அள்ளித் தரும் அட்சய திரிதியை
'அட்சய’ என்றால் குறையாது வளர்வது என்று பொருள். சித்திரை மாதம் வளர்பிறை திரிதியை திருநாளும் குறைவில்லாத வரங்களை வாரி வழங்கும் நன்னாள் என்பதால், அதை அட்சய திரிதியை எனப் போற்றுகிறோம்.
இந்த வருடம், சித்திரை மாதம் 8ம் நாள் (21.4.15) செவ்வாய்க் கிழமை அட்சய திரிதியை திருநாளாகும். அன்று 36 நாழிகை 06 விநாடி வரையிலும் திரிதியை திதி இருக்கும். அதாவது இரவு 8:29 மணி வரை இருக்கும். சூரிய உதயம் காலை 6:00 முதல் இரவு 8:29 மணிக்குள் புதிய பொருட்கள் வாங்க உகந்த நேரம்.
இந்த நாளில் சூரியனும் சந்திரனும் உச்ச ராசியில் இருப்பார்கள். மேஷத்தில் சூரியனும், ரிஷபத்தில் சந்திரனும் இருக்கும் நாள் இது. சூரியன் பிதுர்க்காரகர். சந்திரன் மாத்ருகாரகர். பெரியவர்கள் வாழ்த்தும்போது 'சூரிய சந்திரர் போல் நிலைத்து வாழ்க’ என்பார்கள். நீடுழி காலம் வாழ ஆத்மகாரகனாகிய சூரியனும் மனோகாரகனாகிய சந்திரனும் வலுப்பெற்றிருப்பது அவசியமாகும். அவ்வாறு சூரியனும் சந்திரனும் பலம் பெற்றுள்ள அட்சய திரிதியை நாளில், நாம் செய்யும் நற்காரியங்கள் பல்கிப்பெருகும். அதனால் நமக்குக் கிடைக்கும் பலன்களும் பன்மடங்காகும். அன்று நாம் வாங்கும் பொருட்களும் அழியாது நிலைத்திருக்கும்.
புராணங்கள் போற்றும் அட்சயதிரிதியை!
மகாவிஷ்ணு பலராமராக அவதரித்தது, சிவனருளாலும் திருமகள் அனுக்ரஹத்தாலும் குபேரனுக்கு செல்வங்களின் அதிபதியாகும் வரம் கிடைத்தது, கணபதி தன் ஒற்றைத் தந்தத்தை முறித்து அதையே எழுதுகோலாகக் கொண்டு பாரதம் எழுதத் துவங்கியது, சூரியபகவான் அருளால் திரெளபதி அட்சய பாத்திரம் பெற்றது, கிருஷ்ண பரமாத்மாவின் கருணையால் குசேலன் குபேர சம்பத்து பெற்றது, ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தில் மகிழ்ந்து மகாலட்சுமிதேவி பொன்மாரி பொழிந்தது... இந்த அற்புதங்கள் யாவும் நிகழ்ந்தது அட்சய திரிதியை திருநாளில்தான்.
பொதுவாகவே வளர்பிறை 3வது திதிநாளில் சந்திர உதய நேரத்தில் சந்திரனைத் தரிசிப்பது விசேஷமாகும். அதிலும் அட்சய திரிதியை நாளில் செய்யப்படும் சந்திர தரிசனத்துக்குக் கூடுதல் சிறப்பு உண்டு. வருடத்தில் யுகாதி, விஜய தசமி, தைப்பூசம் ஆகிய நாட்களுக்கு தனிச் சிறப்பம்சம் உண்டு. இந்நாட்களில் யோகம் சரியில்லை என்றாலும், முக்கியமான காரியங்களைச் செய்யலாம் என்கின்றன ஞானநூல்கள். இந்த பட்டியலில் அட்சயதிரிதியையும் அடங்கும்.
இந்து தர்ம சாஸ்திரப்படி சுபகாரியங்கள் அனைத்தையும் வளர்பிறை திதிகளில் ஆரம்பிப்பது விசேஷம். அதிலும் திரிதியை விசேஷமான திதியாகும். இந்தத் திதிநாளில் நட்சத்திரம், யோகம், லக்னம், துருவம் பார்த்து நல்ல நேரத்தில் ஆரம்பிக்கும் காரியம் நிச்சயம் வெற்றி பெறும் என்பார்கள்.
பொதுவாக திரிதியை திதியில், குழந்தைக்கு அன்னப் பிராசனம் செய்யலாம், சங்கீத வித்தை பயிலத் துவங்குவது, சிற்ப காரியங்களில் ஈடுபடுவது, சீமந்தம், மாங்கல்யம் செய்ய, விவாகம், நிஷேகம், பும்சவனம், தொட்டிலில் குழந்தையை விட, காது குத்த, வித்தியாரம்பம் செய்ய, உபநயனம் செய்ய, விவசாயப் பணிகளில் ஈடுபட, நிலங்களில் எரு இட, விதை விதைக்க, கதிர் அறுக்க, தானியத்தைக் களஞ்சியத்தில் சேர்க்க, தானியம் உபயோகிக்க, கால்நடைகள் வாங்க, வாகனம் வாங்க, புதிய ஆடை அணிய, கிரகப்பிரவேசம் செய்ய, மருந்து உட்கொள்ள, பயணம் மேற்கொள்ள ஆகிய அனைத்து சுப காரியங்களையும் திரிதியையில் செய்யலாம். வளர்பிறை திரிதியை என்றில்லாமல் தேய்பிறை திரிதியையும் சுப காரியங்களில் ஈடுபட உகந்ததாகும். தேய்பிறை பிரதமை, துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி வரை வளர்பிறை போல் பலன் தரும் என்று சொல்லப்பட்டுள்ளது.
சாதாரண திரிதியையே இப்படியென்றால், அட்சய திரிதியை திருநாளைக் கேட்கவும் வேண்டுமா? அன்றைக்கு இந்த சுப காரியங்களில் ஈடுபட்டால், இரட்டிப்பு சுபபலன்கள் உண்டாகும்.
என்னென்ன செய்யலாம்?
இந்து மதம் முதன்மையானதாக அறிவுறுத்துவது தர்மத்தையே! இங்கு ஒருவர் கடைப்பிடிக்கவேண்டிய அறநெறிகளே தர்மம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. மனிதர்களுக்கான அறநெறிகளில் குறிப்பிடத்தக்கது தானம். அட்சய திரிதியை நாளில் தான தர்மம் செய்பவர்களுக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். நம்மால் முடிந்த சிறிதளவு தர்மம் செய்தாலும் அதற்கான பலன் பலமடங்கு கிட்டும்.செல்வம், மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் பெருக இந்நாளில் தானம் செய்வது விசேஷம். குறிப்பாக அன்னதானம், சொர்ண தானம், வஸ்திர தானம் செய்வது மிகவும் விசேஷம்.
தங்கத்தைத் தானமாகத் தர இயலாதவர்கள் தங்களால் இயன்றளவு பணத்தை அநாதைகள், ஏழைகள், வயோதிகர்கள், ஆதரவு இல்லாத உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்குத் தர்மம் செய்வது விசேஷமாகும்.
லட்சுமி கடாட்சம் பெருகும்!
அதேபோல், அட்சயதிரிதியை அன்று செய்யும் வழிபாடுகளுக்கும் இரட்டிப்பு பலன்கள் உண்டு. அன்று, மகாலட்சுமி தேவியானவள் குபேரன் இருக்கும் இடத்துக்குச் சென்று ஆசி புரிவதாக ஐதீகம்.
ஆக, இந்நாளில் முழுமுதற் தெய்வமான விநாயகரை வணங்குவதுடன், திருமகளையும் குபேரனையும் வழிபடுவது சிறப்பு. இதனால் திருமகள் நம் வீட்டுக்கும் எழுந்தருள்வாள்; அவள் அருளால் அஷ்ட ஐஸ்வரியங்களும் நம் இல்லத்தில் பொங்கிப் பெருகும்.
அன்று குபேர லட்சுமி ஹோமம் செய்வதும், ஸ்ரீ சூக்தம் படிப்பதும், கேட்பதும் நலம் தரும். மேலும் மகாலட்சுமி அஷ்டகம் சொல்லி, மகாலட்சுமியை வழிபடுவதன் மூலமும் லட்சுமி கடாட்சத்தை தங்குதடையின்றி பெறலாம். மேலும் இந்தத் திருநாளில் தனகாரகன் குருபகவானையும் வழிபட்டு வரம் பெறலாம்.
பொன் பொருள் வாங்க உகந்த நேரம்
இவ்வருடம் அட்சயதிரிதியை செவ்வாய்க்கிழமையில் வருகிறது. என்றாலும், அன்று சுக்கிர ஹோரையில் புதிய பொருள்களை வாங்குவது சிறப்பாகும். பொதுவாகப் பொருள் வாங்க சுக்கிரனின் காலம் சிறப்பு என்பார்கள். ஆக, அன்று காலை 8 முதல் 9 மணி வரை; பிறகு 3.00 முதல் 4.00 மணி வரையிலான நேரம் உகந்தது.இந்த நேரத்தில் வாங்க முடியாதவர்கள் குரு ஹோரையிலும் வாங்கலாம். அதாவது நண்பகல் 12 முதல் 1 மணி வரை உள்ள நேரம் சிறப்பானது.
தங்கம் வாங்க வசதி இல்லாதவர்கள் வெண்மை நிறப் பொருட்களை வாங்கலாம். வெள்ளிப் பொருட்கள், பால், உப்பு, வெண்மை நிற ஆடைகள் முதலானவற்றையும் வாங்கலாம்.
இனி, ஒவ்வொரு ராசிக்காரர்களும் அட்சய திரிதியையில் என்ன பொருட்களை வாங்கலாம், என்னென்ன பொருட்களை தானம் வழங்கலாம் என்பது குறித்து விரிவாக அறிவோம்.
பன்னிரு ராசிகளும் அட்சயதிரிதியையும்
* மேஷம்: புதிய ஆடை அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வெள்ளி, உணவுப்பொருட்களை வாங்கலாம். அன்ன தானம், கொள்ளு தானம் செய்வது சிறப்பாகும்.
* ரிஷபம்: அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களையும் பெண்களுக்கு உபயோகப்படும் பொருட்களையும் வாங்கலாம். இந்த ராசிக்காரர்கள் கோதுமை, துவரை, பச்சைப் பயிறு சம்பந்தமான பொருட்களைத் தானம் செய்வது நல்லது.
* மிதுனம்: வீட்டுக்கு அழகூட்டும் பொருட்களை வாங்கலாம். பச்சை அரிசி, மொச்சைப் பயிறு தானம் செய்யலாம்.
* கடகம்: நிலபுலன்கள், வீடு, வாகனம் வாங்கலாம். இயந்திரங்கள் வாங்குவதற்கும் உகந்த நாள் இது. இவர்கள் எள் மற்றும் எண்ணெய் தானம் செய்வது நல்லது.
* சிம்மம்: வியாபார அபிவிருத்திக்கான காரியங்களில் ஈடுபடலாம். இயந்திரங்கள் வாங்கலாம். இந்த ராசிக்காரர்கள் வேத விற்பன்னர்களுக்கு வஸ்திர தானம் அளிப்பது நல்லது.
* கன்னி: ஆடைஅணிமணிகள், அலங்காரப் பொருட்களை வாங்கலாம். தங்கம் வாங்குவதற்கும் உகந்த நாள் இது. இவர்கள், கோதுமை, துவரை ஆகியவற்றைத் தானம் வழங்கலாம்.
* துலாம்: தாதுப் பொருட்கள் இரும்பு, எஃகு மற்றும் எண்ணெய் வாங்கலாம். உடைக்கப்படாத கருப்பு உளுந்து, பாய், தலையணை, பெட்ஷீட் ஆகியவற்றை தானம் செய்யலாம்.
* விருச்சிகம்: தண்ணீர் சம்பந்தமான பொருட்களை வாங்கலாம். மேலும், தெய்விகமான பூஜையறைப் பொருட்களை வாங்குவதும் சிறப்பு. இவர்கள் ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு உதவுவதும், மங்கலப் பொருட்களை தானமளிப்பதும் சிறப்பு.
* தனுசு: வீட்டுப் பெண்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தரலாம். எள், நல்லெண்ணெய், இரும்பு ஆகியவற்றை தானம் செய்யலாம்.
* மகரம்: இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்களை வாங்கலாம். ஆடை, அணிமணிகளை வாங்குவதும் நல்லது. இவர்கள் அந்தணர்களுக்கும், வேதம் படித்தவர்களுக்கும் உதவி செய்வது நல்லது. பசு நெய் வாங்கி, அருகில் உள்ள ஆலயத்துக்குக் கொடுப்பதால் விசேஷ பலன்கள் கைகூடும்.
* கும்பம்: தெய்விகப் பொருட்களை வாங்கலாம். வீடு, நிலம், மனை, வாகனம் வாங்குவதும் நல்லது. எள், கருப்பு உளுந்து, கொள்ளு தானம் செய்வது சிறப்பாகும்.
* மீனம்: இயந்திரங்கள், எரிபொருட்கள், மின்சாதனங்கள் வாங்கலாம். நிலம், மனை, வீடு போன்ற ஸ்திரச் சொத்துக்கள் வாங்குவதற்கும் இந்நாள் சிறப்பானதாகும். இந்த ராசிக்காரர்கள் கோதுமை தானம் செய்வது நல்லது.
No comments:
Post a Comment