Thursday, July 9, 2015

ஸ்ரீராகவேந்திர சுவாமிகள்



           ந்த ஆண்டு ஆவணி மாதம் 6-ஆம் தேதியுடன் (22-8-2013) ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசம் செய்து 342 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அந்த மகான் இன்றைக்கும் நம்மோடு வாழ்ந்து வருகிறார் என்பதற்கு சாட்சியாக பல அற்புதங்கள் நிகழ்ந்து வருகின்றன. அவருடைய புண்ணிய தினத்தில் அவரை வணங்கி, அவருடைய அருளாசியைப் பெற்று அனைவரும் வாழ்வாங்கு வாழவேண்டுகிறோம்.

தர்மபுரியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாப்பாரப்பட்டி எனும் சிற்றூரில், ஸ்ரீராகவேந்திர சுவாமி பிரத்யட்சமாய் காட்சியளித்தார் என்கிற செய்தியைப் படிக்க நேர்ந்தது. அன்று முதல் எனக்கும் பாப்பாரப்பட்டி ஸ்ரீராயர் மடத்தை தரிசிக்கவேண்டும் என்கிற அவா பல்லாண்டுகளாக இருந்துவந்தது. ஆனால் அந்த  பாக்கியம் கிட்டவில்லை. விமானத்தில் ஹைதராபாத் செல்லமுடிகிறது; சதாப்தியில் அடிக்கடி பெங்களூர், மைசூர் என்று போகமுடிகிறது. ஆனால் பாப்பாரப்பட்டி மட்டும் பல்லாண்டுகளாக வாஷிங்டனாகவே எனக்கு இருந்தது. திடீரென்று உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்காக குடும்பத்தோடு தர்மபுரி செல்ல நேர்ந்தது. அன்று மாலையே நான் பாப்பாரப்பட்டி சென்றுவிட்டேன். 

பாப்பாரப்பட்டி ஊரின் உள்ளே நுழைந்து, கடைத் தெருவைத் தாண்டி பாப்பாரப்பட்டி அக்கிரகாரம் என்னுமிடத்தில் அமைந்திருந்தது ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனம். ஊரிலிருந்து தனிமைப்பட்டுக் காட்சியளித்தது அந்த இடம். நான்கைந்து மெலிதான வீதிகள்; சுத்தமான சிமெண்ட் சாலைகள்; குட்டை குட்டையான ஓட்டு வீடுகள்; நடுவில் ஓரிரு மச்சு வீடுகள். ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு பக்கமும் சுகமான திண்ணைகள். மொத்தம் அறுபது வீடுகள்; அனைத்தும் ஒரே மாதிரியாக பளிச்சென்று இருந்தன. அந்த அறுபது வீடுகளிலும் மாத்வ பிராமணர்களே வசித்துவந்தனர்.

என்னுடைய கார் பிருந்தாவனம் அருகே நின்றது. திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மக்கள் சிலர் என்னைப் பார்த்தார்கள். பல ஆண்களின் உடம்பில் கோபிசந்தன நாமம் அவர்களின் பக்திப் பெருக்கைக் காட்டியது.

என்னோடு பலரும் ஆர்வமாகப் பேச ஆரம்பித்தார்கள். 

சுமார் எண்பது வருஷத்து பிருந்தாவனம் இது. 

பாப்பாரப்பட்டியில்- மைசூர் சமஸ்தானத்தில் பணிபுரிந்து புகழ்பெற்ற ஒரு குடும்பத்தில், அண்ணன்- தம்பியாகப் பிறந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீனிவாசன் ஆகியோர். திருமணமாகி நீண்டகாலமாகியும் மக்கட்பேறு இல்லாததால், அண்ணனும் தம்பியும் மந்திராலயம் போய் ஸ்ரீராக வேந்திரரை தரிசித்து, 

அவரிடம் மக்கட்பேறுக்காக வேண்டிக்கொள்ள முடிவு செய்தனர். கடைசியில் தம்பி சீனிவாசனும் அவர் குடும்பமும் மந்திராலயம் சென்று சுவாமிகளை வழிபட்டனர். எல்லாம் நல்லபடியாக முடிந்ததும், தன் அண்ணனான கிருஷ்ணமூர்த்தியை உடனே மந்திராலய சேவையில் கலந்துகொள்ள வரச்சொல்லி கடிதம் எழுதினார் தம்பி ஸ்ரீனிவாசன். கிருஷ்ணமூர்த்தி மறுநாள் மந்திராலயம் செல்ல ஏற்பாடுகள் செய்தார்.  அன்றிரவு அவருக்கு ஒரு கனவு தோன்றியது.

"கிருஷ்ணமூர்த்தி... நீ மந்திராலயம் வரவேண்டாம். நானே பாப்பாரப்பட்டிக்கு வருகிறேன்' என்று கனவில் ராயர் சொல்ல, புளகாங்கிதம் அடைந்தார் அவர். இதை தன் மூத்த சகோதரரான அச்சுதனிடம் சொல்ல, 1933-ஆம் ஆண்டு அச்சுதன் மந்திராலயம் சென்றார். அப்போது பட்டத்தில் இருந்த ஸ்ரீசுவாமிகளிடம் நிகழ்ந்ததைச் சொல்ல, பாப்பாரப்பட்டியில் பிருந்தாவனம் அமைக்க மகிழ்வுடன் இசைந்த ஸ்ரீசுவாமிகள், தன் திருக்கரத்தாலேயே புனித மண்ணை (மிருத்திகை) மூல பிருந்தாவனத்திலிருந்து எடுத்துக் கொடுத்தார். என்ன அதிசயம்! புனித மண்ணோடு ஒரு சிறிய சாளக்கிராமமும் அதிலிருந்தது. உடனே அச்சுதன்மிகவும் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்து, ஸ்ரீசுவாமிகளிடம் அந்த அற்புதத்தைக் காட்டினார்.

சுவாமிகளும் அகமகிழ்ந்து, ""ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனப் பிரவேசம் செய்தபோது (1671-ஆம் ஆண்டு), பிருந்தாவனத்தில் எழுநூறு சாளக்கிராமங்களைக் கொட்டி அதை மூடினார்கள். அதிலொன்று உனக்குக் கிடைத்திருக்கிறது. பாப்பாரப் பட்டியில் இதை வைத்து பிருந்தாவனம் பிரதிஷ்டை செய். எதிர்காலத்தில் உங்கள் ஊர் "தக்ஷிண மந்திராலயம்' என்று புகழ்பெறும்'' என்றார்.

23-5-1935, வியாழக்கிழமை, வைசாக சுத்த சப்தமி அன்று பாப்பாரப்பட்டி முள்பாகல் ஸ்ரீ தயாநிதி தீர்த்தர் என்கிற மகானின் திருக்கரங்களால் பிருந்தாவனம் வெகுவிமரிசையாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்றிலிருந்து ஸ்ரீராகவேந்திரர் இந்த பிருந்தாவனத்தில் வாசம் செய்கிறார் என்பது பல அற்புத நிகழ்வுகளால் தெரியவந்தது. ஒரு சிறிய கிராமம்மந்திராலயத்தைப்போலவே திகழ ஆரம்பித்தது.

பாப்பாரப்பட்டி ஸ்ரீராயரின் பக்தர்களோடு பேசியபோது, அவர்களுடைய வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்ததை கண்களில் நீர்மல்க விவரித்தார்கள். 


சுமார் 60 வயதுள்ள ஒருவரின் மனைவிக்கு கை கால்கள் விளங்காமல் போய்விட்டது. உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் தவித்த தன் மனைவியை பல பெரிய மருத்துவமனைகளில் சேர்த்தும் குணமாக்க முடியவில்லை. இறுதியாக பாப்பாரப்பட்டி பிருந்தாவனத்திற்கு வெகு கஷ்டப்பட்டு அழைத்து வந்தாராம். மனைவியை ஒரு மூலையில் படுக்க வைத்துவிட்டு அவர் பிருந்தாவன தரிசனம் செய்து கொண்டிருந்தாராம். பெரிய கோவில் மணி, ஜாங்கடை, பூஜை மணி ஒலிக்க, ராயருக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. பக்தியோடு வேண்டிக்கொண்டே மனைவி கிடந்த மூலையைப் பார்த்தாராம். அடுத்த நொடி "ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ' என்று அலறிக்கொண்டே ஓடினாராம் அவர். காரணம், அவர் மனைவி மற்றவர்களைப்போலவே நின்றுகொண்டு, மங்கள ஆரத்தியை கைகூப்பிய வண்ணம் தரிசித்துக் கொண்டிருந்தார்! எல்லாம் ராயரின் அனுக்கிரகம்.

""இங்கே முத்தூர் வெங்கட்ராவ் என்கிற பக்தருக்கு ராயர் காட்சி தந்தாராமே? அவர் வீடு எது?'' என்று கேட்டேன்.

""இப்போது அவர் இல்லை. அவரது மகன் கோபாலகிருஷ்ணன் இருக்கிறார். என்னோடு வாருங்கள்'' என்றார் ஒருவர்.

ஒரு சிறிய தாழ்வான ஓட்டு வீடு. வாசல் திண்ணையில் இருவர் பேசிக்கொண்டிருந்தனர். 

என்னை கோபாலகிருஷ்ணனிடம் அறிமுகப் படுத்தினர். 80 வயதுக்குமேல் ஆனவர் அவர்.

""உள்ளே வாங்கோ...'' என்றழைத்துப் போனார். ஸ்ரீராகவேந்திரரை நேரில் தரிசித்த தன் தந்தை ஸ்ரீமுத்தூர் வெங்கட்ராவின் படத்தைக் காட்டினார். மனைவியோடு அவர் இருந்த புகைப்படம் அது. கண்களில் ஒற்றிக் கொண்டேன். என்ன புண்ணியம் செய்த ஆத்மா அது!

வெங்கட்ராவ் அந்த மடத்தின் சமையல் கலைஞர். ஓர் ஏகாதசி அன்று மடத்தினுள்ளே போய், மறுநாள் காலை துவாதசி என்பதால், ஏழு மணிக்குள் ராயருக்கு நைவேத்தியம் படைக்க வேண்டுமே என்று இரவே அங்கு படுத்துக்கொண்டார்.

""வெங்கிட்டு... கார்த்தால நாலு மணிக்கு வீட்டிலேர்ந்து ஸ்னானம் செஞ்சுட்டுப் போயேன்... பக்கத்துலயே பாம்பு, புழு, பூச்சின்னு எல்லாம் இருக்கு... ஏதாவது ஏடாகூடமாயிடக் கூடாதே?'' என்று நண்பர்கள் தடுத்தார்களாம்.

வெங்கட்ராவ் சிரித்துக்கொண்டே  ""பாம்பா? எல்லாம் ராயர் இருக்கார். பாத்துப்பார்...'' என்று சொல்லிச் சென்றிருக்கிறார்.

ஓர் லாந்தர் விளக்கோடு படுத்த வெங்கட்ராவ், இருள் விலகாத அதிகாலையில் கண்விழித்தபோது, எதிரிலிருந்த கிணற்றருகேயிருந்து காவி வஸ்திரங்களோடு ஈரம் சொட்டச் சொட்ட நடந்துபோன ஸ்ரீராகவேந்திரரை அந்த லாந்தர் விளக்கொளியில் பார்த்து பிரமித்துப் போனாராம்!

""இதோ... இதுதான் அப்பா கொண்டுபோன லாந்தர் விளக்கு'' என்றார் கோபாலகிருஷ்ணன்.

அவரோடு பேசிவிட்டு விடைபெற்றபோது, ஓர் மாநிறமான இளம்பெண் என்னை வணங்கினாள்.

""இவள் என் மருமகள்'' என்றார் கோபால கிருஷ்ணன்.

""நீ ஏனம்மா என்னை வணங்குகிறாய். ராயரை நேரில் பார்த்த குடும்பத்தைச் சேர்ந்த வள் நீ. ஏழு தலைமுறைக்கும் அந்தப் புண்ணியம் உன்னைக் காப்பாற்றும்'' என்று வாழ்த்தினேன்.

""பல வருஷங்கள் மந்திராலயம் போனதாகவும், 1962-லிருந்து பல புத்தகங்களில் ராய ரைப் பற்றி எழுதி வருவதாகவும் மாமாவிடம் நீங்கள் சொன்னதைக் கேட்டேன். அதனால் உங்களை வணங்கத் தோன்றியது...'' என்றாள்.

எல்லாம் அவரின் அருள்.

ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ!

No comments:

Post a Comment