முதலிடம் என்ற வெற்றிக்கான அடிப்படை மீதுதான் வெற்றியாளர்கள் அனைவரும் உண்கிறார்கள், உறங்குகிறார்கள், சுவாசிக்கிறார்கள். நீங்கள் முதலிடத்தை விரும்பினால் அந்த இடத்தில் உங்களை வைத்துப் பார்க்க வேண்டும். அந்த உண்மையின் அடிப்படையில் உங்களை முன்னிறுத்த வேண்டும். நீங்கள் முதன்மையானவர் என்று மற்றவர்களுக்குத் தெரிவதற்கு முன்பே உங்களுக்கு அது தெரிந்திருக்க வேண்டும்.
நம்பிக்கை என்பது நாம் எதிர்பார்க் கும் விஷயங்களுக்கான அடிப்படை. இன்னும் கண்கூடாக வெளிப்படாத விஷயங்களுக்கான தடயம். வெற்றியாளனாக வேண்டும் என்றால் வெற்றியாளனாகவே உங்களைக் கருதிக்கொள்ள வேண்டும்.
வெற்றி பெறுவதற்கு நாம் தகுதியானவர் என்பதில் கடுகளவும் கூடச் சந்தேகம் வரக்கூடாது. வெற்றியாளர் ஆக வேண்டும் எனில் வெற்றியாளனாகவே உங்களைப் பார்த்துக்கொள்ள நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும் என்கிறார் எழுத்தாளர் டெர்ரி எல். ஹார்ன்பக்கிள்.
பாதி வெற்றி
சென்ற நூற்றாண்டின் சிறந்த குத்துச்சண்டை வீரர் முகமது அலி. வெற்றிபெறுவதற்கான உளவியலில் நிபுணர். மிகச் சிறந்த குத்துச் சண்டை வீரராக அவர் உலகத்துக்குத் தெரியவருவதற்கு முன்பே, தான் சிறந்தவன் என்று உலகத்துக்குக் கூறியவர். உலகம் அவரை யார் என்று அறிவதற்கு முன்பே, உள்ளூர் உடற்பயிற்சிக் கூடங்களில் நின்றுகொண்டு தான் சிறந்தவன் என்று கூறியவர். வெளிப்படையாக அதைக் கூறும் தைரியம் வருவதற்கு முன்பே தன்னிடம் தான் சிறந்தவன் என்று கூறிக்கொண்டவர். அலி, மற்றவர்களை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கு முன்பு, தன்னைத்தானே ஏற்றுக்கொள்ளச் செய்தார். உங்களது வெற்றிக்கான திறன்களின் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை உங்களது எதிரி பார்க்கவும் கேட்கவும் உணரவும் வேண்டும்.
உங்கள் எதிரி உங்கள் வெற்றியைக் கற்பனை செய்யத் தொடங்கிவிட்டால் போதும், போரில் பாதியை வென்றது போல்தான்.
அடையாளமும் யதார்த்தமும்
உங்களது எதிரி யார்? உங்கள் தளைகளிலிருந்து வெளிவராத வகையில் உங்களை அழுத்துபவன்தான் உங்கள் பகைவன். எனக்கு அமைந்த தடைகள்தான் என் எதிரிகள். என் தந்தையும் தாயும் இருவேறு இனத்தவர்கள். நான் அரசின் சேமநலத் திட்டங்களை நம்பி வளர்ந்தவன். அப்பா குடிகாரர். எனது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் எந்த வாய்ப்பும் எனக்கு இல்லை என்றுதான் சமூகமும் புள்ளிவிவரங்களும் என்னிடம் கூறிக்கொண்டே இருந்தன.
நிர்ணயிக்கப்படாத எனது இன அடையாளத்தால் என் சகாக்களின் வட்டத்தில் உணர்வு ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டிருக்க வேண்டியவன் நான். மது அடிமைப் பழக்கத்துடன் போராடியிருக்க வேண்டியவன். சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தாழ்வான நிலையில் இருந்திருக்க வேண்டியவன். ஒரு வெற்றிகரமான திருமணத்தை நான் எண்ணிப் பார்த்திருக்கவே முடியாது.
ஆனால் எனது யதார்த்தமோ வேறு. எனது இன அடையாளம் தொடர்பான பிரச்சினைகள் எனக்குப் பள்ளியில் இருந்திருக்கலாம். ஆனால் நான் யார் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கையும் திருப்தியும் நிச்சயமாக இருந்தது. உயர்நிலைப் பள்ளியில் வகுப்பு மாணவர்களிடையே விருப்பத்துக்குரியவனாக இருந்தேன். மது என்னை அடிமைப்படுத்தவில்லை. எனக்கு அருமையான வாழ்க்கைத் தரம் இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நானும் என் மனைவியும் சந்தோஷமான திருமண வாழ்க்கையை நடத்திவருகிறோம். நாங்கள் இருவரும் இன்னமும் சிறந்த நண்பர்களாக இருக்கிறோம்.
வெற்றி மனநிலை
மற்றவர்களின் அனுபவங்கள் உங்கள் வாழ்வைத் தீர்மானிக்க அனுமதிக்காதீர்கள். நீங்கள் என்னவாக ஆக வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை உங்களுக்கு மட்டும்தான் உள்ளது. உண்மையான வெற்றியாளர், தன்னைச் சுற்றி வெற்றியாளர்கள் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டவர்களாகவும் இருப்பார்கள். என்னை விஸ்திரித்துக்கொள்வதற்கு உதவும் நபர்களுடன் தொடர்ந்து அறிமுகம் செய்துகொள்வதை எனது வாழ்க்கையின் தனிப்பட்ட இலக்காக வைத்துள்ளேன்.
ஆழமற்ற நீர் நிலையில் நீச்சல் கற்கவே முடியாது. ஆழத்தைக் கண்டு அச்சப்பட வேண்டாம். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களுக்குக் கீழ் நிலையில் இருப்பவர்களாகவோ உங்களுக்குச் சமமான நிலையில் இருப்பவர்களாகவோ இருந்தால் உங்களால் உயரவே முடியாது. அவர்களைவிட நீங்கள் மேலானவர் என்று சொல்ல வரவில்லை. நாம் எல்லாரும் சமமாகப் படைக்கப்பட்டவர்கள்தான். ஒரு எக்ஸிக்யூட்டிவ் ஆக நீங்கள் விரும்பினால், உங்கள் மனநிலை எக்ஸிக்யூட்டிவுக்கு உரியதாக இருக்க வேண்டும். நீங்கள் போக முயலும் இடத்தில் நிறைய பேர் இருந்திருக்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள். நிறுத்தப்பட்டிருக்கும் காரை நீங்கள் பின்தொடர முடியாது. அதனால் வெற்றியாளர்களுடன் இருங்கள். நீங்களும் வெற்றியாளர் ஆகுங்கள்.
No comments:
Post a Comment