உலகப் புகழ்பெற்ற பயணி மார்கோ போலோ, 17 வயதில் இத்தாலியில் புறப்பட்டுப் பூமிப் பந்தின் பாதிச் சுற்றளவு தொலைவுள்ள சீனாவை சென்றடைந்த கதை புதுமைகள் நிறைந்தது.
மார்கோ போலோவின் அப்பா நிக்கோலோவும், அவருடைய சித்தப்பா மட்டியோவும் வெனிஸ் நகர வணிகர்கள். 13-ம் நூற்றாண்டில் ஏற்கெனவே ஆசியாவுக்குப் பயணம் சென்று திரும்பியவர்கள். 1271-ல் மீண்டும் அவர்கள் வெனிஸ் நகரத்திலிருந்து புறப்பட்டு தூரக் கிழக்கு நாடுகளுக்குப் பயணப்பட்டார்கள். அப்போது 17 வயதில் இளமைத் துள்ளலுடன் இருந்த இளைஞன் மார்கோ போலோவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.
கடும் பயணம்
போலோக்கள் வெனிஸ் நகரத்தில் இருந்து 1271-ல் ஏக்ர் நகரத்துக்கு கடல் வழியாகப் பயணப்பட்டார்கள். அவர்கள் சென்ற வெனிஷியன் கேலி எனப்பட்ட படகுகள் உறுதியற்றவையாக இருந்தன. அதனால் அங்கிருந்து ஒட்டகம் வழியாக ஹோர்முஸ் நகரம் சென்றடைந்தார்கள். அங்கிருந்து பட்டுப் பாதை என்றழைக்கப்பட்ட புகழ்பெற்ற Silk route வழியாக பெர்ஷிய பாலைவனத்தைக் (இன்றைய இரானுக்கு அருகே) கடந்தனர். பாமிர் மலைத் தொடரைக் கடக்க அவர்களுக்கு 40 நாட்கள் தேவைப்பட்டன. அந்தக் காலத்தில் அங்கு மனிதர்கள் யாரும் வாழவில்லை.
கடைசியாக கோபி பாலைவனம் எனப்படும் மங்கோலியப் பாலைவனத்தைக் கடக்க அவர்களுக்கு ஒரு மாதம் ஆனது. அவர்களது பயணத்திலேயே மிகவும் கடினமான பாதை இது. சில யாத்ரீகர்கள், அந்தப் பயணம் அச்சுறுத்தியதாகக் கூறினர்.
கடைசியாக 1275-ம் ஆண்டு மே மாதம் குப்ளாய் கானின் கோடைகால அரண்மனையான ஷாங்டூவை போலோக்கள் சென்றடைந்தனர். வெனிஸ் நகரத்திலிருந்து அவர்கள் சீனாவைச் சென்றடைய 3 வருடங்கள் ஆனது. அப்போது மங்கோலிய அரசர் குப்ளாய் கான், சீனாவை ஆண்டு வந்தார்.
சீன சுற்றுலா
அவர்களை வரவேற்ற குப்ளாய் கான், தன்னிடம் பணிபுரியுமாறு மார்கோ போலோவை கேட்டுக்கொண்டார். அவருடைய நன்மதிப்பைப் பெற்ற மார்கோ போலோ மன்னரின் விசுவாசமான சேவகராக மாறினார். அடுத்த 17 ஆண்டுகளுக்கு சீனா முழுவதும் மார்கோ போலோ சுற்றுப்பயணம் செய்தார்.
இப்படிச் சுற்றுப்பயணம் போனபோது, கின்சாய் என்ற சொர்க்கத்தின் நகரைக் கண்டு மார்கோபோலோ அதிசயித்துப் போனார். ஐரோப்பாவில் இருந்த நகரங்களைக் காட்டிலும், அது பிரம்மாண்டமாக இருந்தது. அந்த ஊரில் இருந்த பல கால்வாய்களையும் அவற்றின் மீது கட்டப்பட்ட பாலங்களையும் அவர் முக்கியமாகக் குறிப்பிட்டார். மேலும் சீனர்கள் அப்போதே காகித பணத்தைப் பயன்படுத்த ஆரம்பித்திருந்தனர். சீன காகித உற்பத்தி புகழ்பெற்றது. ஐரோப்பாவில் அந்தக் காலத்தில் காகித பணம் இல்லை.
No comments:
Post a Comment