வேலையின் தன்மைகளைப் பற்றித் தேர்வாளர்கள் குறிப்பிடும்போது ‘தெரியும் சார்’ என்று மட்டுமே ஒவ்வொரு முறையும் ஞானசேகர் பதிலளிப்பது நல்ல வாய்ப்புகளை அவர் கோட்டைவிடுவதைக் காட்டுகிறது. ‘இது கடினமான வேலை, உடனடியாக தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும் வேலை’ என்றெல்லாம் தேர்வாளர்கள் குறிப்பிடும்போது ஞானசேகர் ‘ரொம்ப சந்தோஷம் சார். எனக்கு இதுபோன்ற சவால்களை ஏற்றுக்கொள்ள மிகவும் பிடிக்கும்’ என்று கூறியிருக்க வேண்டும். ஏனென்றால் வேலை குறித்த இந்த விவரங்கள் அவருக்குத் தெரிந்திருக்கிறதா என்பது குறித்த தகவல் பரிமாற்றம் அல்ல இது. ‘வேலைக்கான இந்த இந்தத் தகுதிகள் உங்களுக்கு இருக்கிறதா?’ என்பதை மறைமுகமாகக் கேட்டு உறுதி செய்து கொள்ளும்படியான தகவல்கள் இவை.
நேர்முகத் தேர்வு என்பது கதை சொல்வதற்கான இடமல்ல. உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பகிர்ந்து கொள்வது உங்களை செலக்ட் செய்துகொள்ள உதவும் என்று கருதினால்கூட, 30 நொடிகளுக்குத் தாண்டாமல் அதைக் கூறத் தெரிந்திருக்க வேண்டும்.
கதைச்சுருக்கம்
ஞானசேகர் கதை சொல்வதற்கான அனுமதியை தேர்வாளர்களிடம் கேட்பது உண்மை. ஆனால் தேர்வாளர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதையும், அவர்களில் ஒருவர் அரைகுறையாக மட்டுமே அனுமதி அளிப்பதையும் ஞானசேகர் உணர்ந்து கொண்டிருக்க வேண்டும். உடல் மொழியை அறிந்து கொள்வது நேர்முகத் தேர்வுகளில் பெரிதும் உதவும்.
பொதுவாகக் கதையைக் கூற அனுமதி வாங்குவதைவிட ‘கேரட், காப்பிக் கொட்டை கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும் சார்’ என்று ஞானசேகர் கூறியிருக்கலாம். தேர்வாளர்கள் இருவருமே அதைக் கேட்டிருப்பதாக பதிலளித்தால், அந்தக் கதையை அவன் கூறுவதைத் தவிர்த்து முடிவுரையை மட்டும் பகிர்ந்து கொண்டிருக்கலாம். மாறாக அவர்களுக்குத் தெரிந்திருக்கக் கூடிய கதையையே அவன் நீளமாக விவரித்தால், அது போரடிப்பதோடு ‘வேறு கேள்விகளை நாம் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்தக் கதையைக் கூறும் உத்தியைக் கடைபிடிக்கிறானோ?’ என்ற எண்ணத்தையும் உண்டாக்கலாம். தவிர ‘தெரியாது. அது என்ன கதை?’ என்று தேர்வாளர்கள் கேட்டால் அப்போது இந்தக் கதையை (அப்போதும் சுருக்க மாகத்தான்) கூறினால் தப்பில்லை.
முழுக்கதை
உங்களுக்கு கேரட், முட்டை, காப்பிக் கொட்டை கதை தெரியும்தானே? தெரியாதவர்கள் மேலே படிக்கலாம்.
மேலே குறிப்பிட்ட மூன்று பொருள்களைத் தண்ணீர் அடங்கிய மூன்று பாத்திரங்களில் வைத்து சுமார் 20 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க வையுங்கள். இருபது நிமிடங்களுக்கு கொதித்த பிறகு அந்தப் பொருள்களுக்கு என்ன ஆனது?
உறுதியாக இருந்த கேரட் கொழகொழவென மாறிவிட்டது. தொடக்கத்தில் முட்டைக்குள்ளே இருந்த பகுதி சாஃப்டாக இருந்தது. இருபது நிமிடங்கள் கொதித்த பின் முட்டையின் உட்புறம் கெட்டியாகி விட்டது. நன்கு வறுக்கப்பட்ட காப்பிக் கொட்டைகள் தண்ணீரில் கலந்து அதை டிகாஷன் ஆக்கிவிட்டன.
No comments:
Post a Comment