இந்த உலகத்தையும் அதிலிருக்கும் பொருட்களையும் இறைவன்தான் படைத்தான். இவையனைத்தும் அவனுடைய உடைமையே. இந்த உண்மையை எல்லா மதங்களும் பறைசாற்றுகின்றன. நிலபுலன்கள், வீடு, வாசல், செல்வம் என எல்லாவற்றையும் ஐஸ்வர்யம் என்ற ஒற்றை வடமொழிச்சொல் குறிக்கிறது. இந்த சொல்லிலேயே மேற்சொன்ன உண்மை ஒளிர்கின்றது. ஐஸ்வர்யம் என்பதை ஈசுவரனுடையது எனலாம். நாம் அனுபவிக்கின்ற எதுவும் நம்முடையதல்ல; ஈஸ்வரனுடையது என்ற எண்ணம் எப்போதும் நமக்கு இருக்கவேண்டும்.
இதில் ஒரு உளவியல் சிக்கல் இருக்கிறது.
அடுத்தவர் பொருளை நாம் அனுபவிக்கும்போது ஒரு குற்ற உணர்வு தோன்றுமல்லவா? அத்தகைய குற்ற உணர்வு தோன்றாமல் தூய உணர்விலேயே அனுபவிக்க வழியுண்டு. அதுதான் தாசமார்க்கம். ஒரு செல்வந்தரின் வீட்டில் பணிபுரியும் வேலையாட்கள், அங்குள்ள வசதிகளை இவர்களும் பகிர்ந்துகொள்வதைப் பார்க்கிறோம். இதேமுறையில் ஆண்டவன் நுகர்ந்து எஞ்சிய போகங்களை சுவைப்பது தொண்டருடைய இலக்கணம் என்று பெரியாழ்வார் பாடுவார்.
"உடுத்துக் களைந்த நின் பீதாம்பர ஆடை
உடுத்துக் கலந்தது உண்டு
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும்
இத்தொண்டர்களோடும்'
என்று தன் குழாத்தை பெருமையோடு கூறுகிறார்.
இறைவனின் பெருமைகளை உன்னிப் பார்ப்போர் அவனை வழிபடுவதற்கு உரிமை நிறைந்த வழிகளைக் காட்டிலும், உரிமையே அற்ற தாச மார்க்கமே சிறந்ததென்று அனுபவித்துள்ளார்கள். உலகங்களையெல்லாம் படைத்து, காத்து, அழிக்கும் பெருந்திறன் உடையவன் இறைவன். இதை உணர்ந்த அன்பர்கள், அவனுக்குத் தொண்டுபுரிவதே நமது தன்மைக்கேற்ற தொழிலென்று அடிமை செய்யவே ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள். இறைவனின் திருவுள்ளத்தை அறிந்தவர் யாருமிலர். அவன் இவ்வாறு செயல்படுவான் என்று அறுதியிட்டுக்கூற யாரும் வல்லாரல்லர். அதனால்தான் திருவுளக் குறிப்பறிந்து தொண்டுசெய்வதே மானிடரால் செய்யக்கூடியது என்று தாச மார்க்கத்தை அனுபவித்தார்கள்.
இறைவனின் தன்மைக்கேற்ப ஒழுகும் கருத்துடைய அன்பர், அவன் குறிப்பறிந்து நடக்கும் தொண்டராக வாழ்வதே சாலச்சிறந்த நெறி. திருப்புகலூர் என்ற புண்ணிய தலத்தில் கோவில் கொண்டுள்ள ஆண்டவனுக்கு தொண்டுபுரிந்த முருகநாயனாரின் சிறப்பைப் பாராட்டி ஞானசம்பந்தர் பாடும்போது, "குறிப்பறி முருகன்' என்கிறார். இறைவனுடைய குறிப்பறிந்து தொண்டாற்றுவதுபோல, இறைவனுடைய தொண்டர்களின் குறிப்பறிந்து தொண்டுபுரிந்ததால் அல்லவோ திருக்குறிப்புத் தொண்டநாயனார் உயர்ந்த கதியை அடைந் தார். இதுபற்றி சேக்கிழார் கூறும்போது,
"புண்ணிய மெய்த்தொண்டர் திருக்குறிப்பு
அறிந்து போற்றுநிலைத்
திண்மையினால் திருக்குறிப்புத் தொண்டர்
எனும் சிறப்பினார்'
என்பார்.
பக்தி மார்க்கத்தில் பல்வேறு நெறிகளும் இறைவனையே சென்றடைகின்றன என்றாலும்,சில நெறிகளில் நடந்துசெல்வது அன்பர்க்கு எளிதாகத் தோன்றுகிறது. ஒவ்வொரு நெறியும்உள்ளத்தில் ஒவ்வொரு வகையான பண்பை உண்டாக்குவது உண்மை. ஆனால் தாச மார்க்கத்தைக் கடைப்பிடித்து ஒழுகுபவர்களுக்கு அடக்கம், பணிவு என்ற சிறந்த பண்புகள் எளிதில் அமைந்துவிடுகின்றன. உரிமை ஏதுமின்றி "ஆண்டவன் பெரியவன்; நான் அடிமை' என்ற எண்ணம், கலைந்துபோகாத ஒரு சாயத்தை உள்ளத்தில் ஏற்றிவிடுகிறது.
ஆணவ மலத்தை அறவே அழித்த தொண்டர்களில், ஆண்டவனுக்கு அருகிலேயே இருந்து அந்தரங்க பணிபுரிந்த தொண்டர்களும் உண்டு; தூரத்தில் நின்று பணியாற்றிய தொண்டர்களும் உண்டு. ஆண்டவன் ராஜாதி ராஜனாக இருக்கிறார். அவனுக்கு அணுக்கத்தொண்டர் களும் மிகுதியாகவே இருக்கிறார்கள். கொல்லிக்காவலன், வில்லவர்கோன், சேரன், முடிவேந்தர், சிகாமணி என்றெல்லாம் விருதுகளைப் பெற்ற குலசேகராழ்வார், மிக விரும்பி ஆசையுடன் பெற்ற பதவி, திருமால் எச்சில் உமிழ்வதற்கான பொன் வட்டிலை தினமும் தூய்மை செய்து அவன் அருகில் வைப்பதே. இதை,
"பின்னிட்ட சடையானும் பிரம்மனும் இந்திரனும்
குன்னிட்டு புகலரிய வைகுந்த நீள் வாசல்
மின்வட்டச் சுடராழி வேங்கடேசன்தான் உமிழும்
பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவேன்
ஆவேனே'
என்ற பாடலில் உணரலாம்.
"ஆளாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்' என்று வெறுத்து, எச்சில் வட்டில் ஏந்தும் கைங்கர்ய சாம்ராஜ்ஜியத்தையே பெரிதாக எண்ணி வாழ்ந்ததை நினைக்கும் போது தாச மார்க்கத்தின் உயர்வு புலப்படுகிறது.
www.v4all.org
ஸ்ரீமத் ராமாயணத்தில், தாச மார்க்கத்தில் நின்று ஸ்ரீராமபிரானுக்கு தொண்டாற்றிய லட்சுமணனின் மனோபாவத்தை ராமபிரானே வியந்து பாராட்டியுள்ளார். இதை கம்பரும், வால்மீகியும் மிக அழகாகப் பாடியுள்ளனர். ஆண்டவனைப் பதியாக எண்ணி வழிபடுவது வேதம் காட்டிய நெறியாகும். யஜுர் வேதத்தில் நடுநாயகமாக விளங்கும் ஸ்ரீருத்ரத்தில், "ஜகதாம் பதயே நம: பசூனாம் பதயே நம:' என்று வேதபுருஷன் வர்ணித்து வணங்குவது மிகச் சிறப்பாகும்.
கிழக்கிந்தியாவில் கங்கையும் பிரம்மபுத்தி ராவும் பாய்ந்து வளமாக்கிய வங்கம், அஸ்ஸாம்பகுதிகளில், சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் பக்திப்புனல் பெருகி ஓடியது. அப்படிப் பெருகவிட்ட மகான்கள் இருவர். வங்கத்தில் ஸ்ரீசைதன்யரும், அஸ்ஸாமில் ஸ்ரீசங்கரதேவரும் ஆவார்கள். ஸ்ரீசைதன்யர் ஸ்ரீகிருஷ்ணனை மதுரபாவத்தால் வழிபட்டு, வங்கம் மட்டுமல்லாமல் பாரத தேசம் முழுவதும் பிரேம பாவத்தைப் பரப்பி அன்புச்சுடரை ஏற்றிவைத்தார். ஸ்ரீசங்கர தேவர் காலத்தால் சில ஆண்டுகள் பிற்பட்டவர். ஸ்ரீகிருஷ்ண பக்தியில் பெரிதும் ஈடுபட்டு தாச மார்க்கத்தில் வழிபாடு செய்தவர்.
ஸ்ரீசங்கர தேவரின் தோற்றத்தினால் காமரூபத்தில் பரவியிருந்த தவறான ஒழுக்கங்கள் மறைந்தன. தூய அன்பு நெறியைக் கடைப்பிடித்து அஸ்லாம் மக்கள் நல்வாழ்வு வாழத் தொடங்கினார்கள். ஆண்டவனின் அடியாராக வாழ்ந்த ஸ்ரீசங்கரதேவர் இசை, இலக்கியம், நாடகம் போன்ற பல துறைகளில் பெரியதொரு மறுமலர்ச்சியை உண்டாக்கினார். அஸ்ஸாமிய சரித்திரத்தில் பெரிய தொண்டாற்றிய ஸ்ரீசங்கரதேவர் 120 ஆண்டுகள் வாழ்ந்த புண்ணிய புருஷர். இசையோடு கூடிய "வரகீதம்' என்ற பாடலில், "ஆண்டவன் என் இதயக் கமலத்திலே எப்போதும் வீற்றிருக்கிறான். அறிவில்லாத நான் அவனை வழிபடும் முறையை அறியவில்லை.
அமுதமாகிய இறைவனின் பெருமையைவிட்டு உலக இன்பமாகிய விஷத்தை அருந்துகிறேனே மாதவனே! உனது அடிமையாகிய இந்த தாசனான சங்கரனை அருள்கூர்ந்து காப்பாயா' என்று கதறுகிறார். கண்ணனை "சேவகபால கோபாலா' என்று அழைத்து, "இந்திரிய சுகத்தை நாடும் என் கீழ்த்தரமான புத்தியை மாற்று' என்று வேண்டுகிறார். உலகத்தவருக்கு நல்லுரை கூறும்பொழுதெல்லாம், "கிருஷ்ண கிங்கரே சங்கரபனே' என்று அழகிய அஸ்ஸாமிய கவிதையில் உரைப்பார். வாழ்நாள் முழுவதும் கண்ணனுக்கு தாசராகவே வாழ்ந்த ஸ்ரீசங்கரதேவர் "கிருஷ்ண கிங்கரே' என்று தனது பாடல்களில் முத்திரையைப் பதித்தார்.
இந்த கலியுகத்தில் தாச மார்க்கத்தைக் கடைப்பிடித்து உழவாரப் பணி செய்து அழியாத சிவ சாயுஜ்யம் பெற்ற திருநாவுக்கரசர் போன்ற மகான்கள் இருந்தனர். ஆதிசங்கரருக்கு தாசனாக இருந்து தொண்டாற்றிய ஆனந்த கிரியை பெரும்புலமைகொண்ட "தோடகாச்சாரியராக' மாற்றிய அற்புதமும் நடந்துள்ளது. ஸ்ரீராமகிருஷ்ண சீடர்களுள் தொண்டாற்றிய சுவாமி நிர்மலானந்த அடிகள், படாநகர் ஆசிரமத்தில் தண்ணீர் ஏந்தியும், உணவு வடித்தும், மலஜலங்கள் கழிக்குமிடத்தை சுத்தம்செய்தும் மனநிறைவு பெற்றார். இதனால் சுவாமி விவேகானந்தர் மனதில் நிர்மலானந்தர் நீங்காத அரியாசனம் பெற்றார்.
"தாச' என்ற சொல் மிகவும் புனிதமான, போற்றத்தகுந்த பெருமை கொண்டது. இறைவனிடம் எல்லையில்லாத பிரேமையும், பக்தியும் கொண்ட மகான்கள் பலர் தாச மார்க்கத்தில் இருந்து அவனைப் பாடி தரிசனம் பெற்றுள்ளார் கள். இந்த வகையில் ராமதாசர், புரந்தரதாசர், கபீர்தாசர், சூர்தாசர், பானுதாசர், கனகதாசர், ஹரிதாசர், காளிதாசர் போன்ற தாசர்களைக் காணமுடிகிறது.
கிடைத்தற்கரிய இந்த மானிடப் பிறவியை வீணாக்காமல், இறைவன் திருவடியை அடைவதற்கான எளிய மார்க்கமான தாச மார்க்கத்தை நாம் எல்லாரும் கடைப்பிடித்து இறை இன்பத்தை அனுபவிக்கலாம்.
No comments:
Post a Comment