Sunday, April 19, 2015

திறமைகளை கண்டுபிடிப்பது எப்படி?

திறமைகளை கண்டுபிடிப்பது எப்படி?

ஒவ்வொருவரிடமும் பல்வேறு திறமைகள் ஒளிந்துள்ளன. அவற்றை எவையென்று தேடிக்கண்டுபிடிக்கும் போது தான் அவர்களுக்குள் புதிய மறுமலர்ச்சியை உருவாக்க முடியும். அவர்களிடம் இருக்கும் ஒவ்வொரு விதமான ஆற்றலும் உள்ளொளியாக இருந்து பிரகாசிக்கிறது. அந்த ஆற்றலை அவரவர் சூழ்நிலை, சக்தி, அறிவு போன்ற அம்சங்களுக்கேற்ப, அவரவர் மட்டுமே வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு முதலில் தங்கள் இயல்பான திறமை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். திறமையை மதிப்பிடும் போது நமக்குள் இருக்கும் ஆசைகள் மற்றும் கனவுகளையும் திறமை தான் என்று அதனுடன் சேர்த்துவிடக் கூடாது.

உதாரணமாக, சர்க்கஸ், சினிமா, நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகளை பார்க்கும் போது, அதில் வரும் கதாநாயகர்களை போல நாமும் செய்து பார்க்க ஆசைபடுவதுண்டு. இந்த மாதிரி ஆசைபடும் ஒரு சிலர் வேண்டுமானால், பிற்காலத்தில் சினிமா நட்சத்திரங்களாகலாம். அல்லது சர்க்கஸ் வீரர்களாகலாம். அல்லது சந்தர்ப்பமும், சுயமுயற்சியும் சேர்ந்து அவர்கள் விரும்பும் எதிர்காலம் அமைய உதவுகிறது. ஆனால், சினிமா நடிகர்களாக வரவேண்டும் என ஆசைபடும் அனைவருக்குமே எதிர்காலத்தில் அவர்கள் ஆசை நிறைவேறுவது இல்லை. காரணம், நடிப்புத்திறமை அவர்களுக்கு இயல்பான ஆற்றலாக இல்லாமல் இருப்பது தான் காரணம்.

இதே போல் பல துறைகளிலும் நமது ஆசையும் கனவும் விரிந்து பரந்திருந்தாலும், எதிர்காலத்தில் அவரவர் திறமை, ஆற்றலுக்கு ஏற்பதான் அவை நிறைவேறும். அதனால், நமது திறமையை மதிப்பிடும்போது அவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, பொறியியல் துறையில் மாணவன் அடிப்படை பயிற்சிகளை பெற்று வருகிறான். உண்மையில் அவனுக்கு அதில் ஆர்வம் இருந்தால், அந்த ஆர்வம் பயிற்சியின் போதே தெளிவாகத் தெரிந்துவிடும். ஒரு துறையில் சிறிதும் ஆர்வமில்லாதவர்களுக்கு அந்த துறையானது, அவர்கள் வேலைசெய்யும் போதே, தெரிந்து விடும். அவர்களுக்கு அந்த வேலை பெரிய சுமையாகத் தோன்றும்.

குறிப்பாக, எந்த துறையில் நமக்கு நீடித்த ஆர்வமும், உற்சாகமும் தொடர்ந்து இருக்கிறதோ அதில் தான் நமது திறமை உள்ளது என்பதை உணர்ந்து அந்த வழியில் முயற்சி செய்ய வேண்டும். திறமைக்கான தேடல்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் இருக்க வேண்டும். அதுவே வாழ்நாள் முழுவதும் நீடித்து விடக்கூடாது. திறமையை கண்டுபிடித்தவுடன் அதை வளர்ப்பது எப்படி என்பது குறித்த திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

இரண்டு முறையான பயிற்சிகளின் முலம் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம். அவற்றில் ஒன்று நேரடிபயிற்சி முறை. மற்றொன்று சுயமுயற்சி. நேரடிபயிற்சி முறைபடி கற்க வசதி மற்றும் வாய்ப்புகள் இல்லாதவர்கள் சுயமாக கற்றுக்கொள்ளலாம். `சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’, `கண்டதும் கற்க பண்டிதன் ஆவான்’ போன்ற பழமொழிகள் பயிற்சியின் அடிப்படையை நமக்குக் கற்றுத்தருகிறது. விடாபிடியாகத் தொடர்ந்து முயற்சியில் ஈடுபடும்போது எவருக்கும் எந்தக்கலையிலும் தானாகவே சரியான பயிற்சி கிடைத்துவிடும் என்பதே பழமொழிகள் உணர்த்தும் உண்மை. குறிப்பாக, கலைத்துறையினருக்கு இது பொருத்தமாக இருக்கும். சரியான வசதி வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், முறையான முயற்சியிருப்பின் பயிற்சி உங்களுக்கு எளிமையாகவே இருக்கும்.

No comments:

Post a Comment