எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள் என்பது வள்ளுவர் வாக்கு.
பள்ளியானாலும் கல்லூரியானாலும் அலுவலகமானாலும் விளையாட்டானாலும் குடும்பமானாலும் நாம் தக்க நேரத்தில் எடுக்கும் சரியான முடிவுகள் முக்கியமானவை. முடிவுகளை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். எதிர் கால முடிவுகள். உடனடி முடிவுகள்.
நம்முடைய லட்சியங்களை அடையப் பாதையை வகுக்கும்போதும் அதை நோக்கிய பயணத்தில் தவறு ஏதும் நடக்காமலிருக்கவும் நாம் முடிவுகளை எடுக்கிறோம்.
2௦:2௦ முதல் உலகக்கோப்பை மேட்சை யாரும் மறக்க முடியாது. குறிப்பாக அந்த கடைசி ஓவர். இந்தியா ஜெயித்து விட்டது என்று சந்தோஷப்படுவதற்குள் மிஸ்பா உல் ஹக் நம் பவுலர்களை விரட்டியடிப்பார். கடைசி ஓவரை ஹர்பஜன் போடப்போகிறார் என்று நாம் யோசிப்பதற்குள் தோணி அந்த ஓவரை ஜோகிந்தர் சர்மாவிடம் கொடுப்பார். மிஸ்பா, இந்தப் பவுலர் சொதப்பல் தானே என்று நினைத்து வித்தியாசமான ஷாட்டை விளையாடலாம் என்று எடுத்த முடிவின் விளைவு லட்டு மாதிரி  சாந்த் கையில் காட்ச் ஆகிவிடும். மிஸ்பா எடுத்த தவறான முடிவு ஒரு கோப்பைக்கான வெற்றியைத் தீர்மானித்தது.
முடிவெடுப்பதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால் பலவகையான வாய்ப்புகள் கண்முன்னே நிற்கும்போது எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில்தான்.
கல்லூரியைத் தேர்ந்தேடுக்கும் நேர்முகக் கலந்தாய்வில் நான்கு கல்லூரிகளில் நீங்கள் கேட்கும் துறை உள்ளது. உங்களுக்குப் பிடித்த கல்லூரியைத் தேர்ந்தெடுக்கலாம் என்று சொன்னால் நமக்குக் குழப்பம் வரும். யோசிப்போம். இத்தகைய சூழ்நிலைகள் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
# எதை எடுப்பது எதை விடுவது?
# அதை எடுத்தால் நமக்கு நன்மை தருமா தீமை தருமா?
# அந்த முடிவு என்னை மட்டும் பாதிக்குமா, மற்றவர்களையுமா?
# யாரையாவது உதவிக்கு அணுகலாமா அவர்கள் நம்மை இயலாதவன் என்று நினைத்துக் கொள்வார்களா?
நமக்கு ஆலோசனை தேவைப்பட்டால் கண்டிப்பாக எல்லோரும் உதவுவார்கள். ஆகையால் சரியான நபரைத் தேர்ந்தெடுங்கள். எப்போதும் முக்கியமான முடிவுகளை எடுக்கும் தருணத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். கோபத்திலோ, மற்றவரைத் திருப்திபடுத்தவோ நாம் எடுக்கும் முடிவுகள் பயனற்றவை.
எந்த ஒரு விஷயத்திலும் முடிவெடுக்கும் முன் எப்படி அதன் காரண காரியங்களை ஆராய்கிறோமோ அதே அளவு அந்த முடிவால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளையும் பட்டியலிட வேண்டும். அப்போது நாம் எடுக்க வேண்டிய முடிவு பற்றிய தெளிவு கிடைக்கும்.