குழந்தைகளின் இயக்கத்திறன் குறைபாடுகள்
மனசே... மனசே... டாக்டர் சித்ரா அரவிந்த்இயக்கத்திறனில் (Motor skills) குறைபாடுகள் என்பது குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகளில் ஒன்று. இவ்வகைக் கோளாறு, குழந்தையின் அசைவு சார்ந்த செயல்பாடுகள் மற்றும் இயக்க ஆற்றலில் பாதிப்பு ஏற்படுத்தும். பொதுவாக இயக்கத்திறன் குறைபாடுகள் குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பித்துவிடும். இவ்வகைக் குறைபாடுகளில், வளர்ச்சி ஒருங்கிணைப்பு குறைபாடு என்பது, பொதுவாக ஒருவரின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.
மீதமுள்ள எல்லா வகைக் கோளாறுகளும், குழந்தை வளர்ந்து 18 முதல் 20 வயது ஆகும்போது பெரும்பாலும் மறைந்து போகும். ஆனால், குழந்தைப் பருவத்திலேயே இந்தக் கோளாறு ஏற்படுவதால், குழந்தையின் பல்வேறு வளர்ச்சிகளையும் இது பாதிக்கும். அதனால் இயக்கத்திறன் குறைபாடுகளின் அறிகுறிகள், காரணிகள், தாக்கம் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து அறிந்து கொள்வது மிகவும் அவசியம். குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தக்க சிகிச்சை எடுத்துக் கொள்ள இது உதவும். இனி 6 வகை இயக்கத்திறன் குறைபாடுகள் பற்றி விரிவாக அறிவோம்.
வளர்ச்சி ஒருங்கிணைப்பு குறைபாடு (Developmental Coordination Disorder)
இக்குறைபாடு குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பித்து விடுகிறது எனினும், 6-12 வயதுகளில்தான் பொதுவாக கண்டறியப்படுகிறது. சகவயதினருடன் ஒப்பிடுகையில், குழந்தையின் இயக்கத்திறன் ஒருங்கிணைப்பு (Coordination) வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் பலவீனமாக இருக்கும். இதனால், அக்குழந்தையின் கல்வி ஆற்றல் மற்றும்
அன்றாட வாழ்க்கை செயல்பாடுகள் பாதிக்கப்பட்டிருக்கும். பொதுவான மருத்துவ கோளாறுகளான பெருமூளை வாதம் (Cerebral palsy), பக்கவாதம் (Hemiplegia) அல்லது தசை வலுவிழப்பு (Muscular Dystrophy) போன்றவை ஏற்படுத்தும் அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பினும், இவை வெவ்வேறு வித கோளாறுகளாகும். இவ்வகை குறைபாடு, அறிவுத்திறன் குறைபாடு (Intellectual Disability), மனஇறுக்க வகை சீர்கேடுகள் (Autism spectrum disorders), கவனப்பற்றாக்குறை (Attention deficit) குறைபாடு, கற்றல் குறைபாடு (எல்.டி.) போன்ற பிற நரம்பியல் வளர்ச்சி குறைபாடுகளுடன் சேர்ந்தும் காணப்படலாம்.
வளர்ச்சி ஒருங்கிணைப்பு குறை பாடுள்ள குழந்தையின் அறிகுறிகள்?
உடல் அசைவுகளில் நேர்த்தியற்ற தன்மை (Clumsy), நிலையற்ற நடை, படிக்கட்டில் நடப்பதில் சிக்கல், அடிக்கடி கீழே விழுவது...
கல்வி சம்பந்தப்பட்ட வேலைகளை நேரத்துக்கு முடிப்பதில் சிரமம்...
இயக்கத்திறன் சம்பந்தப்பட்ட வேலைகளை செய்வதற்குக் கூடுதல் முயற்சி மற்றும் கவனம் தேவைப்படுதல்...
தினசரி செயல்பாடுகளான உடை அணிதல், சாப்பிடுதல், அலங்காரம் செய்து கொள்வதில் சிரமம்...
விளையாட்டு மைதானத்தில் சிரமப் படுதல், விளையாட்டை தவிர்ப்பது/ குறைந்த ஈடுபாடு காட்டுவது...
புது இயக்கத்திறன்களை கற்றுக்கொள்வதில் சிரமம். எத்தனை முறை ஒரு இயக்கத்திறன் சம்பந்தப்பட்ட செயலை செய்தாலும் (பந்தைப் பிடிப்பது), மறுமுறை செய்யும் போது புதிது போலவே இருப்பது...
அமர்ந்திருக்கும் போதோ, பந்தை பிடிப்பது / தூக்கிப் போடும் போதோ, வித்தியாசமாக நேர்த்தியற்ற நிலையில் காணப்படுதல் (Clumsy/awkWard posture)...
9 முதல் 12 மாதங்களில் பால் குடிப்பதிலும் உணவை விழுங்குவதிலும் சிக்கல்...
மொத்த இயக்கத்திறன் (குதிப்பது, ஒரு காலில் நிற்பது...) மற்றும் நேர்த்தியான இயக்கத்திறன்களில் (எழுதுவது, ஷூ லேஸ் கட்டுவது...) சிரமம், இயக்கத்திறன் வளர்மைல்கற்களை அடைவதில் தாமதம்...
காரணிகள்?
வளர்ச்சி ஒருங்கிணைப்பு குறைபாடு ஏற்படுவதற்கான சரியான காரணம் இன்றும் கண்டறியப்படவில்லை. பரம்பரை, மரபு, நாள்பட்ட நோய்/காயம், குறைப்பிரசவம், கர்ப்பத்தின் போது சத்துப் பற்றாக்குறை போன்றவை பொதுவான காரணிகளாகக் கூறப்படுகின்றன.
ஏன் இப்படி?
இக்குறைபாடுள்ள குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மாறுபட்டு இருப்பதால் புது இயக்கத்திறன்களை கற்பதில் சிக்கல் ஏற்படுகிறது. ஒரு செயலை செய்வதற்கு வேண்டிய மூளை செயல்பாட்டு உத்திகளான உணர்தல், கிரகித்தல், திட்டமிடுதல், அளவிடுதல், இயக்குதல் போன்றவற்றை ஒருங்கிணைப்பதில் கோர்வை இல்லாததால் அவர்களின் இயக்கத்திறனில் நேர்த்தியின்மை ஏற்படுகிறது.
விளைவுகள்?
வளர்ச்சி ஒருங்கிணைப்பு குறைபாடு உள்ள குழந்தை தன் வயதொத்த குழந்தை செய்யும் தினசரி வேலைகளைக் கூட செய்ய முடியாமல் திணறக்கூடும். கல்வியில் செயல்திறன் பாதித்து, தன்னம்பிக்கை இழக்கவும் நேரிடும். குழந்தைகள் மிகவும் விரும்பும் விளையாட்டில் கூட பங்கேற்க முடியாமல் போவதால், ஏமாற்றமும் வருத்தமும் ஏற்படும். உடல் உழைப்பு இல்லாத காரணத்தால் பருமனாகவும் காணப்படுவார்கள். நேர்த்தியற்ற செயல்பாடுகளால் மற்றவரின் கேலிக்கும் ஆளாவார்கள். இதனால், இவர்களின் சமூகத்திறன், கல்வித்திறன் பாதிக்கப்பட்டு, உணர்ச்சி மற்றும் நடத்தை பிரச்னைகளுக்கு உள்ளாகும் நிலையும் ஏற்படுகிறது.
சிகிச்சை?
வளர்ச்சி ஒருங்கிணைப்பு குறைபாட்டை முழுவதுமாக குணப்படுத்த இயலாது. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், தகுந்த சிகிச்சை அளித்து நிலையை மேம்படுத்தலாம். பொதுவாக, பிசியோதெரபி மற்றும் தொழில் முறை சிகிச்சையே (Occupational therapy) அளிக்கப்படுகிறது. இயக்கத்திறன்களைக் கற்பதற்கு இடைவிடாத பயிற்சியும், தோல்வியை பொறுத்துக் கொள்ளும் மனப்பான்மையும் மிகவும் அவசியம். தினசரி வாழ்வில், பெற்றோரும் ஆசிரியரும் பாதிக்கப்பட்ட குழந்தை புதுத் திறன்களை கற்கும் போது ஊக்கம் கொடுப்பது மிக அவசியம். ஒவ்வொரு குழந்தைக்கும் இயக்கத்திறன் பிரச்னை ஒவ்வொரு விதமாக இருக்கும். அதனால், குழந்தையின் பிரச்னைக்கேற்ப, அதைச் சமாளிக்கும் விதத்தில் பயிற்சிகள் அளிக்கப்படும். இந்த வழிகாட்டல் மூலம் நிறைவான வாழ்வுக்கு வேண்டிய புதிய உத்திகளை குழந்தைகள் கற்றுப் பலன் பெறலாம்.
Yours Happily
Dr.Star Anand Ram
Psychology consultant
www.v4all.org
No comments:
Post a Comment