சிஇஓ-க்களின் பொழுதுபோக்கு
நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஓய்வு நேரம் கிடைப்பதே அரிது. தங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதற்கு பலரும் தங்களுக்குப் பிடித்தமான வகையில் பொழுதைக் கழிக்கின்றனர். இவர்களின் பொழுது போக்குகளும் வித்தியாசமானவையே.
மார்க் ஜூகர்பெக் - ஃபேஸ்புக்
வேட்டைக்குச் செல்வதில் மிகுந்த பிரியம் உண்டு. இதுவரை ஆடு மற்றும் பன்றிகளை வேட்டையாடியுள்ளார். தான் வேட்டையாடியவற்றை சாப்பிடுவது இவருக்கு மிகவும் பிடிக்குமாம். தான் கொன்ற விலங்கை சாப்பிடுவது என்ற கொள்கை காரணமாக இறைச்சி சாப்பிடுவது குறைந்துள்ளதாம். இதற்கு பிராணிகள் நல ஆர்வலர்களின் பிரச்சாரமே காரணம் என்கிறார்.
அனில் அம்பானி - ஏடிஏ குழுமத்தின் தலைவர்
இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் 4-வது இடத்திலிருப்பவர். 2003-ம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற பாஸ்டன் மாரத்தான் போட்டியின்போது முதலீட்டாளர் ஒருவர் இவரது உடல் எடையை குறித்து கேள்வியெழுப்பியபோது ஓட்டப் பந்தயம் மீது ஆர்வம் ஏற்பட்டு அதுவே மாரத்தான் ஓட்டத்தில் ஈடுபட காரணமாயிற்று. மும்பை வீதிகளில் தனது பாதுகாவலர்களோடு இவர் ஓடுவதை அடிக்கடி பார்க்கலாம்.
வில்லியம் கிளே ஃபோர்டு - ஜூனியர் ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் செயல் தலைவர்
ஹென்றி ஃபோர்டின் பேரன். குடும்பத் தொழிலில் ஈடுபாடு அதிகம். அத்துடன் தற்காப்புக் கலைகளில் ஒன்றான டேக்-வான்-டோ-வில் ஆர்வம் உள்ளவர். இந்தக் கலையில் கருப்பு பெல்ட் வாங்கியுள்ளார். ஓய்வு நேரத்தில் டேக்வான்டோ மைதானத்தில் இவரைப் பார்க்கலாம்.
கய் லாலிபெர்ட் - சிர்க் டு சோலில் (சிஇஓ)
உலகின் மிகச் சிறந்த சர்கஸ் நிறுவனத்தை உருவாக்கியவர். போக்கர் கருவி இசைப்பதில் ஆர்வமுடையவர். விண்வெளி பயணத்தில் ஆர்வம் அதிகம். கனடாவின் முதலாவது விண்வெளி சுற்றுலாப் பயணி என்ற பெருமை இவருக்குண்டு. 2009-ம் ஆண்டு விண்வெளிக்குச் சென்று 2 மணி நேர நிகழ்ச்சி மூலம் விண்வெளி பயணம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தியவர்.
ரிச்சர்ட் பிரான்சன் - வர்ஜின் குழுமம் (சிஇஓ)
வித்தியாசமான பயணங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர். உலக சாதனைகளை முறியடிப்பதில் ஆர்வம் கொண்டவர். வாயு நிரப்பிய பலூனில் உலகை சுற்றி வர முயன்று அது முழுமையடையவில்லை. இருப்பினும் ஆங்கிலக் கால்வாயை சிறிய ரக விமானத்தில் 1 மணி 40 நிமிடங்களில் கடந்தவர். இதே தூரத்தை வாயு நிரப்பிய பலூனில் கடந்தும் சாதனை படைத்துள்ளார்.
வாரன் பஃபெட் - பெர்க் ஷயர் ஹாத்வே (சிஇஓ)
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். இவருக்கு உக்லெலே எனும் பழங்கால இசைக்கருவியை இசைப்பது மிகவும் பிடிக்கும். இந்தக் கருவியை ஒமாகாவில் உள்ள குழந்தைகள் நல சங்கத்திற்கு அளித்துவிட்டார். இவரது கையெழுத்திட்ட அந்த இசைக் கருவியை இ-பே நிறுவனம் 11,211 டாலருக்கு ஏலம் விட்டு அந்தத் தொகையை அறக்கட்டளைக்கு அளித்துள்ளது.
வில்லியம் பாரன் ஹில்டன் - ஹில்டன் ஹோட்டல்களின் இணை தலைவர்
குடும்ப தொழிலை பராமரிக்கும் இவர் பறப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர். இதற்காக நெவடாவில் 7.5 லட்சம் ஏக்கர் இடத்தை வாங்கியுள்ளார். கிளைடர், ஹெலிகாப்டர், சிறிய ரக விமான சாகசங்களில் ஈடுபடுவதில் இவருக்கு ஆர்வம் அதிகம். பைலட் லைசென்ஸ் வாங்கியுள்ளார். ஆண்டுதோறும் விமான சாகச போட்டிகளில் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
சாண்டி லெர்னெர் - சிஸ்கோ சிஸ்டம் (சிஇஓ)
குதிரை சவாரி இவருக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் வாள் ஏந்தி சண்டையிடுவது (ஜோஸ்டிங்) இவரது பொழுதுபோக்கில் முக்கியமானது. இதற்காக 800 ஏக்கர் நிலத்தை வர்ஜீனியா மாகாணத்தில் வாங்கியுள்ளார். இங்கு இவர் சவாரி செய்வதற்கேற்ப 12-க்கும் மேற்பட்ட குதிரைகளும் பராமரிக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment