ஒரு நாள் காகங்களுக்கு சாப்பாடு போட இட்லியைப் பிய்த்துப் போட்டேன். ஒரு காகம் என்னையும் இட்லித் துண்டையும் சந்தேகமாகவே பார்த்துக்கொண்டே நெருங்காமல் தூரமாக நின்றது. ஒருவேளை அதை வேட்டையாடுவதற்கு நான் வீசிய வலை என்று நினைத்திருக்கலாம்.
இன்னொரு காகம் வந்தது. என்னையும் இட்லியையும் அந்தக் காகத்தையும் பார்த்தது. இட்லித்துண்டுகளைக் கவ்விக்கொண்டு பறந்தது.
ஒவ்வொரு வாய்ப்பும் இப்படித்தான் பறிபோகிறது. கண் முன் தெரியும் வாய்ப்புகள் யாவும் நம்மையறியாமலே கடந்து போய்விடுகின்றன. வாய்ப்புகளை எதிர்பார்க்கிறவர்கள் எப்போதாவது பெய்கிற மழைக்கு விதைக்கிறவர்கள். வருகிற வாய்ப்புகளைப் பயன்படுத்து பவர்கள் அப்போது பெய்கிற மழைக்கு விதைக்கிறவர்கள்.
ஆனால் வாய்ப்பை உருவாக்குபவர்கள் ஊற்றைக் கண்டுபிடித்து அல்லது ஊற்றை உருவாக்கி விதைக்கிறவர்கள்.இந்த மூன்றாவது வகையினர்தான் சாதனைகளை உருவாக்குபவர்கள்.
காகங்கள் எனக்குப் போதிமரங்களாக மாறின.
No comments:
Post a Comment