புத்தரிடம் உபதேசம் பெற்ற சீடன் ஒருவன் ஓரு கிராமத்திற்குச் சென்றான். அங்கு ஒரு பிச்சைக்காரனைக் கண்டான். அந்த சீடன் பிச்சைக்காரனை அழைத்து, புத்தரிடம் கற்ற தர்ம உபதேசங்களை அவனுக்கு போதித்தான். பிச்சைக்காரனுக்கோ மிகவும் பசி! உபதேசத்தை அவன் சற்றும் கவனிக்கவில்லை! அவனது கவனமின்மையைக் கண்ட புத்தரின் சீடனுக்குக் கோபம் வந்துவிட்டது!
சீடன் நேராக புத்தரிடம் சென்றான். அவரிடம், ""அங்கே ஒரு பிச்சைக்காரனைக் கண்டேன். அவனுக்கு தாங்கள் அருளிய தர்ம உபதேசங்களைக் கூறினேன். ஆனால் அவற்றின் அருமை அவனுக்குத் தெரியவில்லை! அலட்சியமாகக் காதில் வாங்கிக் கொள்ளாமலே இருந்தான். அவனை என்ன செய்வது?'' என்று முறையிட்டான்.
""சரி..., அவனை நீ என்னிடம் அழைத்து வா!'' என்றார் புத்தர்.
சீடனும் பிச்சைக்காரனை அவரிடம் அழைத்து வந்தான். புத்தர் அவனுடைய நிலையைப் பார்த்தார்! பல நாட்களாக அவன் பட்டினி என்பதை அவர் தெரிந்துகொண்டார்! உடனே அவனுக்கு வயிறார உணவு கொடுத்தார்! பிறகு, ""நீ போகலாம்'' என்று சொல்லிவிட்டார்!
இதைப் பார்த்த சீடன் புத்தரிடம், ""நீங்கள் அவனுக்கு உணவுதானே கொடுத்தீர்கள்? உபதேசம் ஒன்றும் செய்யவில்லையே? அவன் எப்படி ஞானம் பெறுவான்?'' என்று கேட்டான்.
""இப்போது உணவுதான் அவனுக்கு நல்ல உபதேசம்! இதுவே அவனது தற்போதைய தேவை. ஆகவே நான் அவனுக்கு உணவளித்தேன்! உயிர் போகும் பசிக்கு உணவுதான் முக்கியம்....,உபதேசமல்ல! ஆர்வமிருந்தால் நாளை அவன் உபதேசம் கேட்க வருவான்!''என்று கூறினார்.
மறுநாள்...,
அந்தப் பிச்சைக்காரன் புத்தரின் உபதேசத்திற்காக ஆசிரமத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான்!
No comments:
Post a Comment