எப்படிப்பட்ட கணக்கா இருந்தாலும் சட்டுனு பதில் கண்டுபிடிச்சிடுவான் கண்ணன், மகா புத்திசாலி!
இந்த ராஜி இருக்காளே, சான்ஸே இல்ல! அவளுக்கு நுனி நாக்குல இங்கிலீஷ் தாறு மாறா விளையாடும்.
ஜானி ரொம்ப ப்ரில்லியண்ட் எல்லா பிசிக்ஸ் லாவும் அவனுக்கு அத்துப்படி! இப்படி கணிதத் திறனும், மொழித் திறனும் பெற்றவர்களை அறிவாளி என்று பாராட்டுவது போல உடல் திறனில் கில்லாடியாக விளங்குபவர்களையும் பாராட்டக் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆனால் விளையாடுதல், நடனமாடுதல் உள்ளிட்டவை புத்திக் கூர்மையோடு எந்தச் சம்பந்தமும் இல்லாதவையாகவே பார்க்கப்படும் நிலையைக் கடுமையாக ஆட்சேபிக்கிறார் பன்முக அறிவுத்திறன் தந்தை கார்டனர். அப்படியானால், விளையாட்டு வீரர் மற்றும் நடனக் கலைஞர் உடல் ரீதியான அறிவுத்திறன் கொண்ட புத்திசாலிகளா என்றால்? ஆம். அவர்கள் மட்டுமல்ல இன்னும் பல்துறை சார் கலைஞர்கள் இந்த வரிசையில் இடம்பிடிக்கிறார்கள்.
அடேங்கப்பா இத்தனையா?
தடகள விளையாட்டு வீரர், நடனக் கலைஞர் தொடங்கி நடிகர், சிற்பி, தச்சர், மெக்கானிக், விவசாயி, தோட்டக் கலைஞர், காட்டிலாகா அதிகாரி, தீயணைப்பு வீரர், அறுவை சிகிச்சை நிபுணர், பிஸியோதெரபிஸ்ட், அக்குப் பங்சர் தெரபிஸ்ட், உடல் பயிற்சியாளர், யோகா நிபுணர், கைவினைக் கலைஞர், கட்டிடக்கலை நிபுணர், ராணுவ வீரர், மலை ஏற்றம், ஆழ் கடல் நீச்சல் போன்ற சாகச விரும்பிகள், சமையல் நிபுணர், சிகையலங்கார நிபுணர் என உடல் அசைவில் யாருக்கெல்லாம் அதீத நாட்டம் இருக்கிறதோ அவர்களெல்லாம் கைனெஸ்தடிக் அறிவு படைத்தவர்கள்தான்.
தன் படைப்பை உருவாக்க, கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள, சிக்கல்களுக்குத் தீர்வு கண்டறிய எவர் ஒருவர் தன் உடலை, தொடு உணர்வை ஒரு ஊடகமாக பயன்படுத்துகிறாரோ அவர் உடல் ரீதியான அறிவுத் திறன் கொண்டவராகிறார். நடனக் கலைஞர் கதையை, பாவனைகளை, தன் உணர்வுகளை, உடல் அசைவின் மூலம் வெளிப்படுத்துகிறார். சிகையலங்கார நிபுணரோ முதலில் தன் கற்பனைத் திறன் கொண்டு கூந்தலை எப்படி அலங்கரிக்கலாம் என முடிவு செய்துவிட்டுப் பிறகு தன் கைகளைக் கொண்டு தன் படைப்பாற்றலுக்கு வடிவம் கொடுக்கிறார். ஆனால், இருவருக்கும் பொதுவான மொழி உடல்மொழிதான்.
விளையாட்டுப் பசங்க
உடலின் செயல்திறனை உடல் ரீதியான செயல்பாடாக மட்டும் சுருக்கிவிட முடியாது. உடல் சார்ந்த அறிவும், உணர்வுகள் சார்ந்த அறிவும் (emotional intelligence) ஒன்றோடு ஒன்று மிக நெருக்கமான தொடர்புடையவை. எதிர்பார்த்த விஷயம் கிடைத்தால் மகிழ்ச்சி, கிடைக்காவிட்டால் அதைவிட மகிழ்ச்சி என எல்லாவற்றையும் லேசாக எடுத்துக் கொள்ளும் மனோபாவத்தை ‘ஸ்போர்டிவ்’ என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.
அதாவது தோல்வியைக்கூட விளையாட்டாய் எடுத்துக் கொள்ளும் மனநிலை. விளையாட்டுத் தனம் என்று சொல்லும்போதே உணர்வு ரீதியாகவும் அலட்டிக்கொள்ளாத மனம் படைத்தவர்கள் என்பதையும் சேர்த்துக் குறிப்பிடுகிறோம் இல்லையா?
இந்த மனோபாவம் குழந்தைகளிடம் தன்னிச்சையாகவே காணப்படும். குழந்தைகளைப் போலவே கைனெஸ்தடிக் அறிவுத்திறன் கொண்டவர்களிடமும் உணர்ச்சிகளை லாவகமாக மட்டுப்படுத்தும் திறன் காணப்படும் என்கிறார் கார்டனர். இந்த கருத்தை வார்த்தைகளின் மூலம் விளக்குவதை விடவும் வாழ்க்கையின் மூலமாக விளக்குதல் சுவாரஸ்யமானதாக இருக்கும். தொடர்ந்து நாம் பார்க்கவிருக்கும் ஆளுமை அதை முழுமையாக ஏற்படுத்தக் கூடியது.
அதிசய பிறவி
நடிகை, ஸ்டண்ட் கலைஞர், நடனக் கலைஞர், ஓவியர், திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர், புகைப்படக் கலைஞர் எனப் பற்பல அவதாரங்கள் எடுத்தவர். 70 வயதில் நீருக்குள் மூழ்கிப் புகைப்படம் எடுக்கும் கலையான அண்டர் வாட்டர் போட்டோகிராபியைக் கற்றுக்கொண்டவர். 101 வயது வரை புகைப்படம் எடுத்தவர். 34 வயதில் ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை முதன் முதலாக ஆவணப்படமாகப் படம்பிடித்தவர்.
திரைப்படத் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆரம்ப காலகட்டமான 1934-ம் ஆண்டிலேயே 60-க்கும் மேற்பட்ட ஒளிப்பதிவு கலைஞர்களை இயக்கியவர். ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரை உலகிற்குப் படமாக அறிமுகப்படுத்தியவர். 2003-ம் ஆண்டில் அவர் இறக்கும்போது அவருக்கு வயது 101. இறப்பதற்கு முன்தினம் கூட ஒரு புகைப்படம் எடுப்பது தொடர்பான கலந்தாய்வில் கலந்து கொண்டவர். பிரபல அமெரிக்கப் பத்திரிகை ‘டைம்’ 20-ஆம் நூற்றாண்டின் நூறு முக்கியக் கலைஞர்களில் ஒருவராக இவரைக் குறிப்பிட்டுள்ளது. திரைப்பட மேதை எனக் கொண்டாடப்படும் அவருடைய படங்கள் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்குப் பாடமாக இருக்கின்றன. இத்தனை புகழாரங்களுக்கும் சொந்தக்காரர் லெனி ரைபென்ஸ்தால் (Leni Riefenstahl) என்னும் பெண்.
உடல் ரீதியான அறிவுத் திறன் படைத்தவர்கள் விளையாட்டு வீரர் முதல் சிகையலங்காரக் கலைஞர்வரை எந்தத் துறையிலும் இறங்கலாம் எனப் பார்த்தோம். ஆனால் ஒரு தனி மனிதர் பல துறைகளில் ஜொலிக்க முடியும் என நிரூபித்தவர் லெனி. லெனி இத்தனை துறைகளிலும் சாதிக்க அடித்தளமாய் அமைந்தது அவர் உடலும், தடைகளைப் படிகளாக மாற்றிய அவர் மன வலிமையும்தான். அவருடைய அத்தனை சாதனைகளுக்கும் பின்னால் பல சோதனைகள் இருந்தன. நாமும் தொடர்ந்து மன வலிமையோடு விளையாட்டாக லெனி பற்றித் தெரிந்து கொள்வோம்.
அண்டர் வாட்டர் போட்டோகிராபி கற்றுக்கொள்ளும் லெனி ரைபென்ஸ்தால்