Thursday, July 9, 2015

கொகுடிக்கோவில்


            புனல் நாடு, நீர் நாடு என்ற திருப்பெயர்களைத் தாங்கி மிளிரும் நன்னாடுசோழவளநாடு. "செவிலித்தாய் என்ன ஓம்பும் தீம்புனற்கன்னியாம் காவிரி' பாய்ந்து வளப்படுத்தும் நாடு. இங்கே "ஒரு பெண்யானை படுக்கும் சிறிய இடமானது ஏழு யானைகளுக்கு உணவளிக்குமளவு நெல்வளம் சான்றது' என்றனர் முன்னோர். இதன்கண் அமைந்த சிவபிரான் திருக்கோவில்கள் பல.

தமிழகத்தில் விளங்கும் கோவில்களில் சில பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற்கோவில், கொகுடிக்கோவில், இளங்கோவில், மணிக்கோவில், மாடக்கோவில், ஆலக்கோவில் எனும் சிறப்புப் பெயர்களைப் பெற்று விளங்குவதைக் காணலாம். இவற்றுள் "கொகுடிக்கோவில்' என்ற சிறப்புப் பெற்றதும்; தருமபுர ஆதினத்தின் அருளாட்சிக்குட்பட்டதும்; காவிரி வடகரைத் தலங்களில் 37-ஆவது தலமாகப் போற்றப்படுவதும்; பாவலர் மருதூர் அம்பலவாணரால் 298 பாடல்களை தலபுராணமாகக்கொண்டு பெருமை பெற்றதுமான பழம்பதிதான் தலைஞாயிறு. தேவாரப் பதிகத்தில் திருக்கருப்பறியலூர் என குறிக்கப்பட்டுள்ளது.

இறைவன்: குற்றம்பொறுத்தநாதர்;

இறைவி: கோள்வளைநாயகி;

தலவிருட்சம்: முல்லை;

தீர்த்தம்: விநாயக தீர்த்தம், சூரிய தீர்த்தம்.

இத்தலத்தில் விநாயக தீர்த்தம், சூரிய தீர்த்தம், வசிட்ட தீர்த்தம், அனுமன் தீர்த்தம், நிம்புட்கரணி, சங்கபுட்கரணி, பொற்றாமரை, செங்கழுநீர் தடாகம் என எட்டுத் தீர்த்தங்கள் இருப்பினும் விநாயக தீர்த்தம், சூரிய தீர்த்தம் மிகச் சிறப்புடையன.

தக்கன் யாகத்திற்குச் சென்ற தீமையால் பல்லையிழந்த சூரியன் ஒளி குன்றினான். அதனால் அவனியில் அவரவர்களும் தத்தம் கடமைகளையும் ஒழுக்கத்தையும் மறந்தனர். உலகமே இருண்டது. தேவர்கள் சூரியனிடம் சென்று, ""சிவநிந்தகன் செய்த யாகத்தில் சேர்ந்தமையால் வந்த கதி இது. நீ திருக்கருப்பறியலூர் சென்று குற்றம் பொறுத்த நாதரை வணங்கி, அவர்முன் தீர்த்தமுண்டாக்கி விதிப்படி மூழ்கி அர்ச்சித்தால் நோய் நீங்கும்'' 

என்றனர். சூரியனும் அவ்வாறே வழிபாடு செய்து, ஒரு ஞாயிறன்று ஈசனின் அருளைப் பெற்றான். 
ஞாயிற்றுக்கிழமை சூரிய தீர்த்தத்தில் நீராடி வழி படுவது மிகவும் சிறப்பு.

அருக்கன் அர்ச்சனை செய்ததால் ஆதித்தபுரி என்றும்; சூரியனால் அர்ச்சிக்கப்பெற்ற பாங்கினால் அமைந்ததால் தலைஞாயிறு என்றும்; கருமூலத்தைப் பறிப்பதனால்கருப்பறியலூர் என்றும்; "வேதமொடு வேதியர்கள் வேள்வி முதலாக', "மறைவளர்க்கும் அந்தணர் தம் கருப்பறியலூர்' என்ற வாசகங்களால் அந்தணர்கள் பெருகியிருந்த திருத்தலம் என்றும் தலபுராணம் மூலம் தெளிவாக உணர முடிகிறது. மேலும் மலைக்கோவில் என்று சொல்லப்படும் ரத்தினகிரியில் சட்டைநாதரும், தோணியப்பர்- தோணியம்மையாய் உமாமகேஸ்வரர் வீற்றிருப்பதாலும், சீர்காழிக்கு மேற்கே உள்ளதாலும் மேலைக்காழிஎன்ற பெயரும் உண்டு. (இந்த சந்நிதி படியேறிச்சென்று தரிசிக்கும் அமைப்பிலுள்ளதால் மலைக்கோவில் எனப்படுகிறது)முனிவர்கள் வழிபட்டது கயிலை மலைச்சாரலில் ஒரு அழகிய வனம் உண்டு. அதில் அணுவளவு தவம் செய்தாலும் மேரு மலையைப்போல் வளர்ந்து பயன்தரும். அங்குள்ள தடாகத்தின் கரையில் அங்கீரசர், கௌதமர், வாமதேவர், கபாலி முதலான எழுபத் திரண்டு முனிவர்கள் செயற்கரிய பெருந்தவத்தைச் செய்தனர். 

இறைவன் எழுந்தருளி, ""உங்கள் தவத்திற்கு மகிழ்ந்தோம்; பூலோகத்தில் யூதிகா வனம் என்றொரு தலம் உண்டு. (தலைஞாயிறு). அங்கு சென்று தவம் செய்தால் எல்லா சித்திகளும் எய்தலாம்'' என்றருளினார். முனிவர்களும் அவ்வாறே இங்கு வந்து தவம் இயற்றினார்கள்.

இறைவன் அவர்களுக்கு அருள்வழங்குவதற்காக பூதகணம் புடைசூழ, தேவர்கள் வணங்கி நிற்க, அரம்பையர்கள் ஆட, சுயம்பு லிங்கத்திலிருந்து தோன்றியருளினார். இதனைக் கண்ட முனிவர்கள் பரவசப்பட்டு பாடிப் பரவிப் போற்றினர். 

பிறகு முனிவர்கள், ""இன்ப வீட்டினை அருளுதல் வேண்டும்'' என வேண்டிக் கொண்டனர். ஈசனும் ""சில நாட்கள் தங்கி சிவப்பணி செய்யுங்கள். சிவகதி நேரலாம்'' என்றருளினார். முனிவர்கள் அவ்வாறே சில நாள் தங்கியிருந்து சித்தானந்த நிலையை அடைந்தனர்.

இராவணன் வழிபட்டது

இராவணன் மூவுலகையும் வென்று பலருக்கும் துன்பத்தை விளைவித்தான்.  அவனது மகன் மேகநாதன் தந்தையைப்போல் எல்லாரையும் வென்று, இந்திரனையும் வென்று இந்திரஜித் என்ற பெயரையும் பெற்றான். திக்விஜயம் முடித்து இலங்கை செல்வதற்காக புட்பக விமானத்தில் புறப்பட்டான். ஓரிடத்தில் விமானம் தடைப்பட்டு நிற்க, "என் விமானம் தடைப்படுவதா? இதைச் செய்தவர் யார்?' என்று சினந்தான். எங்கனும் தேடி யாரையும் காணாமல் தடுமாறினான். இறுதியில் கீழிருந்த ஆதித்தபுரீசரைக் கண்டான். சிவாலயத்தின்மீது விமானத்தின் நிழல்பட்டதனாலேயே இத்தடை ஏற்பட்டது என்றுவருந்தினான். விநாயக நதியில் நீராடி இறைவனைப் பூஜித்தான். 

விமானம் பறந்து செல்லத் தொடங்கியது. "இந்த அற்புத லிங்கத்தை இங்கேயே விட்டுச் செல்வதா? 
இலங்கைக்குக் கொண்டுபோவோம்' என்ற எண்ணம் இந்திரஜித்துக்குத் தோன்ற, திரும்ப வந்து சிவலிங்கத்தைப் பெயர்த்தெடுக்க முயன்றான். 

இயலாமல் சோர்ந்துபோனான். அப்போது ஆகாயவாணி, "இறைவன் திருவருள் இருந்தாலன்றி எந்தக் காரியமும் நடவாது' என புத்தி புகட்டியது. அதைக் கேட்டதும் மயங்கி விழுந்து பிணமானான் இந்திரஜித்.

இராவணனின் செவிக்கு இந்திரஜித்தின் இறப்புச் செய்தி எட்டியது. ஓடோடி வந்த இராவணன் இறைவன் திருவடியில் வீழ்ந்து வணங்கி, சிறப்பொடு பூசனை செய்து இந்திரஜித்தின் இறப்பினை நீக்குமாறு வேண்டிக்கொண்டான். இறைவனும் அவ்வாறே அருள்புரிந்தார். இதன் காரணமாக இத்தல இறைவனுக்கு குற்றம் பொறுத்தான் என்னும் திருநாமம் விளங்குகிறது.

அனுமன் வழிபட்டது


இராவணாதியர்களைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்க சிவபூஜை செய்ய எண்ணிய ராமபிரான், அதற்கான லிங்கத்தைக் காசியிலிருந்து கொண்டுவருமாறு அனுமனைப் பணித்தார். குறித்த நேரத்தில் அனுமன் வராததால், மணலால் லிங்கம் செய்து பூஜையை முடித்துவிட்டார் ராமபிரான். அதன்பின் வந்த அனுமன் நடந்ததைக் கண்டு வருந்தி, மணல்லிங்கத்தை அகற்ற பெரிதும் முயன்று இயலாமல் சோர்ந்தான். அப்போது ராமபிரான். ""நீ செய்தது சிவ அபவாதம். அது நீங்க தவம் செய்வாயாக'' என்றார்.

அதன்படியே அனுமன் தவம் செய்ய, அவன்முன் தோன்றிய இறைவன், ""கன்மநாசபுரம் (தலைஞாயிறு) சென்று பூஜித்தால் உன் குற்றம் நீங்கும்'' என்றருளினார். அனுமனும் இத்தலம் வந்து வழிபட, சிவபெருமான் அருள்பாலித்தார்.

மகிழ்வுற்ற அனுமன் இத்தலத்துக்கு வடகிழக்கில் லிங்கம் அமைத்து, தீர்த்தம் ஏற்படுத்தி வணங்கினான். அத்தலம் திருக் குரங்குக்கா என வழங்கப்படுகிறது.

விசித்திராங்கன் வழிபட்டது


சிந்து தேசத்து அரசகுமாரன் விசித்திராங்கன். இவன் மனைவி சுசீலை. உலகெலாம் ஒரு குடைகீழ் அரசாளும் பெரும்பேறு பெற்றிருந்தும் குழந்தையில்லாக் குறையால் வாட்டமுற்றான் மன்னன். ஆயினும் தானதர்மங்கள் செய்தலிலும், விரதங்கள் அனுஷ்டிப்பதிலும் கொஞ்சமும் தவறவில்லை. அந்த புண்ணியப்பயன் காரணமாக சுசீலை கருவுற்றாள். மாதம் பத்து நிறைந்தது. ஒவ்வொரு நாளும் இன்று குழந்தை பிறக்கும் என்று எதிர்நோக்கியிருந்தனர். இப்படியே ஐந்தாண்டுகள் சென்றன. "நாம் செய்த புண்ணியப் பயன் இதுதானா? கருக்கொண்டது கனவாயிற்றோ?' என்று கவலைகொண்ட மன்னன் அரசாட்சியை அமைச்சர்களிடம் ஒப்படைத்து விட்டு, சுசீலையுடன் தலயாத்திரை புறப்பட்டான்.

காசி முதலாக பல சிவத்தலங்களை தரிசனம் செய்தபின், இறுதியில் திருப்புன்கூரிலுள்ள ஒரு வேப்பமரத்தடியில் மனைவியுடன் அமர்ந்தான். அப்பொழுது, "நீவீர் அருகிலுள்ள யூதிகாவனம் (தலைஞாயிறு) சென்று விநாயக நதியில் நீராடி பெருமானை வழிபடுங்கள். கவலை ஒழியும்' என்று ஒரு வாக்கு ஆகாயத்தில் எழுந்தது. மன்னனும் அவ்வாறே விநாயக நதியில் நீராடி, நீறுபூசி நித்திய வழிபாடாற்றினான். வழிபாட்டிற்கு மனமுவந்த பெருமான் கவலை நீங்க அருள்பாலித்தான். சுசீலையும் மகவீன்றாள். இருவரும் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்தனர். அந்த மன்னனே சிற்பநூலின்படி இந்த ஆலயத்தை அழகுறஅமைத்தான். 

ராஜகோபுரத்தைக் கடந்ததும் தலவிநாயகர், முருகப் பெருமான், கஜலக்ஷ்மி ஆகியோரை வழிபட்டு, மூலவர் குற்றம்பொறுத்த நாதரை வணங்கியபின், தெற்கு நோக்கிய அம்பிகை கோள்வளைநாயகியை வணங்கி, பின்னர் நடராசப்பெருமானின் தரிசனத்தைக் காண்கிறோம். இதையடுத்து சூரியன், சனி, பைரவர் மேற்கு நோக்கி நின்ற நிலையில் அருள்புரிகின்றனர். 

வெளிப்பிராகாரத்தில் தென்திசையில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இதனையடுத்து மலைக்கோவில் எனப்படும் ரத்தினகிரியில் சட்டைநாதரும், தோணியப்பர்- தோணியம்மையும் உமாமகேஸ்வரராய் வீற்றிருக்கின்றனர். அதன் துர்க்கை சந்நிதி வடக்கு நோக்கி உள்ளது. இதனையடுத்து சண்டிகேஸ்வரர் தனது மனைவி யாமினியுடன் அருள்புரிவது எங்குமில்லாத சிறப்பம்சமாகும். இக்கோவிலில் நவகிரகங்கள் இல்லை. நவக் கோள்களை வளையல்களாக அணிந்து அவற்றின் செயல்பாடுகளை கோள்வளை நாயகியே பார்த்துக்கொள்ளும் விதத்தில் நின்ற நிலையில் அருள்புரிகிறாள்.

கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க, மாணவமணிகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறஅருளுகிறார் இத்தல தட்சிணாமூர்த்தி.

மூன்றாம் குலோத்துங்கச் சோழன், கோ நேரின்மை கொண்டான், திரிபுவன சக்கரவர்த்தி இராசராசதேவர், விஜயநகர அரசர் பிரதாப கிருஷ்ணதேவராயர் ஆகியோர் திருப்பணி செய்த பெருமை பெற்ற தலமாக இது திகழ்கிறது.

""மனிதர்கள் செய்யும் குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்கி மறுபிறவியில்லாத பெரும்பேறு வழங்கும் குற்றம்பொறுத்த ஈஸ்வரரின் பேரருளும், கோள்வளை நாயகியின் பெருங்கருணையும் இத்தலத்தின் எழுச்சிக்குக் காரணங்கள். தலைஞாயிறு க்ஷேத்திரத்திற்கு வாழ்வில் ஒரு முறையாவது சென்று வழிபட வேண்டும்'' என்று உள்ளன்போடு உரைக்கிறார் தலத்தின் பரம்பரை ஆலய அர்ச்சகர் வெங்கடேச சிவாச்சார்யார்.

ஆலயத் தொடர்புக்கு: சந்திரமௌலீ சிவாச்சார்யார், அலைபேசி: 97865 37860.

மயிலாடுதுறையிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலும் மயிலாடுதுறை- மணல்மேடு சாலையில் பட்டவர்த்தி என்ற சிற்றூருக்கு வடகிழக்கே ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது தலைஞாயிறு.

No comments:

Post a Comment