“ஆசிரியர் பணி என்பது ஒரு அறப்பணி. அதற்கே உன்னை அர்ப்பணி” என்பது ஒரு பொதுமொழி. மாதா, பிதாவுக்கு அடுத்தபடியாக ஆசிரியர் இருக்கிறார். அவர் மாணவர்களுக்கு அறிவைப் போதிப்பது மட்டுமல்லாம் அன்போடு அரவணைக்கும் அன்னையைப் போல இருக்கும்போது குரு தெய்வமாகிறார்.
ஆசிரியர் மனநிலையில் மனநிலையில் மாற்றம் நிகழும்போது மாணவரின் மனநிலையில் மாற்றம் தானாக வரும்.வீட்டிலும் பணியிலும் உள்ள பிரச்சினைகளை வகுப்பறைக்கு வெளியே விட்டு விடுங்கள். மாணவர்களிடம் எப்போது நேர்மறை வார்த்தைகளையே பேசுங்கள்.
ஒரு மாணவர் தன் ஆசிரியரை மனத்தில் நிறுத்திவிட்டால் அங்கு கற்றுக்கொள்ளுதல் தானாக நிகழ ஆரம்பித்துவிடும். ஆசிரியர்- மாணவர் உறவு முறை முதலாளி- தொழிலாளி உறவுமுறை போல மாறிவிட்டால் பாடங்கள் மாணவர்களுக்குப் பாரமாக மாறிவிடும்.
ஒரு ஆசிரியர் மாணவர்களுக்குக் குருவாக மட்டுமல்லாமல் நண்பராகவும் வழிகாட்டியாகவும் அன்னையாகவும் இருக்கும்போது மட்டுமே அங்கே அர்ப்பணிப்பு என்பதற்கு ஒரு அர்த்தம் ஏற்படுகிறது.