1.ஒரு விஷயத்தைச் சாதிக்கவேண்டும் என்று முடிவு செய்து விட்டால், அதன்பிறகு எப்போதும், எதற்காகவும் நேரத்தை, மனிதசக்தியை வீணடிக்கக் கூடாது.விழித்திருக்கிற நேரத்தையெல்லாம், நம்முடைய லட்சியத்துக்குப் பயன்படும் வகையில் ஏதேனும் உருப்படியாகச் செய்வதில்தான் செலவிட வேண்டும்.
2.பிள்ளைப்பருவத்தில் அல்லது இளமைக் காலத்தில் விளையாட்டாக கற்றுக்கொள்கிற விசயங்களை, அலட்சியமாக நினைத்துவிடாதீர்கள். பின்னாளில் அவையே உங்களுடைய வாழ்க்கையை தீர்மானிக்கக்கூடும்.
3.பணம் சம்பாதிக்கிறவர்கள் எல்லோருக்குமே, அந்தப் பணம் இன்னொருவரிடமிருந்துதான் வந்தாக வேண்டும். ஆகவே அந்த இன்னொருவருக்கு என்ன பிரச்சனை, அதை எப்படித் தீர்க்கவேண்டும் என்பதில்தான் நமது முதல் கவனம், அக்கறை எல்லாம் இருக்கவேண்டும். அப்போதுதான் அவர்களாக மனமுவந்து, நம் சட்டைப் பாக்கெட்டில் பணத்தை வைத்து விடுப்போவார்கள்.
4.வெவ்வேறு நபர்கள் ஒரே குழுவாக இணைந்து வேலை செய்யும்போது, ஒவ்வொருடைய பலங்களையும் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், குழுவின் செயல்திறன் பன்மடங்கு அதிகரிக்கும்.
5.புதுமையான நல்ல விசயங்களைக் கண்டறிவது முக்கியம். அவற்றை மக்களுக்குப் பயன்படும்வகையில் பெரும்பான்மையினரிடம் கொண்டு சேர்ப்பதும் மிக முக்கியம்.
6.யாரையும் முதல் பார்வை/அனுபவத்தைக் கொண்டு தவறாக எடை போடாதீர்கள்.
7.தொழில்துறையில் வெற்றியடைய, தலைமைப் பண்புகள் அவசியமானவை. அவை இல்லாவிட்டால், உங்கள் இலக்கு வெறும் கனவுகளோடு நின்றுவிடும்.
8.இலவச சேவைகளின் மூலமும் தொழிலில் பணம் சம்பாதிக்க முடியும்.
9.உங்களுடைய கனவுகளை மற்றவர்கள் புரிந்துகொள்ளவிட்டால், கவலைப்படாதீர்கள், நம்பிக்கை இழக்காதீர்கள். உங்களுடைய கனவுகளை செயல்படுத்திகொண்டே இருங்கள்.
10.முடிந்தவரையில், நமது தொழிலில் மற்ற நிறுவனங்களை சார்ந்திருக்காமல் பார்த்துக்கொண்டால், நம்முடைய லாபத்தை நாமே தீர்மானிக்கலாம், மற்றும் நமக்கு சுதந்திரமும் கிடைக்கும்.
11.உங்களுடைய நிறுவனத்தை நீங்களே சுய மதிப்பீடு செய்துகொள்ளுங்கள். உங்களுடைய தயாரிப்பின் தகுதியை குறிப்பிட்டு, அதற்குரிய விலையை தயங்காமல் கேளுங்கள்.
12.லாபம் என்பதில், விற்பனை, செலவுகள் என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. இவற்றுள் விற்பனையை நாம் ஓரளவுதான் கட்டுப்படுத்தமுடியும். ஆனால், உற்பத்திக்காக நாம் செய்கிற செலவுகள் முழுக்கமுழுக்க நம்முடைய கட்டுபாட்டிதான் இருக்கின்றன. ஆகவே செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள், எல்லோரிடமும் பேரம் பேசுங்கள், லாபம் தானாக அதிகரிக்கும்.
13.தீயவற்றை செய்யாதீர்கள்!-Do No Evil.
14.மார்கெட்டிங் ஜாலங்கள், விளம்பரத் தந்திரங்கள் போன்றவற்றைவிட, தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகள்தான் ஒரு நிறுவனத்திற்கு அதிகப் புகழை, கூடுதல் லாபத்தை பெற்றுத்தரும்.
15.நம் தொழிலை விரிவுபடுத்த முதலீடு மிக அவசியம். நம் தொழிலை நம்பி முதலீடு செய்யக்கூடியவர்களைத் தேடிக் கண்டறிவதும், அவர்களுக்கு நம்பிக்கையூட்டும்வகையில் நமது கனவை விவரித்து திருப்திப்படுத்துவதும் மிக முக்கியம்.
16.உங்களது ஊழியர்களை, அடிமாடுகள்போல் கொடுத்த சம்பளத்துக்கும் மட்டும் வேலை வாங்காமல், அவர்களுடைய படைப்புத்திறனுக்கு மதிப்பளியுங்கள். அவர்களது புதுமையான யோசனைகளை வரவேற்றுச் செயல்படுத்துங்கள். அதன்பிறகு, உங்கள் நிறுவனத்தின் எல்லா வெற்றிக்கும் அவர்களே அடித்தளமாக இருப்பார்கள்.
17.சிலவிஷயங்கள் காலங்காலமாக இப்படித்தான் செய்யப்படுகின்றன என்பதற்காக நாம் அதை அப்படியே பின்பற்றவேண்டும் என்ற அவசியமில்லை. தேவைபட்டால் புதுமையை கையாளுங்கள்.
18.சில சமயங்களில், வருங்காலத்திற்காக கசப்பான முடிவுகளையும் நாம் எடுக்கவேண்டியிருக்கும். அதற்காக வருந்திகொண்டிருக்காமல் முடிவுகளை தைரியமாக எடுங்கள்.
19.லாபத்தின் ஒரு பகுதியை, உங்களது வாடிக்கையாளர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். இதனால் உங்கள் லாபம் குறையாது, லாபம் கூடும்!
20.பிறரின் விமர்சனத்திற்கு கவனம் செலுத்தாமல், நமது சேவை/ தயாரிப்பின் தரத்தை மேம்படுத்துவதில்தன் நம்முடைய கவனம் இருக்கவேண்டும்.
No comments:
Post a Comment