1987. நாகராஜன் திருப்பூரிலிருந்து சென்னை வந்திருந்தார். அவரும், பத்து நண்பர்களும் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்குப் போனார்கள். வாயிற்காப்பாளர் அவர்களை நிறுத்தி னார்.
“நீங்கள் ஹோட்டலுக்குள் போக முடியாது.”
“ஏன்?”
“பான்ட் சட்டை போட்டவர்களை மட்டுமே அனுமதிக்கவேண்டும் என்பது எங்கள் ஹோட்டல் விதிமுறை.”
நாகராஜன் மட்டும் வேட்டி கட்டி யிருந்தார். மற்ற அனைவரும் பான்ட் சட்டைகளில். நண்பர் வரக்கூடாது என்றால், தாங்களும் அங்கே சாப்பிடப் போவதில்லை என்று முடிவு செய்தார்கள். தனக்காக ஒரு சுகானுபவத்தை அவர்கள் இழக்கவேண்டாம் என்று நாகராஜன் முடிவு செய்தார்.
“நீங்கள் உள்ளே போய்ச் சாப்பிட்டு விட்டு வாருங்கள். நான் வெளியே அந்த மரத்தடியில் காத்திருக்கிறேன்.”
நாகராஜன் வற்புறுத்தியதால், நண்பர்கள் அரைகுறை மனதுடன் ஹோட்டலுக்குள் போனார்கள். நாகராஜன் மரத்தடியில் உட்கார்ந்தார். மனம் கொந்தளிப்பில். “வேட்டிதான் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையே? அந்த வேட்டி அணிந்தவன் தமிழ்நாட்டி லேயே இரண்டாம் தரக் குடிமகனா?”
நாகராஜனின் சோகம், நட்சத்திர ஹோட்டலுக்குள் போக முடியவில் லையே, நண்பர்களோடு ஜாலியாக உட் கார்ந்து, அரட்டை அடித்து, ருசித்துச் சாப்பிட முடியவில்லையே என்பது மட்டுமல்ல, இன்னும் ஆழமானது. ஏனென்றால், அவருக்கு வேட்டி ஒரு ஆடை மட்டுமல்ல, அவர் வாழ்வாதாரம்.
நாகராஜன் தன் 27 வருட வாழ்க்கை யைத் திரும்பிப் பார்த்தார். (அன்று கோவை மாவட்டத்தில் இருந்த) அவிநாசியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்ததும், திருப்பூரில் இருந்த வேட்டிகள் தயாரிக் கும் கம்பெனியில் ஆந்திரப் பிரதேசத் துக்கான விற்பனைப் பிரதிநிதியாகச் சேர்ந்தார். சில ஆண்டுகள். வேட்டித் தயாரிப்பு, தரம், விலை, வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள், போட்டியாளர் யுக்திகள் என அத்தனை நுணுக்கங்களையும் உள்வாங்கிக் கொண்டார்.
தரமில்லாத வேட்டிகள்
1983. தொழில் முனைவராகும் உத்வேகம். தெரிந்த தொழில் வேட்டிதானே? திருப்பூரில் ஒரு சிறிய அறையில் பயணம் தொடங்கியது. வேட்டித் தொழிலில் அவர் முதல் ஆளல்ல. ஆனால், நாகராஜன் கொண்டுவந்தது புதிய சிந்தனை. அன்றைய காலகட்டத்தில், மலிவான விலையில் வேட்டிகளை விற்றால்தான் மக்கள் வாங்குவார்கள் என்று தயாரிப்பாளர்கள் நினைத்தார்கள்.
விற்பனை விலை ஐம்பது ரூபாயைத் தாண்டக்கூடாது என்று தாங்களே முடிவு செய்தார்கள். நூல் விலையோ, தொழிலாளிகள் சம்பளமோ உயர்ந்தால், தரத்தில் கை வைத்தார்கள். இதனால், ஏராளமான வேட்டிகள் ஒரே மாதத்தில்கூடக் கிழிந்தன. தயாரிப்பாளர்களுக்கே தங்கள் பொருளில் நம்பிக்கையும், மதிப்பும் இருக்கவில்லை. ஆகவே, யாரும் தங்கள் வேட்டிகளுக்குப் பெயர் வைக்கவில்லை, வேட்டியில் பிராண்ட்களை உருவாக்கவில்லை.
இத்தகைய தயாரிப்பாளர்களால், வேட்டி என்பது மலிவு விலை உடை என்னும் அபிப்பிராயம் மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிந்துவிட்டது. வேட்டி கட்டுவதைத் தவிர்த்தார்கள். ஆங்கிலேயர் ஆட்சி இதற்குத் தூபமிட்டது. பான்ட் மதிப்புக்குரிய ஆடையானது.
நாகராஜன் வித்தியாசமாகச் சிந்தித்தார். பொங்கல், புதுவருடம், தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு மட்டுமே நாம் புத்தாடைகள் வாங்குகிறோம். ஒரு வருடம் உழைக்கிற தரமான வேட்டிகளைத் தந்தால் மக்கள் வாங்குவார்கள். பெரும் பாலானோருக்கு விலையைவிடத் தரம்தான் முக்கியம் என்று நினைத்தார்.
வேட்டியில் பிராண்ட்
எல்லோரும் ஐம்பது ரூபாய்க்கு வேட்டிகள் விற்றுக்கொண்டிருந்தபோது, ராம்ராஜ் பிராண்ட் வேட்டிகள் மார்க்கெட்டுக்கு வந்தன, 125 ரூபாய் விலையில். நூல், நெய்தது ஆகிய அத்தனை அம்சங்களிலும் உயர்தரம். தினப்படி உடுத்தினாலும், வருடம் தாண்டி உழைத்தது. மலிவான வேட்டிகளையே விற்றுப் பழகிய கடைக்காரர்கள், “யானை விலை” ராம்ராஜ் வேட்டிகளை ஸ்டாக் செய்யவே முதலில் தயக்கம் காட்டினார்கள்.
ஆனால், வாங்கிக் கட்டிப் பழகியவர்கள் ராம்ராஜ் வேட்டிகள் மட்டுமே வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தார்கள். நான்கே ஆண்டுகளில், ராம்ராஜ் என்றால் தரமான வேட்டிகள் என்னும் பொசிஷனிங்கை நாகராஜன் உருவாக்கிவிட்டார்.
மாபெரும் சாதனை செய்துவிட்டோம் என்னும் பெருமிதத்தில் இருந்த நாகராஜனுக்கு இந்த நட்சத்திர ஹோட்டல் அனுபவம் பேரதிர்ச்சி. மனதுக்குள் போராட்டம். ஒரு மனம் சொன்னது, “நீ வெற்றிகரமான பிசினஸ் நடத்துகிறாய், பணம் பண்ணுகிறாய். ஆனால், நீ தயாரிக்கும் வேட்டி, சமுதாயத்தில் மதிப்பு இல்லாத உடை. உன் பாதையை மாற்று. திருப்பூரில் எல்லோரும் செய்வதுபோல் பின்னலாடைகள் தொழிலில் இறங்கு. ஏற்றுமதி செய். டாலர்கள் கொட்டும்.”
இன்னொரு மனம் சொன்னது, “நம் நாட்டின் பாரம்பரிய உடை வேட்டி. காலக்கோளாறுகளால் அதன் மதிப்பை மக்கள் மறந்துவிட்டார்கள். வேட்டித் தொழிலிலிருந்து நீ வெளியேறினால், அது நம் பாரம்பரியத்துக்குச் செய்யும் துரோகம், சவாலைச் சந்திக்கும் துணிச்சல் இல்லாமல் ஓடிப்போகும் கோழைத்தனம்..”
போதிமரம்...
சில மணி நேரங்கள். நண்பர்கள் சாப்பாட்டை முடித்து வந்தார்கள். “பாவம், பசியோடு இருக்கிறாய். வா, பக்கத்தில் இன்னொரு ஹோட்டலுக்குப் போகலாம்” என்றார்கள். “இல்லை, வேண்டாம். என் வயிறும், மனமும் நிறைந்த திருப்தியில் இருக்கிறேன்” என்று தெளிவோடு, உறுதியோடு நாகராஜன் சொன்னார். தான் உட்கார்ந்திருந்த ஆலமரத்தை நன்றியோடு பார்த்தார். அது ஆலமரமல்ல, அவருக்கு ஒரு போதிமரம்!
நாகராஜனுக்கு இப்போது ஒரு வெறி, வேகம். பணம் பண்ண வேண்டும் என்னும் குறிக்கோள் மட்டுமே இருந்தால், வேகம் இருக்கும். அதையும் தாண்டி, நாம் சமுதாயத்தில் மனமாற்றம் கொண்டுவரப் போகிறோம், இழந்த பாரம்பரியப் பெருமையை மீட்கப்போகிறோம் என்னும் லட்சியம் உந்தும்போது ஆயிரம் யானை பலம் வரும். நாகராஜனுக்கு வந்தது.
விளம்பரத்தில் வித்தியாசம்
வேட்டி கட்டுவதால், தனக்கும், பிறருக் கும் ஏற்பட்ட, ஏற்படும் அனுபவங்களை, அவமானங்களை மனதில் பட்டியலிட் டார். இந்த எதிர்மறைச் சம்பவங்களைத் தலைகீழாகத் திருப்பிப்போட்டு, மக்கள் மனங்களில் வேட்டி பற்றிய பாசிட்டிவ் அபிப்பிராயங்களை ஏற்படுத்தும் உற்சாக டானிக் ஆக்கினார்.
ஆரம்பமாயின தொலைக்காட்சி விளம்பரங்கள். ஆடம்பரமான நட்சத்திர ஹோட்டல். சொகுசுக் கார் ஒன்று வந்து நிற்கிறது. கம்பீரமான ஒருவர் தும்பைப் பூ வெள்ளை வேட்டியும், வெள்ளைச் சட்டையும் அணிந்து இறங்குகிறார். அவர் தோற்றத்தைப் பார்த்து, செக்யூரிட்டி தன்னை அறியாமலே பணிவோடு கதவைத் திறக்கிறார். கம்பெனி போர்ட் மீட்டிங். நம்ம ஆள் வந்தவுடன், எல்லோரும் எழுந்துநின்று வரவேற்கிறார்கள்.
அடுத்து, ஹோட்டலில் ஒரு இசைக் கச்சேரி நடந்துகொண்டிருக்கிறது. மனத்தை ஒருமுகப்படுத்திப் பாடும் அந்தக் கலைஞரின் கவனம் இந்த வி.ஐ.பி யைப் பார்த்ததும் சிதறுகிறது. வணங்குகிறார். வெளியே யானை சல்யூட் அடிக்கிறது. விளம்பரத்தின் பின்னணியில் “அணிந்தாலே கம்பீரம், எப்போதும் முதலிடம், செல்வாக்கு, மரியாதை, அந்தஸ்தும் வழங்குதே, ராம்ராஜ் வேட்டிகளுக்கு சல்யூட்” என்னும் பாடல் வரிகள்.
சாதனையாளரின் ஆடை
வேட்டிகள் இரண்டாம் தர உடைகள் என்னும் எண்ணத்தை உடைத்தெறிந்து, அவை சாதனையாளர்களின் ஆடைகள் என்னும் பொசிஷனிங்கை இந்த விளம்பரங்கள் உருவாக்கின.
ராம்ராஜ் தங்கள் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைப் புதுமைத் தயாரிப்பு கள் மூலமாக விரிவாக்கிக்கொண்டே யிருக்கிறார்கள். பஞ்சகச்சம், கோவில் வேட்டிகள், திருமண வேட்டிகள், அலுவலக வேட்டிகள், ஓய்வுநேர வேட்டி கள், விழாக்கால வேட்டிகள், அரசியல் வேட்டிகள், ஒரு வயதுக் குழந்தையும் உடுத்தும் வேட்டிகள், வெல்க்ரோ இணைத்த இளைய தலைமுறையினர் வேட்டிகள், இஸ்லாமிய சகோதரர் களுக்கான தொழுகை வேட்டிகள், ஹஜ் பயண வேட்டிகள், நறுமணம் கொண்ட வேட்டிகள், கறை படாத வேட்டிகள், இரவு உடை வேட்டிகள், குழந்தைகளுக்குத் தூளி கட்டும் வேட்டிகள் எனப் பதினைந்து வகைகள். இவற்றுள் ஜரிகை, கரை, நிறம் ஆகிய மாறுபாடுகளால், மொத்தம் 2500 வேட்டி ரகங்கள். இப்போது, இவற்றோடு, சட்டைகள், உள்ளாடைகள் ஆகியவையும் மக்கள் மனங்களில் முத்திரை பதித்து வருகின்றன.
வயதானவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் எனப் பல பகுதியினரையும் கவர்வதால், வெவ்வேறு விதமான விளம்பர யுக்திகளை ராம்ராஜ் கையாள்கிறார்கள் - குழந்தைகள், பெற்றோர்கள் கவனத்தைக் கவர, தொலைக்காட்சியில் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சி, இளைஞர்களை ஈர்க்க, மாடலாகக் கிரிக்கெட் வீரர் அஷ்வின் ரவிச்சந்திரன்.
வேட்டிக்கு கவுரவம்
ராம்ராஜ் வேட்டிகள், சட்டைகள் பிரபல ஜவுளிக்கடைகள், சொந்த ஷோரூம்கள், இணையதளம் மூலமாக வாடிக்கையாளர்களைச் சென்று சேருகின்றன. விற்பனை பல நூறு கோடிகளைத் தாண்டி, இந்த வருடம் ஆயிரம் கோடிகளைத் தொடவிருக்கிறது. மாபெரும் சாதனைகள். ஆனால், நாகராஜன் இவை அனைத்தையும்விட மகத்தானதாக நினைப்பது எதைத் தெரியுமா?
தமிழக அரசு, தமிழகத்தின் கிளப்கள், பொழுதுபோக்கு இடங்கள், நிறுவனங்கள் ஆகியவை வேட்டி கட்டி வருவோருக்கு அனுமதி மறுத்தால், அது குற்றம் என்னும் சட்டத்தை 2014 இல் அமலாக்கியிருக்கிறது. தமிழகத்தின் பாரம்பரியப் பெருமையை மீட்கும் இந்தச் சட்டம், ஒரு கலாசார மாற்றம், மக்களின் மனமாற்றம். இதை நிஜமாக்கியவர் நாகராஜன்தானே?
from - the hindu
Ypurs Happily
Dr.Star Anand Ram
www.v4all.org
No comments:
Post a Comment