நற் சிந்தனைகள்
அம்மா-நற் சிந்தனைகள்
அன்பு ஒன்றே மூடிய கதவுகளை எல்லாம் திறக்கவல்லது. எல்லா தடைகளையும் தகர்த்து எல்லா சுவர்களையும் ஊடுருவிச் செல்லக் கூடியதும் அதுவே. உண்மையான அன்புக்கு நம்முள் ஒரு சிறிதாவது இடமிருந்தால் வெகு அழகான பேச்சைவிட அது எவ்வளவோ நலனை நம்மிடத்தும் பிறரிடத்தும் அளிக்க வல்லது.
எம்மனே, நின் அன்பு எனும் புனித புஷ்பத்தை என் உள்ளத்தில் மலர விடு. எங்களை அணுகுவோர் மீது அதன் நறுமணம் வீசட்டும். இந்நறுமணம் அவர்களை தூய்மைப்படுத்தட்டும்.
இந்த அன்பில்தான் அமைதியும் இன்பமும் உள. சக்திகளுக்கெல்லாம், ஆத்மாநுபவங்களுக்கெல்லாம் பிறப்பிடம் அன்பே. அன்பே கைகண்ட பரிகாரி. இணையற்ற ஆறுதல் அளிப்பதும் இதுவே. அனைத்தையும் வென்று தருவதும் இதுவே. அன்பே பரமாசாரியன்.
சுவாமி சின்மயானந்தர்- நற் சிந்தனைகள்
உள்ளம் முழுவதும் அன்புமலர்கள் மலரும் போது, வாழ்க்கையில் அழகும் ஆனந்தமும் புல்வெளியாகப் படர ஆரம்பிக்கின்றன. அப்பசும்புல்வெளியில் தெய்வசக்தியும், மனிதபக்தியும் கைகோர்த்து நடனமிடுவதைக் காணலாம்.
அன்னை சாரதாதேவி-நற் சிந்தனைகள்,
நாம் மட்டும் சிறந்தவர்கள் என்ற அகந்தை கொண்டு பிறரை அவமதிப்புடன் எண்ணாதீர்கள். உலகில் அற்பமானவர் என்று யாரும் இல்லை. வீட்டை தூய்மைப்படுத்தும் துடைப்பம் கூட முக்கியமான பொருள் தான். சிறிய செயல், பெரிய செயல் என்று எதுவுமே இல்லை. எல்லாவற்றையும் மதிப்புடனே செய்யும் பண்பு நம்மை நெறிப்படுத்தும்.
சுவாமி ரமணர்-நற் சிந்தனைகள்
இவ்வுலகில் உள்ள இன்பங்கள் அனைத்தும் அழியக் கூடியவை. எல்லா இன்பங்களும் இறுதியில் துன்பத்தையே தரும். இவையெல்லாம் நம் அறிவிற்கு தெரித்த போதிலும் நாம் இன்பத்தையே நாடுகிறோம். இதற்கு முடிவுதான் என்ன? கடவுளை நினைத்து வழிபட்டால் அன்றி,ஆசைகளில் இருந்து விடுபட முடியாது. எல்லா இன்பங்களையும் அனுபவித்து விட்டு, இறுதியில் இறைவனை அடையலாம் என்றால் காலம் தான் கடந்து போகும். ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் எதை நினைத்துக் கொண்டிருக்கிறானோ அதை இறக்கும் தருவாயிலும் நினைப்பான். இல்லறத்தில் உள்ளவன் குடும்பத்தைப் பற்றி நினைக்கின்றான்.
கிருபானந்த வாரியார்-நற் சிந்தனைகள்
கொடுத்த கடனைத்திருப்பிக் கொடுக்காதது எவ்வளவு பெரிய பாவமோ
அத்தனை பெரிய பாவம் இறைவனை நாள்தோறும் வணங்காததும் ஆகும்.அதனால் தான் “என் கடன் பணி செய்து கிடப்பதே“ என்றார் அப்பர்.இறைவன் தந்த உடம்பினால் அவனை வழிபடுவதை “அவனருளாலேஅவன் தாள் வணங்கி“ என்கிறார் மாணிக்கவாசகர்.
புத்தர்-நற் சிந்தனைகள்
பிறர் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி அவர்களுடைய குறைகளையே காணுபவர்கள், பிறரைப் பற்றி புறஞ்சொல்லும் குணமுடையவர்கள், இறுதியில் தங்களுடைய குறைகளை திருத்த முடியாமல் தவிப்பார்கள்.
திருவள்ளுவர்-நற் சிந்தனைகள்
ஒருவனுக்கு அமையும் நட்பைப் பொறுத்தே> அவனுக்கு அறிவும்> நடத்தையும் அமைகிறது. நல்லவர்களுடன் சேர்வதால் மனம் சுத்தமாகவும்> செயல்கள் நல்லதாகவும் இருக்கும். ஒருவன் தான் செய்த நற்செயல்களால் மட்டுமே இறந்த பின்பும் புகழ்பெற்றிருக்க முடியும். அப்படிபட்ட செயல்கள் பெற நல்ல குணமும்> நல்லோர்களின் நட்பும் அவசியம் வேண்டும்.
வேதாத்திரி மகரிஷி-நற் சிந்தனைகள்
ஒவ்வொருவரும் உலகில் பிறக்கிறோம். வளர்கிறோம். வாழ்கிறோம், முடிவடைகிறோம். வாழ்கிற காலத்தில் பொருட்கள் பல தேவைப்படுகின்றன. சொந்தங்கள் அவசியமாகின்றன.
ஆனால் எவரும் பிறக்கின்றபோது எதையும் கொண்டு வருவதும் இல்லை. இறக்கின்றபோதும் கொண்டு போவதும் இல்லை.
மனித சமுதாயம் தான் ஒவ்வொருவருக்கும் வாழ்வளித்து வருகின்றது. அத்தகைய சமுதாயத்திற்கு தனது அறிவாற்றல், உடலாற்றல் ஆகிய இரண்டின மூலமும் நாம் கடனாற்ற வேண்டும்.
எல்லோரும் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய முறையில் கடனாற்றினால் மனித சமுதாயம் எப்போதும் வளத்துடன் இருக்கும்.
No comments:
Post a Comment