Sunday, May 24, 2015

வீட்டில் சிவபூசை செய்வது இப்படி!!!

வீட்டில் சிவபூசை செய்வது இப்படி!!! - www.v4all.org 
உண்மையான அன்புடன் சில பூக்களைத் தூவி ஐந்தெழுத்தை உச்சரித்தாலே போதும். அதுவே மிகச் சிறந்த சிவபூசை தான்!
ஆலயங்களில் செய்யப்படும் இறைவழிபாட்டில் பதினாறு வகை உபசாரங்கள் முக்கிய இடம்பெறும். அதை “சோடச உபசாரம்” என்பார்கள்....
நம் வீட்டுக்கு, புகழ்பெற்ற ஒருவர் வந்தால் என்னென்ன உபசாரம் எல்லாம் செய்து வரவேற்று விடைகொடுத்து அனுப்புவோமோ, அதையே உலகனைத்துக்கும் தலைவனான இறைவன், கோயிலுக்கு எழுந்தருள்வதாக நினைந்து செய்வதுதான் இந்தப் பதினாறு உபசாரங்களும்!
சோடச உபசாரம் பலவாறு சொல்லப்படினும், பின்வருவன பொதுவானவை.
1. ஆவாகனம் – பூசையை ஏற்றுக்கொள்ள எழுந்தருளுமாறு இறைவனை வேண்டுதல்
2. ஆசனம் – இலிங்க மூர்த்தத்தில் அமர்ந்திருந்து அருள்பாலிக்குமாறு இறைவனை வேண்டுதல்
3. பாத்தியம் – திருவடிகளை நீரால் கழுவுதல்.
4. அர்க்கியம் – நீர் தெளித்தல்
5. ஆசமனம் – அருந்த நீர் கொடுத்தல்
6. மதுவர்க்கம் – பால் பழங்களை இறைவன் முன் படைத்தல்
7. அபிடேகம் –இறைவனை நீராட்டுதல்.
8. வத்திரம் – ஆடை அணிவித்தல்
9. யஞ்ஞோபவீதம் – பூணூல் அணிவித்தல்
10. கந்தம் – வாசனைத்திரவியம் தெளித்தல்
11. புட்பம் – மலர் சாத்துதல்
12.தூபம் – சாம்பிராணி காட்டுதல்
13. தீபம் – தீபாராதனை செய்தல்
14. நைவேத்தியம் – இறைவனுக்கு உணவு படைத்தல்
15. தாம்பூலம் – வெற்றிலை பாக்கு வழங்குதல்
16. நீராஞ்சனம் – கற்பூரம் காட்டுதல்
ஒவ்வொரு உபசாரத்தையும் செய்யும் போது, “எம்பெருமானே, என் பூசைக்கு எழுந்தருளுவாய்”, “இந்த இலிங்கத்தில் அமர்ந்து அருள்பாலிப்பாய்”, “உன் திருவடிகளை நீரால் கழுவுகிறேன், அருள்புரிவாய்” , “உன்மீது நீர் தெளிக்கிறேன், குளிர்ந்தருள்வாய்”, “”அருந்த நீர் தருகிறேன், ஏற்றுக்கொள்வாய்” என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே மனதார வேண்டிக்கொள்ளலாம்.
குறிப்பிட்ட பொருள் கிடைக்காதபோது, மானசிகமாக அதை வழங்குவதாகக் கற்பனை பண்ணிக்கொள்ளலாம்.
இவ்வாறு பதினாறு உபசாரம் செய்தபின், தெரிந்த தேவாரம், திருமுறை பாடி, மீண்டும் தீபம் காட்டி, உங்கள் வேண்டுதல்களைக் கூறி, இறைவனை மனதார வேண்டி மலர்தூவுங்கள்.
இவ்வாறு பூசைமுடிந்தபின், பூசைக்கு எழுந்தருளியதற்கு நன்றி கூறி “சென்று வருவாய் அப்பா” என்று கடவுளுக்கு விடைகொடுக்கவேண்டும். இதை “அந்தர்த்தானம்” என்போம். அவ்வளவுதான். பூசை ஆயிற்று. படைத்த பிரசாதத்தை எடுத்து, கோயிலில் செய்வதுபோல், உங்கள் வீட்டுக்குழந்தைகளுக்கும் அயலவர்களுக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள்.


No comments:

Post a Comment