Tuesday, April 14, 2015

குன்றுதோறாடும் குமரக்கடவுள்


க. முருகன்

                   குன்றுதோறாடும் குமரக்கடவுள் குடிகொண்டிருக்கும் சிறந்த தலங்கள் பலவற்றுள் ஒன்று கழுகுமலையாகும். இது கோவில்பட்டிக்கும் சங்கரன்கோவிலுக்கும் மத்தியில் உள்ள ஒரு சிறந்த முருகதலம்- செவ்வாய் தலம்- யாத்திரை தலம்- காணிக்கை தலமும்கூட.

சம்பாதி என்ற கழுகு முனிவர் இத்தல முருகனை வழிபட்டதால் இந்த ஊர் கழுகுமலை என்று பெயர் பெற்றது என்று கூறுவர். யானை படுத்திருப்பது போன்ற தோற்றமுடன் இக்குன்றின் முன்பகுதி திகழ்கிறது. இங்குள்ள மலையில் கற்பாறையைக் குடைந்து மூர்த்தி அமைக்கப்பட்டிருப்பதால் இது குடைவரைக் கோவில் ஆகும். இக்கோவிலுக்கு விமானம் கிடையாது. சுற்றுப் பிராகாரமும் கிடையாது. மலையைச் சுற்றித்தான் பிரகார வலம் வரவேண்டும். இம்மலை 300 அடி உயரம் உள்ளது. கர்ப்பக் கிரகமும் அர்த்த மண்டபமும் மலையைக் குடைந்து செதுக்கப்பட்டுள்ளன. கர்ப்பக் கிரகத்தில் வள்ளி- தெய்வானையோடு முருகன் காட்சியளிக்கிறார். மற்ற கோவில்களில் உள்ளதுபோல முருகனின் வாகனமான மயில் வலது பக்கம் அல்லாமல் இடது பக்கம் நோக்கி காட்சி அளிப்பது தனிச்சிறப்பு. இங்குள்ள மூர்த்திக்கு ஒரு முகமும் ஆறு கரங்களும் உள்ளன. தென்னிந்தியாவிலேயே இம்மாதிரியான திருக்கோலம் கொண்ட முருகன் கோவில் இது மட்டுமே. தாரகாசுரனை வதம் செய்த கார்த்திகேயனே இக்கோலத்துடன் காட்சி அளிக்கிறார் என்று கூறப்படுகிறது.

முருகன் மேற்கு முகமாக இருக்கும் சந்நிதானத்தையுடைய மலை "சிவன் ரூபம்' என்றும்; கிழக்கு முகமாக இருக்கும் மலை "சக்தி ரூபம்' என்றும் வேதாகம நூல்களில் கூறப்பட்டுள்ளது. கந்த புராணத்தின் ஆசிரியர் கச்சியப்பர், குன்று தோறாடிய மேற்கு முகமாக உள்ள தலங்கள் மூன்று என்றும்; அவற்றில் ராஜயோகமாக குமரன் வீற்றிருக்கும் தலம் கழுகுமலை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அகத்தியர் பொதிகை மலைக்குச் செல்லும்பொழுது இத்தலத்தில் தங்கி பூஜை செய்ததாகவும்; அகத்திய முனிவரின் இருப்பிடமான பொதிகை மலையை நோக்கி முருகன் தென்மேற்காக அமர்ந்துள்ளார் என்றும் கூறுவர்.

இராவணனால் ஜடாயு கொல்லப்பட, இராமன் ஜடாயுவுக்கு சகல கருமங்களும் செய்து ஜென்ம சாபல்யம் அடையச் செய்தார். இதை அனுமன் மூலம் அறிந்த ஜடாயுவின் சகோதரன் சம்பாதி இராமபிரானைத் தரிசித்து வணங்கி, "நான் என் சகோதரனுக்கு ஈமக்கிரிகைகள் செய்யாததால் கரும சண்டாளன் ஆகிவிட்டேன். அதற்கு ஒரு வழி கூறவேண்டும்' என்று வேண்ட, இராமன் சம்பாதியை நோக்கி, "நீ கஜமுக பர்வதத்தில் மயில்மீது அமர்ந்திருக்கும் முருகனை- அவ்விடத்திலுள்ள  ஆம்பல் தீர்த்தத்தில் முழ்கி பூஜை செய்தால் உன் சண்டாளத்தன்மை நீங்கி மோட்சம் அடைவாய்' என்றார். அதன்படி சம்பாதி வணங்கி மோட்சம் பெற்ற தலம் இது.

இத்தலம் கழுகுமலை, தென்பழனி, கழுகாசலம், உவணகிரி, கஜமுக பர்வதம், சம்பாதி ஷேத்திரம் என்று பல பெயர்களால் வழங்கப்படும்.


கழுகாசலமூர்த்தி கோவில் அருகேயுள்ள மலையின் உச்சியில் பிள்ளையார் கோவிலும் இந்த கோவிலுக்குச் செல்லும் வழியில் மூன்று சமண சிற்பத்தொகுதிகளும், அய்யனார் சுனையும் உள்ளன.

தென்னிந்தியாவின் எல்லோரா என அழைக்கப்படும் வெட்டுவான் கோவிலும் உள்ளது. இந்த கோவிலின் பெரும்பாறையில் 25 அடி ஆழத்தில்  சதுரமாகத் தோண்டி சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கண்கவர் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சிற்பம் வேறெங்கும் காண முடியாது. இந்தக் கோவிலில் அர்த்த மண்டபம் உள்ளது. இக்கோவிலில் நான்கு பக்கங்களிலும் உமாமகேஸ்வரி, தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா சிற்பங்கள் உள்ளன.

சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரை உலகறியச் செய்த அருமையும் இந்த கழுகாசல மூர்த்திக்கே சாரும். பாட்டுக்கொரு பாரதி இங்கு வந்து பாடியதும், திருப்புகழ் பாடிய அருணகிரிநாதராலும், சங்கீத மும்மணிகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதராலும், கழுகுமலைப் பிள்ளைத் தமிழ் பாடிய சிதம்பரக் கவிராயராலும், நாடக உலகில் புகழ்பெற்ற எம்.ஆர். கோவிந்தசாமி அவர்களாலும், ஏனைய புலவர்களாலும் புகழ்பெற்றது கழுகுமலையாகும்.

நாமும் கழுகுமலை சென்று, ஸ்ரீகழுகாசலமூர்த்தியைத் தரிசித்து, கிரிவலம் வந்து புண்ணியம் பெறுவோம்!

No comments:

Post a Comment