கோபம் ஒரு எதிர்மறையான உணர்ச்சி என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இருந்தாலும் நிறைய பேர் அடிக்கடி கோபப்படுகிறார்கள். அவர்களால் கோபத்தைக் கட்டுப்படுத்தமுடிவதில்லை.
அது சரி, கோபம் ஏன் வருகிறது?
எளிதாக சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் விரும்பியது உங்களுக்குக் கிடைக்கவில்லையென்றால் உங்களுக்கு கோபம் வரும். நீங்கள் விரும்பாதது உங்களுக்குக் கிடைத்தாலும் உங்களுக்கு கோபம் வரும். நீங்கள் விரும்பிய விஷயம் நடக்காமல் போனால் அல்லது விரும்பாத விஷயம் நடந்தால் உங்களுக்குக் கோபம் நிச்சயம் வரும்.
நீங்கள் ஒருவரைக் காதலிக்கிறீர்கள். ஆனால் அவர் உங்களைக் காதலிக்கா விட்டால் உங்களுக்குக் கோபம் வரும். கோபம் மட்டும் அல்ல, மனம் வெகுவாகக் காயப்படும். துன்பத்தில் நரக வேதனை அனுபவிப்பீர்கள். பொறாமையினால் கூட கோபம் வரும். நீங்கள் பாதுகாப்பற்று உணரும்போதும் கோபம் வரும்.
நீங்கள் வசதியாக பிரயாணம் செய்ய விரும்புகிறீர்கள். ஆனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது கோபம் வருகிறது. ஏன், ஒரு முக்கிய விஷயமாக வெளியே செல்லும்போது மழை வந்தால் இயற்கையின் மீது கூட நமக்கு கோபம் வரும்.
சில நியாயமான விஷயங்களுக்காக சில சமயங்களில் கோபம் வரலாம். அது தப்பில்லை. ஆனால் அடிக்கடி கோபப்படுவது உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் கெடுதல் ஆகும்.
கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?
கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கின்ற உறுதி முதலில் வர வேண்டும். நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களுக்காக கோபப்படுவது தவறு என்று உணர வேண்டும். உதாரணமாக மழை மற்றும் போக்குவரத்து நெரிசல் இவற்றிற்கு கோபப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று உணர்ந்தால் கோபம் வராது.
கோபம் உடல் நலத்தையும், மன நலத்தையும் பாதிக்கும் என்பதை உணர்ந்தால் கோபம் வராது. எல்லாவற்றிற்கும் மேலாக யோகா மற்றும் தியானம் தவறாமல் செய்தால் கோபம் நிச்சயம் குறையும்.
வாழ்க வளமுடன்!
No comments:
Post a Comment