Friday, February 27, 2015

பொன்னும் பொருளும் அள்ளித் தரும் - குரு பகவானின் பரிபூரண அருள் பெற உதவும் - அற்புதமான ஆலயம்

பொன்னும் பொருளும் அள்ளித் தரும் - குரு பகவானின் பரிபூரண அருள் பெற உதவும் - அற்புதமான ஆலயம்



http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSm1toZbfx9vDCJqy5SX2Tzicvjf7udlLesTUj22zfg047k7QY2

வாசக அன்பர்களுக்கு வணக்கம். நிம்மதியும் , மகிழ்ச்சியும் நம் அனைவரின் குடும்பத்தில் என்றும் நிலவ அந்த பரம்பொருளை மனமார பிரார்த்திப்போம்.

இன்று நாம் பார்க்க விருப்பது , ஒரு மகத்தான ஆலயம் பற்றி. ஆலயம் அமைந்திருக்கும் இடம் - தென்குடி திட்டை. என்னிடம் ஜாதக பலன் கேட்டு வரும் வாசகர்களுக்கு , குரு பலன் கிடைக்க நான் அதிகம் பரிந்துரை செய்யும் ஸ்தலம். குரு பகவான் - நம் அனைவருக்கும், கல்வி , தனம், வாக்கு , புத்திர பாக்கியம் உள்பட பல முக்கிய விஷயங்களுக்கு காரண கர்த்தாவாக விளங்குகிறார். நவ கிரகங்களில் முழு சுபர் .

குருப் பெயர்ச்சியின் மூலம் ஒவ்வொரு ஆண்டும், நமைப் போன்ற மனிதர்களின் பொருளாதார வாழ்வில் - ஏற்ற , இறக்கத்தை ஏற்படுத்தி - உலக பொருளாதாரத்தையே , முழு கட்டுப்பாட்டில் வைப்பவர் குரு பகவான். சில வருடங்களுக்கு முன் , ஏற்பட்ட கடுமையான பொருளாதார வீழ்ச்சி - குரு பகவான் , தன பலமிழந்து நீச வீட்டில் , மகரத்தில் இருந்த போது நிகழ்ந்ததே. சரியாக 12 வருடங்களுக்கு முன் , இதே நிலைமை தான். பல வங்கிகள் திவால் ஆனது.

நம் வாழ்வில் ஏற்படும் ஏற்ற , இறக்கங்களும்   குரு பார்வையைப் பொறுத்தே வேறுபடுகிறது.
ஜாதகப் படி  ஜனன காலத்திலோ , அல்லது நடக்கும் கோச்சாரத்திலோ - குரு பகவான் , பலம் இழந்து அல்லது பாதக ஸ்தானத்தில் இருந்தால் - உங்களால் இயன்றவரை அடிக்கடி இந்த ஆலயத்திற்கு சென்று , மனமார குருவருள் வேண்டி பிரார்த்தனை செய்து வாருங்கள்.  வாழ்வில் , நிச்சயம் நல்ல மாறுதல் கிடைக்கும்.

எவர் ஒருவர் ஜாதகத்தில் குரு நீசமாக இருக்கிறாரோ, அவர்கள் நிச்சயம் இந்த ஆலயம் வந்து குருவுக்கு பரிகாரம் செய்தல் நலம் பயக்கும். 

நீண்ட நாட்களாக , நல்ல வேலை / தொழில் அமையாமல் அல்லல் படும் அனைவருக்கும் - ஒரு நிரந்தர தீர்வு கொடுத்து , ஆயிரக்கணக்கான அன்பர்களுக்கு விடி மோட்சம் கொடுத்துள்ள ஆலயம் இது.
புத்திர சோகம் உள்ளவர்களுக்கும், தீய வழியில் செல்லும் குழந்தைகளுக்கு - நல்ல வழியில் வழிகாட்டிச் சென்று , அவர்களை மேம்படுத்தவும் ,  நவ கிரகங்களின் தோஷத்தை நீக்கவும் - இந்த சந்திரகாந்த கல்லில் அபிசேகம் பெறும் வசிஷ்டேஸ்வரரை வணங்குதல் ,  உங்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு ஆகும்.




இன்னும் ஒரு ஆச்சரியத்தக்க விஷயம் . எவர் ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் - ஏழாம் வீட்டில் தனியாக இருக்கிறாரோ, அவர்கள் திருமணம் ஒரு கேள்விக்குறியாகி விடுகிறது. திருமணம் நடந்தாலும், அது எப்படி , எவ்வளவு இடையூறுகளுக்கு இடையில் நடந்தது என்பது , அந்த ஜாதர்கள் மட்டுமே அறிந்த ரகசியம்.

விட்ட குறை , தொட்ட குறை போல - அவர்கள் மண வாழ்வும், கொஞ்சம் நெருடலாகவே செல்லும். இவர்களும் ஒருமுறை இந்த ஆலயம் வந்து குரு பகவானுக்கு உரிய ப்ரீத்தி செய்வது அவசியம். அதன் பிறகு , உங்கள் வாழ்க்கை ஜாம் ஜாம் என்று செல்வது நிச்சயம்.

இனி , ஆலயம் பற்றிக் காண்போம்... :


தல அமைவிடமும், பெயர்க் காரணமும்

கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் திட்டை எனும் ஊரில் அமைந்துள்ளது திருதென்குடித்திட்டை எனும் திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற திருத்தலம் இது. திட்டை என்ற பெயர் ஏன்?. புராண காலத்தில் ஊழிப் பெரு வெள்ளத்தால் உலகின் அனைத்து பகுதிகளும் மூழ்கி விட்டது. மும்மூர்த்திகளும் இருள் உலகம் முழுவதையும் சூழ்ந்து விட்டதை கண்டு மனம் கலங்கினர். அச் சமயம், ஒரு பகுதி மட்டும் சற்று மேடாக, திட்டாக காணப்பட்டதை கண்டனர். விரைந்தனர் அப் பகுதிக்கு. அங்கு "ஹம்" என்ற ஒலியுடன் பல விதமான மந்திர ஒலிகளும் கேட்டனர். அப்பொழுது ஜோதி சொரூபமாய் சிவ பெருமான் தோன்றக் கண்டனர். அவரை போற்றி துதித்தனர். மும் மூர்த்திகளின் வேண்டுதலுக்கு இணங்க இத் தலத்திலேயே வீற்றிருந்து அருள் புரியலானார்.

இறைவனும், இறைவியும்
இறைவன் வசிஷ்டேஸ்வரர். தாமாகவே தோன்றிய சுயம்பு மூர்த்தி. தேரூர் நாதர், பசுபதி நாதர், ரதபுரீஸ்வரர், தேனுபுரீஸ்வரர், அனந்தீஸ்வரர் என்றெல்லாம் வணங்கப்படுகின்றார். யம தர்மன் சாப விமோஷனம் பெற்ற தலம் இது. சனீஸ்வரன் நவ கோள்களில் ஒன்றாக விளங்கும் அருள் பெற்றது இத் தல இறைவனை வேண்டியே. பரசுராமர், கார்த்த வீர்யார்ச்சுனன், முருகன், பைரவர் போன்றோர் வழிபட்ட திருக்கோவில் இது. இறைவி உலகநாயகி. சுகந்த குந்தளேஸ்வரி, மங்களேஸ்வரி என்றும் வழிபடப்படுகின்றாள். இத் தல அம்பிகையை வழிபட்டு சுகந்த குந்தலா எனும் பெண்ணொருத்தி இழந்த தன் கணவனை உயிருடன் மீட்டாள் என்கிறது தல புராணம். மங்களா எனும் வைசியப் பெண்ணொருவள் தன் விதவைக் கோலம் நீங்கி நீடூழி வாழ்ந்து மணித்வீபம் சென்றாள். சங்க பால மன்னன் என்பவன் தன் இறந்து போன மத்சலாவை உயிருடன் மீண்டும் பெற்று இழந்த தன் அரசையும் இத் தல இறைவனை வழிபட்டே பெற்றான்.

சிறப்பு மூர்த்தியாய் குரு பகவான்

அனைத்து சிவாலயங்களைப் போலவே இங்கும் தெட்சிணாமூர்த்தி தென் புறத்தில் அமர்ந்திருக்கின்றார். சுவாமிக்கும் அம்பாள் சந்நதிக்கும் இடையில் குரு பகவான் ராஜ குருவாக நின்ற கோலத்தில் தனி விமானத்துடன், தனி சந்நதி கொண்டு காட்சி தருகின்றார். பெரும்பாலான குரு தலங்களில் குருவின் அதிதேவதையான தெட்சிணாமுர்த்தியே குருவாக பாவித்து வணங்கப்படுகின்றார். ஆனால், இத் தலத்தில் மட்டுமே குரு பகவான நவக்கிரக அமைப்பில் உள்ளது போல் தனி சந்நதியில் காட்சி அருள்கின்றார். இவரே இத் திருத்தலத்தின் சிறப்பு மூர்த்தியாவார். இத் தலத்தில் குரு பகவானுக்கு உற்சவ மூர்த்தியும் உண்டு. திருவிழா நாட்களில் இறைவனுடன் இவரும் வீதி உலா செல்வார். இத் திருத்தலத்தை தவிர குரு பகவான் வீதி உலா செல்வதை வேறு எங்கும் காண இயலாது. இது இத் தலத்தின் மிகப் பெரும் சிறப்பு.

குரு பார்க்க கோடி நன்மை

குரு பகவான் சப்த ரிஷிகளில் நடுவரான ஆங்கிரஸ மகிரிஷியின் புதல்வரே. இவரே தேவர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்கின்றார். ஜோதிட ரீதியாக ஐந்தாவது இடத்தில் இருக்கும் குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். உயர் பதவி, கல்வி, செல்வம், குடும்பத்தில் மகிழ்ச்சி இவற்றை சந்தோஷமாக அருள்பவர். குரு பகவான் முழுச் சுபர். தோஷங்களை நீக்குவதில் வல்லவர். கேதுவின் தோஷத்தை ராகுவும், ராகு, கேது இருவரின் தோஷங்களை சனியும், ராகு கேது தோஷத்தை புதனும், புதன் உட்பட ஐவரின் தோஷத்தை சந்திரனும் போக்க வல்லவர்கள். ஆனால் குரு பகவானோ அனைத்து நவக்கிர தோஷங்களையும் போக்க வல்லவர். எனவேதான் " குரு பார்க்க கோடி நன்மை " என்பர்.

பஞ்ச லிங்க ஷேத்திரம்

இத் திருக்கோயிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. மூலவர் சுயம்பு லிங்கமாக ஐந்தாவதாய் எழுந்தருளியுள்ளார். எனவே இத் தலம் பஞ்ச பூதங்களுக்கும் உகந்த ஸ்தலமாக விளங்குகின்றது. திருகாளத்தி, திரு அண்ணாமலை, திருவானைக்காவல், சிதம்பரம் மற்றும் காஞ்சிபுரம் என்ற பஞ்ச பூத தலங்களும் ஒருங்கிணைந்த தலமாக விளங்குகின்றது இத் திருதென்குடித்திட்டை திருக்கோவில்.

திருக்கோவிலின் அமைப்பும், சிறப்பும்

கிழக்கு நோக்கிய ராஜ கோபுரத்துடன் திகழ்கின்ற இத் திருத்தலம் முற்றிலும் கருங்கற்களை மட்டுமே கொண்டு கட்டப்பட்டுள்ளது. நிறைய கோவில்கள் இவ்வண்ணம் கருங்கற் கோவில்களாக விளங்குகின்றன. ஆனால், இத் திருத்தலத்தில் மட்டுமே கொடி, கலசங்களும் கூட கருங்கற்களை கொண்டு வடிவமைக்கப்படுள்ளன. இப் பேரழகினை காண கண் கோடி வேண்டும்.

சந்திர காந்தக் கல்லும், சூரிய காந்தக் கல்லும்

இத் திருக்கோவில் அக்கால கட்டிடக் கலைக்கு ஓர் சிறந்த உதாரணம். கோவிலின் மூலவர் விமானத்தில் சந்திர காந்தக் கல் மற்றும் சூரிய காந்தக் கல் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சந்திர காந்தக் கல் சந்திரனிடமிருந்து குளுமையை வாங்கி 24 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு சொட்டு நீரை மூலவர் லிங்கத்தின் மீது தாமாகவே அபிஷேகம் செய்கின்றது. சிவ பெருமான் , சந்திரனது சாபத்தினை நீக்கி, தன் சிரசில் இருக்க இடம் கொடுத்ததால் சந்திரன் தன் நன்றிக் கடனாக அனு தினமும் இவ்வாறு அபிஷேகம் செய்வதாக ஐதீகம். இந்த அதிசயம் உலகில் வேறெங்குக் காண இயலாத ஒன்று.

தல விருட்சங்கள்

திருக்கோவிலின் முன் உள்ள சக்கர தீர்த்தம் எனும் திருக்குளம் தல தீர்த்தமாகும். இது மஹா விஷ்ணுவின் சக்ராயுதத்தால் உண்டாக்கப்பட்டது. விநாயகர் அருளுடன் சகல சித்திகளையும் அளிக்க வல்லது. இங்கு தேவர்களும், தேவ மாதாக்களும் மரம், செடி, கொடிகளாக மாறி தல விருட்சமாக அருள்கின்றனர். இங்கு மற்ற கோவில்களை போலன்றி தல விருட்சங்கள் பல, ருத்ரன் ஆல மரமாகவும், ருத்ராணி ஸமி மரமாகவும், விஷ்ணு அரச மரமாகவும், லஷ்மி வில்வ மரமாகவும், மற்றைய தேவர் அனைவரும் செடி, கொடிகளாகவும் திருத்தல விருட்சங்களாகவும் அருளுகின்றனர்.

சனி தோஷம் உள்ளவர்கள், அர்த்தாஷ்டம சனி, ஏழரைச் சனி மற்றும் அஷ்டமச் சனி தோஷம் உள்ளவர்கள் ,இத்  தல பசு தீர்த்தத்தில் நீராடி, பசுபதீஸ்வரரை வேண்டி, நவக்கிரகங்களை வலம் வந்து, சனி பகவானுக்கு அர்ச்சனை செய்தால் தோஷங்கள் நிவர்த்தியாகின்றன.

No comments:

Post a Comment