“வேண்டாம் இது தவறு, இதைச் செய்யாதே “
என்று நமக்குள்ளே ஒரு குரல் கேட்கிறது.
இந்தக் குரல் எங்கிருந்து எதனால் வருகிறது ? சிறு வயது முதலே நாம் நம் ஐம்புலன்களால் பார்த்த, பேசிய, கேட்ட, உணர்ந்த, சுவைத்த மற்றும் நுகர்ந்த அனுபவங்களின் கலவை தான் நாம். அந்த அனுபவங்கள் தான் நம்முடன் பேச ஆரம்பிக்கின்றன.
முள் நிறைந்த பகுதியில் நடக்கும்போது “ மெதுவாகக் காலை எடுத்து வை. அதோ அங்கே ஒரு சிறிய வெற்றிடம் இருக்கிறது. அங்கே காலை வை. முதலில் முன்பக்கக் காலை வைத்து அழுத்திப் பார். முள் இல்லை என்று தெரிந்தால் காலை முழுவதுமாய் வை. கடந்த முறை அவசரப்பட்டதால் ரத்தம் சிந்தினாய். வலியால் துடித்தாய்.” இப்படி அந்தப் பேச்சு நம்மை வழி நடத்துகிறது. அனுபவப் பாடம் அது. உள்குரலாய் நம்மைப் பாதுகாப்பாக உணர வைக்கிறது.
கோபப்பட்டால் ரத்த ஓட்டம் அதிகமாகும். நரம்புகள் புடைக்கும். யோசிப்பது தடைபடும். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அப்போதெல்லாம் நமக்குள் “ அமைதியாகு. இந்த இடத்தை விட்டு வெளியே செல். பேசுவதை நிறுத்து. வார்த்தைகள் உன் கட்டுப்பாட்டில் இல்லை” என ஒரு குரல் கேட்கும்
உலகத்திலேயே நமக்கு மிகச் சிறந்த நண்பன் இந்தக் குரல் தான். இதைக் கேட்காதவர்கள் தான் வெளியில் நண்பர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
உள்குரலைக் கேட்கத் தவறும் போது, முதலில் நமக்குள் வருவது பொய் தான். பொய் வரும்போது உண்மை வெளியே செல்லும். நம்பகத் தன்மை வெளியேறும். நியாயம் அகலும். காமம் உள்ளே வரும்போது குடும்ப அமைதி வெளியேறுகிறது. கோபம் வரும்போது யோசிக்கும் திறன் வெளியேறுகிறது. பொறாமை வரும்போது நிதானம் வெளியேறுகிறது. பேராசை வரும்போது திருப்தி வெளியேறுகிறது. இதை எல்லாம் உள்குரலும் கடைசி வரை ஞாபகப் படுத்துகிறது.
“ நான் பொய் சொல்ல நிறைய வாய்ப்புகள் இருந்தன. ஆனாலும் நான் மனசாட்சிப்படி உண்மையைத் தேர்ந்தெடுத்தேன்” மகாத்மா காந்தியின் இந்த வார்த்தைகளின் அர்த்தம் இப்போது நமக்கு இன்னொரு பரிமாணத்தில் புரிய ஆரம்பிக்கும். உள்ளே கேட்கும் குரலை விடப் பெரிய நீதி மன்றம் இந்த உலகத்தில் இல்லை. இனி வரப் போவதுமில்லை.