மனம் என்றால் என்ன? மனம் என்பது இதயமோ அல்லது மூளையோ அல்ல. எண்ணங்களின் ஓட்டத்தை தான் நாம் மனம் என்று சொல்லுகிறோம். மனம் தான் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அதாவது நல்ல, நேர்மறையான எண்ணங்கள் நல்ல, வெற்றியான வாழ்க்கையையும், தீய, எதிர்மறையான எண்ணங்கள் தோல்விகளையும், துன்பங்களையும் தருகிறது. மனம் மிகவும் வலிமையானது. மனம் அபாரமான சக்தி வாய்ந்தது. மனம் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
மனத்தைக் கட்டுபடுத்துவது மிகவும் கடினம் என்றே சொல்ல வேண்டும். ஆதலால் தான் மனம் ஒரு குரங்கு என்பார்கள். மனம் கட்டுப்பாடின்றி ஓடும் அராபியக் குதிரை போன்றது. உங்கள் வாழ்க்கையின் வெற்றிக்கும் அல்லது தோல்விற்கும் உங்கள் மனதிற்கும் நிறையவே சம்பந்தம் உள்ளது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் மனம் என்னும் குதிரையை கடிவாளமிட்டு உங்களால் கட்டுப்படுத்த முடிந்தால் வெற்றி நிச்சயம். மாறாக, மனம் உங்களைக் கட்டுப்படுத்தி விட்டால், அதாவது மனக்குதிரை கட்டுப்பாடின்றி தாறுமாறாய் ஓடினால் தோல்விகளும், துன்பங்களும் நிச்சயம்.
மனதை நீங்கள் வென்றால் வெற்றியும் சந்தோஷமும் உங்களுக்குக் கிடைக்கும். மனம் உங்களை வென்று விட்டால், மனம் இழுத்த இழுப்பிற்கெல்லாம் நீங்கள் செல்லுவீர்கள். புகை பிடிப்பது, மது அருந்துவது, மற்றும் பிற தீய பழக்கங்கள் உடையவர்கள் மனக்கட்டுப்பாடு இல்லாதவர்கள் தான்.
மனத்தைக் கட்டுப்படுத்துவது தான் வாழ்க்கையின் வெற்றி இரகசியம். எளிதான விஷயம் தான். ஆனால் கடைபிடிப்பது தான் கடினமான விஷயம்.
அடங்கா மனமே அடங்கு.
வாழ்க வளமுடன்!
No comments:
Post a Comment