அறிவு கூர்மையும், உழைக்கும் உறுதியும் இருந்து விட்டால் கூட காணும் கனவு நனவாக முடியும் என்கிற கட்டாயமில்லை. விதியின் தீர்மானமும் ஒத்துழைத்தால் மட்டுமே ஒரு கனவு நனவாக முடியும் என்ற கசப்பான உண்மையை ஒரு ஏழை இளைஞன் தன் வாழ்வில் உணர்ந்தான்.
மைசூரைச் சேர்ந்த அந்த இளைஞன் ஒரு ஆசிரியரின் மகன். பள்ளிக்கூடத்தில் அவன் மிக புத்திசாலியான மாணவன் என்று பெயரெடுத்தான். அவனுடைய நீண்ட நாள் கனவு ஐஐடியில் (IIT- Indian Institute of Technology) பொறியியல் வல்லுனராகப் பட்டம் பெற வேண்டும் என்பது தான். அதற்கு நுழைவுத் தேர்வில் மிக நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டும். நுழைவுத் தேர்வு மிகக் கடினமானது. அதற்கான விலை உயர்ந்த புத்தகங்கள் வாங்குமளவு வசதி இல்லை. அதற்கு அளிக்கப்படும் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் பண வசதியும் இல்லை. ஆனாலும் அந்த இளைஞனும் அவனுடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து அந்த நுழைவுத் தேர்வை எழுத எண்ணினர்.
முந்தைய வருடக் கேள்வித்தாள்களுக்கான பதிலை எல்லாம் எல்லோரும் கலந்து விவாதித்து எழுதிப் பார்த்துக் கொண்டு என்னவெல்லாம் கேட்கக் கூடும் என்று ஆலோசித்து அனைவரும் கடினமாக உழைத்தனர். அந்தக் கடினமான நுழைவுத் தேர்வில் அந்த இளைஞன் அகில இந்திய அளவில் பதினேழாம் இடத்தில் வந்தான். புத்தகங்கள் வாங்காமல், பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லாமல் அந்த இடத்தைப் பிடிப்பது சாதாரண விஷயமில்லை. அவன் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை.
ஆனால் ஐஐடியில் பட்டப்படிப்பு முடிக்க ஆகும் செலவை அறிந்த போது அவனுடைய தந்தை அதிர்ச்சி அடைந்தார். ஐந்து மகள்களும், நான்கு மகன்களும் உடைய அந்தத் தந்தைக்கு ஒரு மகனின் கல்வியை மட்டும் கவனித்தால் போதாதல்லவா? ஆசிரியரான அவருக்கு அந்த அறிவாளியான மகனின் கனவுக்கு உதவ முடியவில்லையே என்ற வருத்தம் எந்த அளவு இருந்திருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை. மகனை அழைத்து அவன் கனவுப் படிப்பு தற்போதைய குடும்ப சூழ்நிலையில் சாத்தியமல்ல என்று சொன்னார்.
இறுதியில் அந்த இளைஞன் தன் கனவைக் கலைக்க வேண்டியதாயிற்று. அவனை விடக் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற அவனுடைய சில நண்பர்கள் ஐஐடியில் சேர அவர்களை வழியனுப்பி விட்டு வந்த அந்த இளைஞன் மனம் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஆனாலும் அவன் இடிந்து போய் உட்கார்ந்து விடவில்லை. விதி கொடுமையானது என்று புலம்பிக் கொண்டு செயலற்று இருந்து விடவில்லை. தன்னுடைய வாழ்விற்குத் தானே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும், எது முடிகிறதோ அதை சிறப்பாகச் செய்து வாழ்வைத் தொடர வேண்டும் என்று எண்ணிய அந்த இளைஞன் மைசூரிலேயே உள்ள ஒரு கல்லூரியில் பொறியியல் வல்லுனர் பட்டப் படிப்பு பெற்றார். சிறு சிறு வேலைகள் செய்து கொண்டே 1967ல் அந்தப்பட்டப் படிப்பையும், 1969ல் கான்பூரில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றான் அந்த இளைஞன். எழுபதுகளில் கணினி(கம்ப்யூட்டர்) என்ற அபூர்வ இயந்திரம் இந்தியாவிலும் அடியெடுத்து வைத்தது. அந்தக் காலக் கட்டத்தில் பெரிய பெரிய நிறுவனங்களிலும், சில அரசாங்கத் துறைகளிலும் மட்டுமே கணினிகள் பயன்படுத்தப்பட்டன. அந்த இளைஞன் “பத்னி கம்ப்யூட்டர்ஸ்” என்ற நிறுவனத்தில் 1977ல் பொது மேலாளராகச் சேர்ந்தான். அப்போது கணினிகளின் நுணுக்கத்தை அறிந்து வர அந்த இளைஞனை அந்த நிறுவனம் அமெரிக்காவுக்கு அனுப்பியது.
பட்டப்படிப்பு காலங்களில் கூட வேலைகள் செய்து கொண்டு பணத்தோடு அறிவையும் சேர்த்துக் கொள்ளும் பழக்கத்தைப் பெற்றிருந்த அந்த இளைஞனுக்கு அந்தப் பயணம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அமெரிக்காவில் கணினிகள் பற்றி முழுவதுமாக அறிந்து வந்த அந்த இளைஞன் எதிர்காலத்தில் கணினிகளின் தாக்கம் இந்தியாவிலும் கண்டிப்பாக அதிகமாகவே இருக்கும் என்பதைக் கணித்தான். கணினிகளின் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றைத் தானே ஆரம்பிக்க எண்ணினான். சேமிப்பு ரூபாய் பத்தாயிரம் மட்டுமே கையில் இருந்தது.
அப்போது அவனுக்கு திருமணமும் ஆகியிருந்தது. மனைவியும் படித்து நல்ல உத்தியோகத்தில் இருந்தவள். அவளிடம் அவன் ஆலோசனை கேட்ட போது நல்ல சம்பளம் உள்ள வேலையை விட்டு விட்டு சேமிப்பை எல்லாம் போட்டு ஒரு புதிய முயற்சியில் ஈடுபடுவது புத்திசாலித்தனமல்ல என்று சொன்னாள். நடைமுறைக்கு ஏற்ற நல்ல அறிவுரையாக அது இருந்த போதும் எதிர்காலத்தில் கணினிகள் ஆதிக்கம் கண்டிப்பாக அதிகம் இருக்கும் என்று கணக்குப் போட்ட அந்த இளைஞன் துணிவுடன் தன் மனைவியின் துணையுடனும், தன் நண்பர்கள் சிலர் துணையுடனும் ஒரு புதிய நிறுவனம் ஆரம்பித்தான். புனேயில் 7-7-1981ல் ஒரு சிறிய வீட்டில் ஆரம்பிக்கப்பட்ட அந்த நிறுவனம் இன்று உலக நாடுகளில் எல்லாம் கிளைகள் கொண்ட பிரம்மாண்டமான நிறுவனமாக கோலோச்சி நிற்கின்றது. அந்த நிறுவனம் இன்போசிஸ். அந்த இளைஞன் நாராயணமூர்த்தி.
ஐஐடியில் பட்டப்படிப்பு என்ற ஒரு கனவு கலைந்த போது அவர் தன்னை அதிர்ஷ்டமில்லாதவனாக முத்திரை குத்திக் கொள்ளவில்லை. என்ன செய்தாலும் நமக்கு வாய்ப்பதென்னவோ இவ்வளவு தான் என்று முயற்சிகளை அவர் குறைத்துக் கொள்ளவில்லை. ஒரு கதவை மூடும் இறைவன் அதை விடச் சிறந்த இன்னொரு கதவைத் திறந்து விடக்கூடும். சில கடினமான சூழ்நிலைகள் நம்மைப் பதப்படுத்தவே ஏற்படவும் கூடும். அதற்கெல்லாம் தயாராக இருந்து செயல்படுகிற மனிதனே காலப்போக்கில் வெற்றியடைகிறான் என்பதற்கு நாராயணமூர்த்தி ஒரு நல்ல உதாரணம்.
இறைவன் ஆலமரத்தை பெரியதாக வளர்ந்த மரமாகவே கொண்டு வந்து நட்டு விடுவதில்லை. ஒரு விதையாக உருவாகும் அது ஓர் பெரிய ஆலமரமாக வேண்டுமென்றால் கிடைக்கின்ற காற்று, நீர், பூமியின் சத்துக்கள் எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். காலத்தோடு பொறுமையாகச் செயல்படவும் காத்திருக்கவும் அறிந்திருக்க வேண்டும். அது ஒரு நாள் மரமாகலாம். சில காலம் கழித்து காடே ஆகலாம். ஆனால் அதன் ஆரம்பம் மிகச் சிறிய விதை தான். அது அந்த நிலையில் தாழ்வு மனப்பான்மை கொண்டு விட்டால், சலிப்படைந்து விட்டால் மரமாகும் வாய்ப்பையும், காடாகும் வாய்ப்பையும் என்றுமே இழக்க நேரிடும்.
அறிவு கூர்மையும், உழைக்கும் உறுதியும் இருந்து விட்டால் கூட காணும் கனவு நனவாக முடியும் என்கிற கட்டாயமில்லை. விதியின் ஒத்துழைப்பும் தேவை தான். ஆனால் விதி ஒத்துழைக்காத போதும் மன உறுதியை இழந்து விடாமல் முன்னேறும் மனிதனை மெச்சி அதே விதி அவனுக்கு உதவத் தீர்மானிக்கிறது. எனவே இளைஞர்களே, உங்களுடைய ஓரிரு கனவுகள் கலையக்கூடும். எல்லாக் கனவுகளும் கைகூடும் மனிதர்கள் இது வரை பூமியில் வாழ்ந்ததில்லை. நாம் இன்று போற்றி பிரமிக்கும் எத்தனையோ பெரிய மனிதர்கள் கூட நினைத்தபடியெல்லாம் இருக்க முடிந்ததில்லை. அதை நினைவில் வையுங்கள். கனவு கலைந்தாலும், மனம் கலையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள்ளும் ஒரு நாராயணமூர்த்தி இருக்கலாம். நீங்களும் காடுகளை உருவாக்கும் விதையாக இருக்கலாம். அந்த சாத்தியக்கூறை கௌரவியுங்கள். நம்பிக்கையும், விடாமுயற்சியும் இருக்குமானால் நீங்களும் நிறைய சாதிப்பீர்கள். சிகரங்களை எட்டுவீர்கள்!
No comments:
Post a Comment