“வாழ்வும் சாவும் நாவின் சக்தியில் இருக்கிறது” என்பது மிக உண்மையான, சக்தி வாய்ந்த வாசகம்.
உங்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள்தான் வாழ்வையும் மரணத்தையும் உருவாக்கின்றன. நீங்கள் பேசுவதைக் கவனியுங்கள். நீங்கள் எதைச் சொல்கிறீர்களோ அது மெய்யாகிறது. நீங்கள் உங்களை முட்டாள் என்று சொன்னால் நீங்கள் முட்டாள். நீங்கள் உங்களைப் புத்திசாலி என்று சொன்னால் நீங்கள் புத்திசாலி. நீங்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறீர்களோ அதுதான் நீங்கள்.
நீங்கள் சொன்னது மற்றும் நம்புவது எதுவோ அதுவாகவே ஆவீர்கள். “ உங்களால் முடியும் என்று நீங்கள் சொன்னால் உங்களால் முடியும்; உங்களால் முடியாது என்று சொன்னீர்களானால் உங்களால் முடியாது. இரண்டு வழிகளிலும் நீங்கள் சரியே” என்று ஹென்றி ஃபோர்டு கூறியிருக்கிறார்.
எதிர்மறையின் நேர்மறை
எதிர்மறையான விஷயத்தையும் சொல்ல நேர்மறையான வழி ஒன்று நிச்சயம் உள்ளது. நான் உடல்நலமின்றி உள்ளேன் என்பதற்குப் பதிலாக, குணமாகிக்கொண்டிருக்கிறேன் என்று கூறுங்கள். நீங்கள் உடைந்துபோனதைப் பற்றி இன்னொரு நபரிடம் கூறவே கூறாதீர்! “எனது நிதி நிலை மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது” என்று சொல்லுங்கள்.
அது என்னுடைய அதிர்ஷ்டம் என்று யாராவது பேசுவதைக் கேட்கும் சமயத்தில் உண்மையிலேயே எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. அதிர்ஷ்டம் என்று சொன்னால், நல்ல விஷயங்கள் உங்களுக்கு நடக்கும் சாத்தியம் இல்லை என்று நீங்கள் நம்புவதாக அர்த்தம். பெரிய விஷயங்கள் உங்களுக்கு நடக்கும் என்பதை நீங்கள் எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை.
மகத்தானவன்
“கண்ணாடியில் உன்னைப் பார்த்து, நீ மகத்தானவன் என்று கூறிக்கொள்” என்று முதல்முறையாக ஒருவர் என்னிடம் கூறியபோது, அந்த ஆளுக்கு நிச்சயம் கிறுக்குதான் பிடித்திருக்கிறது என்று நினைத்தேன்! அவர் என்னைக் கண்ணாடியைப் பார்க்கச் சொல்லி நேர்மறையான விஷயங்களை எனக்கு நானே சொல்லிக்கொள்ள வேண்டும் என்கிறார்.
அதன் பிறகு சில நாட்கள் கழித்து என் வீட்டில் கண்ணாடி முன்பு நின்று பல்தேய்த்துக் கொண்டிருந்தபோது அந்த மனிதர் சொன்னது நினைவுக்கு வந்தது. நான் என்னைப் பற்றி என்ன சொன்னால் நேர்மறையாகவும், தன்னம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கும்? கண்ணாடியை உற்றுப் பார்த்து, “ஜானி, நான் உன்னை நேசிக்கிறேன்.” என்று சொன்னேன்.
உடனடியாக நம்பவே முடியாத அதிசயம் ஒன்று நடந்தது. நான் ஒரு குழந்தை போல அழத் தொடங்கினேன். நான் வீட்டில் தனியாக இருந்தேன். அர்த்தமே இல்லாமல் அழுதேன். முதலில் என்னைக் கட்டுப்படுத்தி நிதானமாக இருக்க முயன்றேன். அதற்குப் பிறகு நான் மட்டும்தான் வீட்டில் இருக்கிறேன் என்பது புரியவந்தது.
என் இஷ்டத்துக்கு அழுவது என்று முடிவுசெய்தேன். எதற்காக அழுகிறேன் என்று தெரியாமலேயே 15 நிமிடங்களாவது அழுதிருப்பேன். அப்போது எனக்கு 24 வயது. அந்தக் கணத்தில் நடந்தது என்னவென்று அடுத்த சில மாதங்கள் வரை எனக்குப் புரியவேயில்லை. பிறகு மிகப் பெரிய புரிதல் என்னிடம் மலர்ந்தது. என்னிடம் இன்னொரு மனிதன், “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று கூறியதே இல்லை.
அதை நான் எனது தந்தையிடம் கூடக் கேட்டதில்லை. அந்தக் கணம் வரை தன்னைத் தானே நேசிப்பதைப் பற்றி நான் தெரிந்து கொண்டதே இல்லை. தன்னைத் தானே நேசிப்பது என்பது சுயநலமானது என்று எண்ணியிருந்தேன். ஆனால் ஒருவர் தன்னை நேசிப்பதைத் தெரிந்துகொள்ளாமல் பிறரை எப்படி நேசிக்க முடியும்?
வெற்றியாளன்
என்னைப் பற்றிய அருமையான விஷயங்களை வேறு யாரும் சொல்லாவிட்டால், அவை குறித்து நானாவது பேச வேண்டும் என்று அக்கணத்தில் உணர்ந்தேன்.
அந்த நாள் முதல், எனக்கு நானே உறுதி அளித்துக்கொள்ளாமல் ஒரு நாளும் இருந்ததேயில்லை. நான் அருமையான கணவன், நான் அற்புதமான தந்தை, நான் அதிகபட்சம் ஆசீர்வதிக்கப்படுபவன், மிகவும் விரும்பப்படுபவன். நான் தலை. வால் அல்ல. நான் மேலானவன். நான் இங்கே வரும்போதும் ஆசீர்வதிக்கப்பட்டவன், போகும்போதும் ஆசீர்வதிக்கப்படுவேன், நான் வாழ்க்கை குறித்தே பேசுவேன்.
நான் பெருந்திரளான மனிதர்களிடம் அவர்கள் சிறந்ததை அடைவதற்கான தன்னிறைவை ஏற்படுத்துவேன். நான் உலகை மாற்றுபவன். நான் நேர்மையானவன். எனது வார்த்தைகள் மலைகளை நகரவைக்கும், நான் சாதனைகளை முறியடிப்பவன். என் கைகள் பட்ட இடமெல்லாம் செழிக்கும்... இந்த வாசகங்களை நான் தினசரி எனக்குள் சொல்லிக் கொள்வேன்.
இதுபோன்ற செயல்முறைகள் அகந்தையானவை என்று சிலர் நினைக்கலாம். ஆனால், அகந்தைக்கும், தன்னம்பிக்கைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் தன்னம்பிக்கை உடையவர்களைப் பார்த்துப் பயப்படுவார்கள்.
உங்கள் வாழ்வில் வெற்றி கிடைப்பதற்கு முன்பே நீங்கள் வெற்றியாளர் என்று நீங்கள் நம்ப வேண்டும்.
பண வெற்றிமா?
பணத்தை வெற்றி என்று பலர் நினைத்துவிடுகிறார்கள். கை நிறையப் பணம் வைத்திருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் வெற்றி என்பதன் உண்மையான பொருளை அவர்கள் அனுபவித்திருக்கவே மாட்டார்கள். உங்களிடம் உள்ள எல்லாப் பழக்கங்களையும் பணம் அதிகரிக்கும்.
அது நல்ல பழக்கமாக இருக்கலாம். மோசமான பழக்கமாகவும் இருக்கலாம். தொண்டு நிறுவனங்களுக்கு நிதி அளிக்கும் பழக்கத்தை நீங்கள் வைத்திருப்பவர் என்றால், உங்களின் பணம் அதிகரிக்கும்போது உங்கள் கொடைகளும் அதிகரிக்கும்.
உங்களுக்குப் போதைப் பழக்கம் இருந்தால் உங்கள் பணம் அதிகரிக்கும்போது, போதைப் பொருள் உட்கொள்ளும் அளவும் அதிகரிக்கும். பணம் மீதான ஆசைதான், தீமையின் வேர் என்று சொல்லப்படுகிறது.
நல்லது செய்வதற்கான கருவியாகப் பணத்தைப் பயன்படுத்துங்கள். நன்றி செலுத்துவதற்கான கருவியாக மற்றவருக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் கொடுக்கப் பயன்படுத்துங்கள். ஆனால் உங்கள் வாழ்க்கையின் லட்சியமாக அதை ஆக்கிவிடாதீர்கள். வாழ்க்கையைப் பணத்தில் தொலைத்த பிறகு வெற்றி வரும்போது அதை எப்படிக் கையாளுவீர்கள்?
கட்டுரையாளர் ஒரு அமெரிக்கர். அவர் எழுதியுள்ள from the HOOO to doing GOOD எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.