உழைப்பு என்றும் வீணாவதில்லை
வாழ்க்கைப் பயணத்தில் நாம் சாதனை சிகரத்தை அடைய நாம் செய்ய வேண்டிய மூலதனம் உழைப்பு,உழைப்பு, தளராத உழைப்பு. நாம் எவ்வளவுக்கெவ்வளவு உழைக்கின்றோமோ அந்த அளவிற்கு நமது முன்னேற்றம் உயரும். அத்தகைய உழைப்பை நாம் புத்திசாலித்தனமாக பயன்படுத்தினால் வெற்றி என்பது நமது மிக அருகில்தான்.
சிலர் வாழ்வில் முன்னேற வேண்டும் என பேச்சு அளவில் மட்டும் கூறிக்கொண்டு இருப்பார்களே தவிர செயல்பாடு ஒன்றும் இருக்காது. அதற்குக் காரணம் உழைக்கும் நோக்கம் இல்லாதது. நாம் ஒரு காரியத்தை எண்ணுவது பெரிதல்ல. அதை செயல்படுத்தி அதற்கேற்ப உழைக்க வேண்டும். உழைப்பிற்கு பலன் நிச்சயம் கிடைக்கும். எந்த ஒரு செயலும் உழைப்பினால்தான் நிறைவு பெறுகிறது.
திருவள்ளுவர்கூட திருக்குறளில் உழைப்பின் பயனைப் பற்றி குறிப்பிடுகையில் ஓயாமல் உழைப்பவர்கள் விதியைக்கூட தூர விரட்டிவிடுவார்கள் என குறிப்பிடுகிறார். அதுமட்டுமின்றி உழைத்தால் உயரலாம்; கடுமையான உழைப்பிற்கு ஈடு இணை எதுவுமில்லை என்று உழைப்பின் பயனையும், பெருமையையும் அறிந்தே கூறியிருக்கிறார்கள். நமது கடுமையான உழைப்பிற்கு எதையுமே ஈடாக்க முடியாது.
பொறுமையோடு உழைத்தால் நிச்சயமாக ஒருநாள் உயரலாம். உழைத்தால் வெற்றி நம் வீட்டு வாசல் கதவைத் தட்டியே தீரும் என்பதை நிரூபித்தவர் ஐசக் நியூட்டன்.
யார் ஒருவர் பொறுமை என்னும் பண்பைக் கடைபிடித்து உழைக்கிறார்களோ, அவர்கள் உயர்ந்த நிலையை அடைவார்கள்.
ஐசக் நியூட்டனுக்கு அறிவியலில் எப்படி விருப்பமோ, அதே போல் பிராணிகளிடத்தும் அதிகம் விருப்பம் உள்ளவராக இருந்தார்.
ஐசக் நியூட்டன் இருபது ஆண்டுகள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் உழைத்து தமது ஆராய்ச்சி முடிவுகளை கண்டறிந்து, அதை பல பேப்பர்களில் வைத்திருந்தார். ஒருநாள் ஆராய்ச்சி முடிவுகள் எழுதி வைத்த பேப்பர்களை மேஜை மீது வைத்துவிட்டு வெளியில் உலாவச் சென்றார். அப்போது மேஜை மீது மெழுகு வர்த்தி ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அந்த அறையில் அவரது அன்பு வளர்ப்பு நாய் இருந்தது. அவர் சென்ற சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்த நாய் அங்குமிங்கும் தாவிக் குதித்து விளையாட ஆரம்பித்துவிட்டது. மேஜை மீது குதித்தபோது அங்கே எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி சாய்ந்து அங்கே ஆய்வுப் பேப்பர்களின் மீது விழுந்தது.
ஐசக் நியூட்டனின் இருபது ஆண்டு கால உழைப்பின் பலனான அந்த ஆய்வு பேப்பர்கள் சாம்பலாயின. வெளியில் உலாவச் சென்ற அவர் திரும்பி வந்தார். எரிந்துபோன ஆய்வு பேப்பர்களைக் கண்டு அவர் மனம் என்ன பாடுப்பட்டிருக்கும்?
இருபது ஆண்டு கால உழைப்பு ஒரு சில நொடிகளில் தீய்க்கு இரையாகி வீணாயிற்று. வேறு யாராக இருந்தாலும் அந்த இடத்திலேயே நாய்க்கு கல்லறை கட்டியிருப்பார்கள். ஆனால் ஐசக் அப்படி ஏதும் செய்யவில்லை. அவர் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் நிலை தடுமாறவில்லை. பொறுமை அவரை ஆட்கொண்டிருந்தது. மிகவும் பரிவுடன் நாயின் தலையை வருடினார். அன்புடன் அதனிடம் சொன்னார்; “ ஓ …. டைமண்ட்” (அந்த நாயின் பெயர்) “நீ என்ன காரியம் செய்துவிட்டாய்? இதன் மதிப்பு உனக்குத் தெரியுமா?” என்று அமைதியாக கூறினார்.
மீண்டும் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்து எழுதத் தொடங்கினார். அதை முடிக்க மேலும் பல ஆண்டுகள் ஆயின. இருந்தாலும் பொறுமையுடன் உழைத்தார்; உயர்ந்தார் ஐசக் நியூட்டன்.
ஒருமுறை உலகின் மிகப்பெரிய பணக்காரான ராக்பெல்லரிடம், தங்களின் முன்னேற்றத்தின் இரகசியம் என்னவென்று கேட்டபோது, அவர் சொன்ன பதில் கடுமையான உழைப்பு என்பதுதான். வெற்றியை உருவாக்குவதில் உழைப்பு மிகப்பெரிய மூலதனம். அறிவு சார்ந்த உழைப்பானது முடியாது என்பதைக்கூட நம் கைபிடியில் கொண்டு வந்து சேர்க்கும்.
கடின உழைப்பு ஒன்றுதான் ஒருவனை வெற்றியை நோக்கி கைப்பிடித்து அழைத்துச் செல்லும். வெற்றி பெறுவதற்கு ஒரே வழி உழைப்புதான். உழைப்பின் சிகரம் கட்டாயம் வெற்றியாகத்தானிருக்கும். ஒருவன் தான் ஆசைப்படும் எதையும் உழைப்பின் மூலம் சுலபமாகப் பெறலாம். உழைக்காதவனுக்கு இன்பம் என்றும் கிடைக்காது. சோம்பேறியை ஏழ்மை ஒன்றுதான் தொடர்ந்து பின்தொடரும். இந்த நிமிடத்திலிருந்து தன் குறிக்கோளை அடைய கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். உழைக்க முற்படும்போதே வெற்றியை பற்றியும் அதன் பலனைப் பற்றியும் நினைத்தல் கூடாது.
அயராத உழைப்பு, கடினமான உழைப்பு இதுதான் ஒருவனுடைய உயிர் மூச்சாக விளங்க வேண்டும். அதுதான் அவனது இலட்சியமாக திகழ வேண்டும். ஒருவனுக்கு ஒன்றில் தோல்வி கிடைத்தால் அவனுடைய உழைப்பு போதாது என்றுதானே பொருள். நான் எடுத்துக்கொண்ட முயற்சியில் கட்டாயம் வெற்றி பெற்றே தீருவேன் என்று அசைக்க முடியாத நம்பிக்கையுடன் அயராது உழைத்தால் அவன் வெற்றி பெறுவதிலிருந்து யாரும் அவனை தடுக்க முடியாது.
ஒருவனுடைய உழைப்பு என்றுமே வீணாவதில்லை. அவன் எதிர்பார்த்த பலன் உடனே கிடைக்காமல் இருக்கலாம். பலன் கிடைக்கவில்லையே என்று மனம் தளர்ந்து உழைப்பதை விட்டுவிடக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக வங்கியில் பணம் போட்டு வந்தால் சில மாதங்களுக்கு பின்பு பெரிய தொகை சேர்ந்திருக்குமல்லவா? உழைப்பும் அப்படித்தான். பல மாதங்கள் தொடர்ந்து உழைத்து வந்தால் பெரிய பெரிய வெற்றிகளை நம்மால் பெற முடியும்.
stop telling start doing - www.v4all.org
stop telling start doing - www.v4all.org
No comments:
Post a Comment