நேர்முகத் தேர்வு அறைக்குள் நுழைகிறான் கேசவன். தேர்வாளர்களில் ஒருவர் ‘’நீங்கள்தான் கேசவனா?’’ என்று கேட்கிறார். ‘’ஆமாம் சார்’’ என்று பதிலளிக்கிறான் கேசவன். தேர்வாளர்கள் மூவரும் கேசவனுடைய தன் விவரக்குறிப்பை அடுத்த சில நொடிகள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து சுமார் 20 நொடிகளுக்கு கேசவன் நின்று கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. ஒரு கட்டத்தில் கேசவன் பொறுமையிழக்கிறான்.
கேசவன்
நான் உட்கார்ந்து கொள்ளலாமா?
தேர்வாளர் 1
ஷ்யூர் உட்காருங்க.
தேர்வாளர் 2
உங்க ஊர் எது?
கேசவன்
(பெருமை பொங்க) திருச்சி சார். எங்க ஊரைப் பற்றி கொஞ்சம் சொல்லட்டுமா?
தேர்வாளர் 2
சொல்லுங்க.
கேசவன்
தமிழகத்திலேயே சிறந்த ஊர்னு திருச்சியைச் சொல்லலாம். கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் இதயம் போல நடுப்பகுதியில் இருக்கு. எம்.ஜி.ஆர். முதலமைச்சாராக இருந்தபோது திருச்சியை தமிழ்நாட்டின் தலைநகராக மாற்றுவதற்கு முயற்சி செய்தார். (இப்படித் தொடங்கும் கேசவன் அடுத்த மூன்று நிமிடங்களுக்கு தன் ஊரின் பெருமைகளை இடைவிடாமல் அடுக்கிவிட்டுதான் ஓய்கிறான்).
தேர்வாளர் -1
அப்போ திருச்சியிலே போஸ்டிங் கொடுத்தாதான் ஒத்துக்குவீங்களா?
கேசவன்
(சங்கடத்துடன்) - அப்படின்னு இல்லே. திருச்சிக்கு அருகே எங்கெங்கே உங்க கிளைகள் இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமா சார்?
தேர்வாளர் -3
(சற்றே கோபத்துடன்) - அதை நீங்க செலக்ட் ஆனவுடன் தெரிஞ்சுக்கலாமே!
கேசவன்
- அது எப்ப தெரியும் சார்?
தேர்வாளர் 1
நீங்க எங்க நிறுவனத்தில் என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீங்க?
கேசவன் தடுமாறுகிறான். குறைவாக குறிப்பிட்டால் அது தனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தலாம், அதிகமாகக் குறிப்பிட்டால் அதன் காரணமாகவும் வாய்ப்பை இழந்து விடலாம். என்ன செய்வது?
கேசவன்
நீங்க வழக்கமா கொடுக்கிற ஊதியத்தைக் கொடுக்கலாம் சார்.
(பேட்டி தொடர்கிறது)
பதில்கள் சரியா?
கேசவன் நேர்முகத் தேர்வில் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி கொஞ்சம் ஆராய்வோம். நேர்முகத் தேர்வில், தேர்வாளர்கள் உட்காரச் சொன்ன பிறகு உட்காருவதுதான் முறை. ஆனால் கேசவன் கணிசமான நொடிகளுக்கு நிற்க வேண்டிய கட்டாயம் உண்டாகிறது.அதனால் அவன் தேர்வாளர்களிடம் ‘’நான் உட்காரலாமா?’’ என்று தானாகவே கேட்டுவிட்டு உட்காருவதில் தவறில்லை. தவிர அப்போதுகூட அவன் அனுமதி பெற்ற பிறகுதான் உட்கார்கிறான் என்பதும் கவனிக்கத்தக்கது.
ஆனால் “என் ஊரைப் பற்றிச் சொல்லவா?’’ என்று கேசவன் கேட்டது அதிகப்பிரசங்கித்தனம். தவிர தனது ஊர்தான் தமிழ்நாட்டிலேயே சிறந்தது என்று அவன் கூறியிருக்கக் கூடாது. இது விவாதத்துக்குரிய ஒரு பதில். தவிர தேர்வாளர்களில் தமிழகத்தின் பிற நகர்களைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள். அவர்களால் இந்தப் பதிலை ஏற்க முடியாமல் போகலாம்.
ஒற்றைப்பதில்களும்
சில கேள்விகளுக்கு ஆமாம் அல்லது இல்லை என்கிற ஒற்றை வார்த்தை பதில் மட்டுமே போதுமானது. மற்றபடி பெரும்பாலான கேள்விகளுக்கு உங்களின் பதில்கள் குறைந்தது அரை நிமிடத்திற்கு இருக்கட்டும். அதிகபட்சம் ஒரு நிமிடத்தைத் தாண்ட வேண்டாம் (பாடம் தொடர்பான டெக்னிகல் பதிலாகவோ விளக்கமாகவோ இருந்தால் ஒன்றரை நிமிடம் வரை செல்லலாம்).
கேசவன் மூன்று நிமிடங்களுக்கு தன் ஊரைப் பற்றி அடுக்கியிருக்க வேண்டாம். பிற கேள்விகளுக்கான நேரத்தைக் குறைக்கும் உத்தியோ இது என்று தேர்வாளர்கள் நினைத்துவிடக் கூடும்.
தவிர கேசவன் கூறும் பதிலைப் பார்த்தால் திருச்சி அல்லது அதற்கு அருகிலிருக்கும் ஊர்களில் போஸ்டிங் கொடுத்தால்தான் சேருவேன் என்பதுபோல இருக்கிறது. இது அவனைத் தேர்ந்தெடுப்பதில் பெரும் தடைக்கல்லாக இருக்கலாம்.
முன்னமே அறி
தவிர தான் வேலைக்குச் செல்லவிருக்கும் நிறுவனத்துக்கு எங்கெங்கே கிளைகள் என்பதை கேசவன் முன்பாகவே அறிந்து கொண்டிருக்க வேண்டும். அந்த நிறுவனத்தின் வலைத்தளத்தை ஆய்வதன்மூலம் இதைச் செய்திருக்கலாம்.
அதுவும் போஸ்டிங்கில் தனக்கு முன்னுரிமையான கிளைகள் எவை என்பதை அவன் நிச்சயம் முன்னதாகவே அறிந்து வைத்திருக்க வேண்டும். இதனால்தான் கோபமடையும் தேர்வாளர்கள் ‘’நீங்க செலக்ட் ஆன பிறகு அதைப் பார்க்கலாம்’’ என்கிறார்கள். ‘செலக்ட் ஆயிடுவீங்களா என்ன? அப்படியானால் பார்க்கலாம்’ எனும் தொனி அதில் தெரிகிறது.
அடுத்த தேர்வாளர் ஊதியம் குறித்து கேசவனைக் கேட்பது கூட கொஞ்சம் கிண்டலாகத்தான். அதைப் புரிந்து கொள்ளாமல் கேசவன் வெள்ளந்தியாக பதிலளிக்கிறான்.
ஊதியக்கேள்வி
இது போன்ற சூழலில் ‘’உங்களுக்கு எவ்வளவு ஊதியம் வேண்டும்?’’ என்பது போல் கேள்வி கேட்கப்பட்டால், ‘’ஒரு பெஸ்ட் ஊழியருக்கு நீங்க எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?’’ என்பதுபோல் பதிலுக்குக் கேட்கலாமே. கூடவே ‘’எதைக்கொண்டு நீங்க பெஸ்ட் ஊழியர்னு சொல்றீங்க?’’ என்று அவர்கள் கேட்க வாய்ப்பு உண்டு என்பதால் அதற்கான விடையையும் யோசித்து வைத்துக் கொள்வது நல்லது.