Wednesday, April 1, 2015

வள்ளலார் சொன்ன மகா ரகசியம்


வள்ளலார் சொன்ன மகா ரகசியம் - www.v4all.org 


வாழ்விக்க வந்த வள்ளல்
சிதம்பரத்தை அடுத்துள்ள மருதூரில் இராமையாப் பிள்ளை – சின்னம்மை தம்பதியினருக்கு 5-10-1823ல் மகவாகத் தோன்றியவர் ஸ்ரீ ராமலிங்க அடிகள். எல்லாவுயிரையும் தம் உயிராய்க் கருதி வாழ்ந்த மகான்.
“அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
என்று உலக உயிர்களுக்காக இரங்கிய உத்தமர்.
அருட்பெருஞ்சோதி வள்ளலார்
மக்களிடையே ஏற்றத்தாழ்வு இல்லை. மரணமில்லாப் பெருவாழ்வை அடைய எல்லோரும் தகுதி உடையவர்களே! அதற்கான முயற்சியை அனைவரும் மேற் கொள்ள வேண்டும், அதற்காக சமரச சன்மார்க்கத்தில் சேர வேண்டும் என்று வலியுறுத்தியவர்.
சாகாக் கல்வியின் றரமெலாங் கற்பித்
தேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே
மூவருந் தேவரு முத்தருஞ் சித்தரும்
யாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை
சித்திக ளனைத்தையுந் தெளிவித் தெனக்கே
சத்திய நிலைதனைத் தயவினிற் றந்தனை
என்றெல்லாம் இறைவன் தனக்கருள் புரிந்த விதத்தை வெளிப்படுத்தியவர்.
வள்ளலார் சொன்ன ரகசியம்

வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில்குயில் ஆச்சுதடி – அக்கச்சி
மயில்குயில் ஆச்சுதடி
-என்ற பாடல் அவர் பெற்ற மறை ஞான அனுபவத்தின் விளங்குகிறது. இப்பாடலை பலரும் யோகநிலை விளக்கமாகவே கருதுவர். ஆனால் வள்ளலார் குறிப்பிடும் உண்மைப் பொருள் வெளிப்படையானதல்ல. அது மிக ரகசியமானது. யோக, ஞான நெறி நின்றார்க்கு மட்டுமே பொருள் விளங்கக் கூடியது. வள்ளலார் குறிப்பிட்டிருக்கும் ‘வானம்’ என்பது இங்கே பரவெளியாகிய சபையைக் குறிக்கிறது. ஆக்ஞா சக்கரமாகிய புருவமத்தியில் நிகழும் நெற்றிக்கண் திறப்பையே மயில் ஆடுவதாய் வள்ளற் பெருமான் குறிப்பிடுகிறார். மயில் தோகையை விரித்தாடும்போது அந்தத் தோகையில் காணப்படும் கண்களையும், அதனால் ஏற்படும் பரவச நிலையையுமே அவர் ”மயிலாடக் கண்டேன்”  என்கிறார்.
அப்படியானால் குயில்?
மயில் தோகையை விரித்தாடும்போது கவனம் வேறு எங்கு செல்லும்? அதன் அழகிலேயே மனம் நிலைபெற்றிருக்கும். அதுபோல ஆக்ஞா சக்கரமானது திறந்த பின் ஏற்படும் பரவச நிலையிலேயே எப்போதும் மனம் திளைத்திருக்கத் தலைப்படும். அப்போது அங்கே ’நாதம்’ தோன்றும். அந்த நாதமாகிய ஒலியையே, இனிமையான அந்த சப்தத்தையே ‘குயில்’ என்று உருவகிக்கிறார் வள்ளலார். குயில் கூவுவது எவ்வளவு இனிமையாக இருக்கிறதோ, அவ்வளவு இனிமையாகவும், பரவசத்தைத் தருவதாகவும் அந்த உணர்வு இருப்பதாக அவர் குறிப்பிடுவதே ”மயில் குயில் ஆச்சுதடி”.
குயிலின் குரலை நாம் கேட்க முடியும். ஆனால் அந்தக் குயிலின் குரல் எங்கிருந்து வருகிறது என்பதை உணர்வது சற்று கடினமாக இருக்கும். அதுபோல நாத ஒலியை நாம் கேட்டாலும், அது எங்கிருந்து வருகிறது என்பதை அவ்வளவு எளிதில் உணர இயலாது. மேலும் குயிலின் குரலைக் கேட்டுத்தான் நாம் பரவசமாகிறோமே தவிர, குயிலின் உருவத்தைக் கண்டு அல்ல. குயிலின் குரல்தான் இங்கே முக்கியமாகிறதே தவிர, குயில் அல்ல. ஆனால் குயில் இல்லாமல் அந்தக் குரல் இல்லை. இதையெல்லாம் மனதில் வைத்துத் தான் ’நாதத்தை’ குயிலுக்கு உருவகித்திருக்கிறார் வள்ளலார்.
வள்ளலார் பலவற்றை மிக இரகசியமாகவே, மறை ஞான சூட்சுமமாகவே கூறியிருக்கிறார். அவர் சித்தர். மாபெரும் யோகியும் கூட. ஆதலால் அவர் கூறிய சிலவற்றிற்கு நாம் நேரடியாகப் பொருள் கொள்ளுவது என்பது இயலாது.
அதே சமயம் புருவமத்தியாக ஆக்ஞா சக்கரத்தையே அவர் மூலாதாரமாகக் கருதினார் என்று யாரேனும் கருதினால் அது மிகப் பெரும் பிழையாகும். அதற்கான ஆதாரம் அருட்பாவில் எங்கேயும் இல்லை. வள்ளலாரின் எண்ணமே வேறு.
அவரது உரைநடையில் ’பிண்டானுபவ இலக்கணம்’ என்னும் பகுதியையும், ஞானசித்தியும் ஒளிநிலையும் என்னும் பகுதியையும் ஆழப்படித்தால் அவர் என்ன கூற வருகிறார் என்பது விளங்கும்.
”நாம் நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணை ஆசாரியார் அனுக்கிரகத்தால் திறக்கப்பெற்றுக் கொள்வது நலம்” என்கிறார் வள்ளலார் தனது உரைநடை நூலில். அதாவது மூலாதாரத்திலிருந்து குண்டலினியை எழுப்பி படிப்படியாக ஆக்ஞா சக்கரம் வரை சென்று இறுதியில் நெற்றிக்கண் திறப்புப் பயிற்சியை மேற்கொள்வதை விட, ஆரம்பத்திலேயே நேரடியாக நெற்றிக் கண்ணைத் திறப்பது நல்லது. அதற்கான திறன் பெற்ற ஆசாரியார்களை நாடி அதைச் செய்து கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.
ஏன் அப்படிச் சொல்கிறார்?
மூலாதாரக் குண்டலினியை தானாகவும் முயன்று மேலே எழுப்பலாம். குருநாதர்களின் உதவியாலும் மேலே எழும்பச் செய்யலாம். இப்படி படிபடிப்படியாக அவை மேலே எழும்பப் பல காலம் பிடிக்கும். பல நிலைகளைக் கடந்து வர வேண்டும். மேலும் அது சிலருக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடும். அதனால்தான் அதை நேரடியாக எழுப்புவது சிறந்தது என்கிறார் வள்ளலார். அதற்கு சமரச சன்மார்க்க சங்கத்தை நாடலாம் என்பதையே ”ஆசாரியார் அனுக்கிரகம்” என்று வள்ளலார் கூறுகிறார்.
யோக சாதனையில் மிக உயரிய உச்சத்தை அடைந்தவர் வள்ளற் பெருமான். அதைக் கொண்டுதான் “சாகாக் கலை” என்ற உயரிய கலையை அவர் உலக மக்களுக்கு எடுத்துரைத்தார். மூலாதாரத்திலிருந்து எழும்பு குண்டலினியை ஒழுங்குபடுத்தினால், அதை ஆக்ஞாவையும் கடந்து துரியாதீத நிலைக்குக் கொண்டு சென்றால் அங்கே இறை தரிசனம் கிட்டும். கடவுளைக் காணலாம். உணரலாம் என்பதே அவர்தம் கருத்து.
குண்டலினி ஒரு பாம்பு போலச் சுருண்டு கிடக்கிறது மூலாதாரத்தில். அதைத் தான் ஔவையும் சுட்டுகிறார். ”மூலாதாரத்தின் மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்தே…” இது விநாயகர் அகவலில் வரும் பாடல் வரிகள். இதில் இடம்பெற்றுள்ள ’கால்’ என்ற பதத்திற்கு பலரும் கால், பாதம், விரல் என்றெல்லாம் பொருள் கூறியிருக்கின்றனர். ஆனால் ‘கால்’ என்பதன் பொருள் இங்கே காலைக் குறிக்கவில்லை. அதன் உண்மையான பொருள் ‘கீழ்’ என்பதாகும். ’மூலாதரத்து அக்னியைக் (குண்டலினி) கீழே இருந்து எழுப்பும் கருத்தை அறிவித்தாய்’ என்பதுதான் ஔவை கூறும் உண்மையான பொருள்.
வள்ளற் பெருமானும் தனது உரைநடையில் ஆதி அநாதி என்ற சொற்றொடரைக் குறிக்குமிடத்து ஆதி, கீழ் என்பது காலைக் குறிக்கும் என்றும், அநாதி, மேல் என்பது தலையைக் குறிக்கும் என்றும் குறிப்பிடுகிறார்.
வள்ளலாரைப் போன்ற, தன்னலம் கருதாத, பொன், பொருள், புகழுக்கு ஆசைப்படாத மகா யோகிகளாயே இதுபோன்ற உயர்நிலைகள் சாத்தியம். இந்தக் கால, மூச்சுப் பயிற்சியை மட்டுமே சொல்லித் தந்து, அதை ஒரு பெரிய உன்னத சாதனையாக, சமாதி நிலையாக உருவகிக்கும் ஹை டெக் சாமியார்களால் அது முடியாது. அது நிரந்தரம். இது தற்காலிகம். வேறு பாட்டைப் பிரித்து உணர்ந்து கொள்வது சிறந்தது.
இன்று வையகத்தை வாழ்விக்க வந்த வள்ளலாரின் அவதாரப் பெருநாள். இந்நன்னாளில் அவரை நினைவு கூர்வோம்.
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ச்சோதி

No comments:

Post a Comment