வெற்றிகளையும் தோல்விகளையும் கொண்டது தான் இந்த மனித வாழ்க்கை. சிலர் நிறைய மற்றும் பெரிய வெற்றிகளை எளிதில் பெற்று விடுகின்றனர். பலர் குறைந்த வெற்றிகளையும் பெரிய தோல்விகளையும் வாழ்க்கையில் சந்திக்கின்றனர். இதற்கெல்லாம் என்ன காரணம்?
வெற்றி பெற்றவர்கள் எல்லாம் அதிகமாக உழைத்தார்கள் என்று நீங்கள் சொல்லலாம். கடுமையாக உழைத்தவர்களெல்லாம் வெற்றி பெற்றிருக்கிறார்களா? நிச்சயம் இல்லை என்பதே உண்மை. கடின உழைப்புடன் புத்திசாலித்தனமும் வேண்டும் என்று நீங்கள் சொல்லலாம். உண்மை தான். ஆனால் கடினமாக உழைத்த அத்தனை புத்திசாலிகளும் வெற்றி பெற்றிருக்கிறார்களா? மீண்டும் இல்லை என்பது தான் என் பதிலாக இருக்கும். ஆக நமக்கும் மேலே ஒரு சக்தி நம் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கிறது என்றே தோன்றுகிறது.எதற்கும் விஞ்ஞான பூர்வமான ஆதாரங்களை எதிர்பார்ப்பவர்களும், இது வரை அதிக அல்லது பெரிய தோல்விகளை சந்திதித்திராதவர்களும் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதும் எனக்கு புரிகிறது. அது போல் சிந்திக்க அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது.
அந்த நமக்கு அப்பாற்ப்பட்ட சக்தியை கடவுள் என்று வைத்துக் கொள்வோம். அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பார்கள். கடவுளின் அருளின்றி எந்த வெற்றியையும் யாரும் பெற இயலாது என்பது தான் நிஜம். அப்படி என்றால் கடவுளின் அருள் மட்டும் இருந்தால் நீங்கள் உழைக்காமல், புத்திசாலித்தனம் இல்லாமல் ஜெயிக்க முடியுமா என்ற கேள்வி எழுகின்றது அல்லவா? நிச்சயம் முடியாது. உழைக்காமல், புத்திசாலித்தனம் இல்லாது எந்த வெற்றியையும் பெற இயலாது.
கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது அல்லவா? ஒரு உதாரணம் மூலம் இதை எளிதில் புரிந்து கொள்ளலாம். உங்களுக்கு கடவுள் அருள் இருப்பதாக கருதிக்கொள்வோம். நீங்கள் தானாகவே கடினமாக உழைப்பீர்கள். தேவைப்படும் புத்திசாலித்தனமோ அல்லது புத்திசாலிகளின் உதவியோ தானாகவே கிடைத்து விடும். வெற்றியும் கிட்டிவிடும். போதிய கடவுள் அருள் இல்லாதவர்கள் எவ்வளவு தான் திறமை மற்றும் அறிவு படைத்தவர்களாயினும், எவ்வளவு தான் கடுமையாக உழைத்தாலும் அவர்களால் பெரிய வெற்றிகளைப் பெறவே முடியாது என்பது தான் வாழ்க்கையின் இரகசியம் ஆகும்.
அது சரி, எப்படி ஒருவர் நிறைந்த கடவுள் அருள் பெறுகிறார்? அல்லது மற்றொருவருக்கு கடவுள் அருள் ஏன் குறைவாக இருக்கிறது?
யாரொருவர் அதிக புண்ணியங்களும் , குறைந்த பாவங்களும் செய்திருக்கிறார்களோ அவர்களுக்கு நிறைந்த கடவுள் அருள் கிட்டும் எனபது தான் நியதி. ஒருவர் குறைந்த புண்ணியங்களும் , நிறைய பாவங்களும் செய்திருந்தால் அவருக்கு கடவுள் அருள் குறைந்த அளவிலேயே கிடைக்கும்.
எல்லா மதத்திலும் தத்துவம் சரியாக இருப்பதாகவே எனக்குப் படுகிறது. வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்கள் எந்த மதத்திலிருந்தாலும், அதை எடுத்துக் கொள்ள வேண்டும் அது தான் புத்திசாலித்தனமாகும்.
No comments:
Post a Comment