வெற்றி என்னும் சாத்தியம் இருக்கையில், ஏன் சிலர் தோல்வியை எப்போதும் தேர்ந்தெடுக்கிறார்கள்? நீங்கள் மேற்கொள்ளும் தேர்வுகளிலிருந்தே துன்பத்திலிருந்து சவுகரியத்துக்கு நகர்கிறீர்கள்.
நீங்கள் நேற்று செய்த அதே விஷயத்தை இன்றும் அதேபோன்று அச்சு அசலாகச் செய்தால் உங்களது நாளையும் இன்றைப் போலவே மாறாமல் இருக்கும். ஏதாவது ஒன்றை வித்தியாசமாகச் செய்யாமல் வித்தியாசமாக எதையும் பெறவே முடியாது!
வளர்ச்சிக்கான வடிவமைப்பு
வளர்ச்சி என்பது மனித இயல்பின் ஒரு அங்கம். மாற்றம் என்பதும் தவிர்க்க முடியாதது. நாம் முதிர்ச்சியடையவும், பரிணமிக்கவும் வடிவமைக்கப்பட்டவர்கள். அதற்காகவே படைக்கப்பட்டவர்கள். பெருக்கவோ, வளரவோ ஆசைப்படுவதுதான் மனித இயல்பு.
வாழ்க்கை போடும் தடைகள் நமக்குத் தெரியவரும்போது நாம் அச்சம் மிகுந்தவர்களாக, முன்நோக்கி அடி எடுத்துவைக்க விரும்பாதவர்களாக ஆகிறோமா? பல சமயங்களில் வெற்றிக்கான பயணத்திற்கு- ஆன்மிக ரீதியாக, மன ரீதியாக, உடல் ரீதியாக அல்லது பொருளாதார ரீதியான பயணமாக இருக்கலாம் - நம்மை முடுக்கி மனதையும் தயார்படுத்திக்கொள்கிறோம்.
பெருக்குவதின் சாகசத்துக்காக நாம் ஏங்குமாறும், வளர்ச்சி அடையுமாறும் வடிவமைக்கப்பட்டவர்கள்.
தோல்வி தெரியா குழந்தைகள்
குழந்தைகள் எழுந்து நடக்க தங்களது முதலடிகளை வைக்கும்போது அவை ஒருபோதும் தன்னால் நடக்க முடியாது என்றோ, நடக்க முடியாமல்போனால் என்ன ஆகும் என்றோ நினைத்துப் பார்ப்பதே இல்லை.
எழுந்து நடக்க முயன்று கீழே திரும்பத் திரும்ப விழுகின்றன. அதனால் ஒருபோதும் அக்குழந்தைகள் அவநம்பிக்கைக் குள்ளாவதில்லை. எழுந்து நடக்க வேண்டும் என்ற உறுதி குழந்தைகளிடம் இருக்கும். ஒருபோதும் குழந்தைகள் வேறு வழிகளைத் தேடுவதில்லை.
அப்படியான வழிகள் குழந்தைகளுக்குத் தெரியவும் செய்யாது. அடுத்தடுத்த முயற்சியிலேயே அக்குழந்தைகள் கவனம் குவித்துத் தயாராகும். தோல்வி என்றால் என்ன என்பதை அவர்கள் அறியாதவர்களாக இருக்கலாம். இது முடியாது என்று சொல்லப்படுவதைப் புறக்கணிக்கும் திறனை நமது வாழ்க்கையில் ஏதோ ஒரு புள்ளியில் இழந்துவிடுகிறோம்.
நமக்குத் தோல்வி பயம் வந்துவிடுகிறது. தோல்வி என்பது ஒரு வாய்ப்பாகத் தெரியத் தொடங்கும்போது வெற்றி என்பது நமது உரிமையாக இருக்க முடியாது என்று நினைக்கிறோம். வெற்றியை நோக்கிய முதல் எட்டை எடுத்து வைக்கும் எவரையும் தோல்வி சார்ந்த எண்ணம் பலவீனப்படுத்துகிறது.
அனுமதிக்காதீர்கள்
நீங்கள் குழந்தையாக இருந்தபோது, வளர்ந்த பிறகு நீங்கள் என்னவாகப் போகிறீர்கள் என்று யாராவது கேட்டிருப்பார்கள். நீங்களும் விண்வெளி வீரர், காவல்துறை அதிகாரி, மருத்துவர், வழக்கறிஞர் என்றோ நடனக் கலைஞன் என்றோ, பாடகர் ஆக விருப்பம் என்றோ சொல்லியிருப்பீர்கள்.
மாடுபிடி வீரர் அல்லது தடகள வீரர் ஆக விருப்பம் உள்ளது என்றும் நீங்கள் கூறியிருக்கலாம். அந்தப் பருவத்தில் உங்களது கனவுகளுக்கு வரையறையே இல்லை. ஏனெனில் நீங்கள் தடைகளின் யதார்த்தத்துக்குப் பழக்கமாகவில்லை. நான் வளர்ந்த பிறகு டாக்டராக முயற்சி செய்வேன் என்று எந்தக் குழந்தையும் கூறி நான் கேட்டதில்லை.
ஏனெனில் குழந்தைக்கு முயற்சி என்ற வார்த்தையே தெரியாது. ஒரு குழந்தை திட்டவட்டமாக, சிறு தளர்ச்சிகூட இல்லாமல், “நான் சினிமா நட்சத்திரமாகப் போகிறேன்” என்று சொல்லும். அவர்களால் முடியும்போது என்னால் ஏன் முடியாது என்பதே குழந்தையின் வெற்றி சூத்திரம்.
எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு உள்ளது. தோல்வி என்பது ஒரு வாய்ப்பு என்ற உண்மையை யாராவது அறிமுகப்படுத்தினாலொழிய குழந்தைகளுக்குத் தோல்வியின் சாத்தியம் புரியவே செய்யாது. அந்தக் குழந்தைத்தனமான நம்பிக்கையை மீண்டும் புதுப்பிப்போம்.
உங்களால் ஒன்றைச் செய்ய முடியாது என்று சொல்ல இன்னொரு நபரை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.