மனது வைத்தால் மலையை நகர்த்தலாம் - www.v4all.org
மலையின் மேல் ஓடிய குதிரை பற்றிய இந்த விசித்திரக் கதையை நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். முனிவர் ஒருவருக்கு அரசர் அந்தக் குதிரையைப் பரிசாக வழங்கினார். கொடுத்த கையோடு முனிவரின் காதில் ஒரு கெட்ட வார்த்தையையும் சொன்னார்.
முனிவர் அதிர்ந்து போனார். “சுவாமி! தவறாக நினைக்காதீர்கள். இந்த வார்த்தையைச் சொன்னால்தான் குதிரை நிற்கும். “கடவுளே நன்றி” என்று சொன்னால் ஓடத் தொடங்கிவிடும்,” என்றார். குதிரை ஓடத் தொடங்கியது. “நான் போய் இந்தக் கெட்ட வார்த்தையை எப்படிச் சொல்வது? யாராவது கேட்டால் என்ன நினைப்பார்கள்?” என்று பலவாறாகக் குழம்பிப் போனார். யோசித்துக் கொண்டே மலைப் பாதையில் போய்க்கொண்டிருந்தவருக்கு திடீரென்று கவனம் வந்தது. குதிரை மலையுச்சியை நெருங்கிக் கொண்டிருந்தது. பத்து அடிகள்தான். குதிரை பாதாளத்தில் விழுந்துவிடும். இதற்கிடையில் அந்தக் கெட்ட வார்த்தை வேறு மறந்து தொலைத்திருந்தது. “குதிரையே! நில் நில்! என்றெல்லாம் கதறினார். ஊஹும். இன்னும் இரண்டே அடிகள்தான்… நல்ல வேளையாக அந்த வார்த்தை நினைவுக்கு வந்தது. சத்தம் போட்டுச் சொல்லவும், மலையுச்சியின் விளிம்பில் குதிரை கனகச்சிதமாக நின்றது. நிம்மதிப் பெருமூச்சு விட்ட மனிதர், “கடவுளே நன்றி” என்றார். குதிரை குபீரென்று பாதாளம் நோக்கிப் பாய்ந்தது.
இதில் இரண்டு விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். குதிரையை நிற்கச் செய்வதற்கு அந்தக் கெட்ட வார்த்தையைச் சொல்ல வேண்டும். ஒரு புதிய விஷயத்தைப் பழகிக்கொள்ளவும் முனிவருக்கு மனமில்லை. அதே நேரம், என்ன நடந்தாலும் “கடவுளே நன்றி” என்று சொல்லிப் பழகிவிட்டது. அந்த விஷயத்தை விடவும் முடியவில்லை. பலருக்கும் வாழ்க்கை சிரமமாக இருப்பது இந்த இரண்டு காரணங்களால்தான். புதிதாக ஒன்றைப் பழகுவதில் இருக்கும் தயக்கம். பழகிய ஒன்றை மாற்றிக்கொள்வதில் இருக்கும் தடுமாற்றம். இந்த இரண்டும் இருந்தால்தான் சின்னப் பிரச்சினைகூட மலைபோல் தெரிகிறது.
புதிய சூழலுக்குத் தங்களை ஆட்படுத்திக் கொள்ளாதவர்கள் வாழ்க்கை என்பதே தடைகள் நிறைந்ததென்று தவறாகக் கருதுகிறார்கள். மாற மறுக்கும் மனோபாவம் பாதையில் கிடக்கும் சின்னஞ்சிறு கூழாங்கற்களைக்கூட மலையென்று கருதி மனம் பதறச் செய்யும்.
ஆப்பிள் கம்ப்யூட்டர் கம்பெனியை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ், தொடங்கி சில ஆண்டுகளிலேயே தன் நிறுவனத்தில் தனக்கும் அடுத்த நிலையில் பொறுப்பேற்குமாறு ஜான் ஸ்கல்லி என்னும் மிகச்சிறந்த நிர்வாகியை அழைத்தார். ஜான் ஸ்கல்லி அப்போது உலகப்புகழ் பெற்ற குளிர்பான நிறுவனம் ஒன்றில் மிக முக்கியப் பொறுப்பில் இருந்தார். மிக விரைவில் அதே நிறுவனத்தில் பல உயரங்களை எட்டிப்பிடிக்கும் நிலையிலும் இருந்தார்.
அந்த பீடத்தை விட்டுவிட்டு நான்கே ஆண்டுகள் ஆன நிறுவனம் ஒன்றில் சேருவதா என்ற தயக்கம் அவருக்கு இருந்தது. மறுத்துச் சொல்லலாம் என்ற மனவோட்டத்தில் ஸ்கல்லி இருப்பது ஸ்டீவ் ஜாப்ஸுக்குப் புரிந்தது. “ஸ்கல்லி! நீங்கள் வாழ்க்கை முழுவதும் சர்க்கரை கலந்த தண்ணீரை விற்றுக் கொண்டிருக்கப் போகிறீர்களா, அல்லது என்னுடன் இணைந்து இந்த உலகத்தை மாற்றப் போகிறீர்களா?”
புதிய முயற்சியில் இறங்குவதென்று முடிவெடுத்தார் ஜான் ஸ்கல்லி. ஆப்பிளுக்கான காலம் கனிந்தபோது அதனால் பெருமளவு பணமும் பயனும் பெற்றார். ஒரு புதிய விஷயத்தை அவர் துணிச்சலுடன் ஏற்றதால் உழைப்புக்கும் புதிய முயற்சிக்கும் உரிய பலன் கிடைத்தது. இன்று பல நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களிடையே புதிய விஷயங்களை ஏற்றுக்கொள்ளச் செய்யத் தான் போராடி வருகின்றன.
வாரன் பெனிஸ் என்பவர் மிக முக்கியமான நிர்வாகவியல் ஆலோசகர். முன்னணி நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குநர் ஒருவரிடமிருந்து அவருக்குக் கடிதம் வந்திருந்தது. “வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரியும். ஆனால் என்னிடம் பணிபுரியும் ஆயிரக் கணக்கானவர்கள் தங்கள் உலகம் மாறுவதை விரும்பவில்லை. என்ன செய்யலாம்?” என்று கேட்டிருந்தார். உலகின் மாற்றங்களை அங்கீகரிக்காதவர்களுக்குத்தான் எல்லாமே தாண்ட முடியாத சிக்கல் போலத் தோன்றுகிறது.
தனிமனித நிலையிலாகட்டும், நிறுவன அளவிலாகட்டும், மாற்றத்தையும் புதுமைகளையும் புகுத்தும் முன்னால் அவற்றுக்கான அவசியத்தை அங்கீகரிக்க வேண்டும். மனநிலையில் யாரெல்லாம் மாற்றத்திற்குத் தயாராகிறார்களோ, அவர்கள் எல்லாம் உற்சாகமாக முன்னேறிச் செல்கிறார்கள்.
ஒரு சின்னக் குன்றைப் பார்த்ததும் குழந்தை குதித்தேறுவதுகூட அதனால்தான். பெரியவர்களுக்கோ, அவ்வளவு தூரம் ஏற வேண்டுமே என்கிற மலைப்பு ஏற்படுகிறது. அந்த மலைப்புக்கு மலை காரணமல்ல. மலையேறுவது சிரமம் என்கிற முன்முடிவே காரணம்.
புதிய மாற்றங்களுக்குத்தான் பொருத்தம் தானா என்கிற கேள்வி காந்தியடிகளுக்குக்கூட இருந்தது. நவீன இந்தியாவில் தனக்கு இடமில்லை என்று அவரே அறிவித்தார். ஆனால் காந்தீயத்தின் சில அம்சங்களை நவீன உலகம் உரிய மாற்றங்களுடன் உள்வாங்கிக் கொண்டது.
“மாற்றங்களுக்கு அஞ்சிய பெண்மணி ஒருவர் மனச்சோர்வுடன் அமர்ந்திருந்தார். அவரை உசுப்பி, உற்சாகம் கொள்ள வைத்தது, உபதேசங்கள் அல்ல. ஒரு விளம்பர வாசகம். “ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்” என்ற நிறுவனம் “எங்ற் ண்ய்ற்ர் ற்ட்ண்ள் ஜ்ர்ழ்ப்க்” என்று வாசகத்தை தன் விமான சேவை களுக்கான விளம்பரமாய் வெளியிட்டிருந்தது. இந்த உலகுக்குள் தனக்கு மட்டும் இடமில்லையா என்ன என்று அவர் உற்சாகமாய் மீண்டும் முயன்றார். சுயமுன்னேற்ற நிபுணரும் ஆனார். அவர்தான் சூஸன் ஜெஃபர்ஸ். Feel the fear and do it anyway என்ற புத்தகத்தின் ஆசிரியர்.
No comments:
Post a Comment