கூகுள் ஆண்டவர் இல்லாமல் இங்கு பலருக்கு வேலை ஓடாது. கூகுள் வந்த பிறகு பலருக்கு நினைவுத்திறன் குறைந்தது. பலரது நினைவு திறனுக்கு மதிப்பில்லாமல் போனது. கூகுள் சர்வர் முடங்கினால் 40 சதவீதம் அளவுக்கு இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறையும் அளவுக்கு இணையம் முழுவதும் கூகுள் வியாபித்திருக்கிறது.
கூகுள் பற்றிய மேலதிக விவரங்கள் இதோ...
லாரி பேஜ் மற்றும் செர்கி பிரின் இரண்டு நண்பர்கள் உருவாக்கியதுதான் கூகுள். சமகாலத்தவர்களான இவர்கள் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படிக்கும் போது நண்பர்களானார்கள். மேலும் இவர்கள் இருவரும் இடதுசாரி சிந்தனை உடையவர்களும் கூட.
தங்களுடைய புராஜெக்டாக ஒரு தேடு பொறியை உருவாக்கினார்கள். நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை/ஆவணங்களை தேடுவதற்காக உருவாக்கியதுதான் இந்த தேடுபொறி (google.stanford.edu). இதை பிஸினஸாக மாற்ற இவர்களுக்கு விரும்பம் இல்லை. ஆரம்பத்தில் ஒரு விநாடிக்கு 50 ஆவணங்களை தேடிக்கொடுத்தது. இப்போது லட்சக்கணக்கான ஆவணங்களை நொடியில் தேடிக்கொடுக்கிறது.
யாரிடமாவது 10 லட்சம் டாலருக்கு விற்க நினைத்தார்கள். ஆனால் இந்த ஐடியாவை யாரும் வாங்கத் தயாராக இல்லை. ஒரு வேளை வாங்கி இருந்தால் இந்த அளவு வளர்ச்சி சந்தேகமே.
Andy Bechtolsheim என்பவர் ஒரு லட்சம் டாலர் முதலீடு செய்ய, 1998-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் உதயமானது.
ஆரம்பத்தில் Googol, googolplex என்கிற பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டன. Googol என்பது எண் ஒன்றுக்கு அடுத்த 100 பூஜியங்களை கொண்ட எண் ஆகும். இந்த பெயர்தான் google என்று மாறியது.
googolplex என்பது Googol-ன் பத்து மடங்கு. googolplex என்ற பெயர்தான் கூகுள் கார்ப்பரேட் அலுவலகத்தின் பெயர்.
கூகுள் என்ற உச்சரிப்புக்கு ஏற்ற பல பெயர்களை இந்த நிறுவனம் பதிவு செய்து வைத்திருக்கிறது.
நிறுவனம் ஆரம்பித்த நான்கு வருடங்கள் வரை ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்தே பணியாளர்களை தேர்வு செய்திருக்கிறார்கள். முக்கியமான பொறுப்புக்கு நிறுவனர்களே நேரடியாக தேர்வு செய்வார்கள்.
53,000 பணியாளர்களுக்கு மேல் இங்கு பணிபுரிகிறார்கள். சராசரியாக ஒரு பணியாளர் மூலம் ஆண்டுக்கு 12 லட்சம் டாலருக்கு மேல் வருமானம் கிடைக்கிறது.
கூகுள் கார்ப்பரேட் அலுவலக வளாகத்தில் வாகனங்கள் இருக்கும். அதை எடுத்துக்கொண்டு எங்கு வேண்டுமானலும் செல்லலாம்.
தங்களுடைய அலுவலக நேரத்தில் 20 சதவீத நேரத்தை புதிய கண்டுபிடிப்பு, ஆராய்ச்சிக்காக செலவு செய்யலாம். ஆனாலும் இருக்கும் வேலையை செய்வதற்கே நேரம் இருக்காது, 20% என்பது தேவையற்ற விளம்பரம் என்ற குற்றச்சாட்டும் உண்டு.
2004-ம் ஆண்டு கூகுளுக்கு முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில்தான் ஆர்குட், ஜிமெயில் உள்ளிட்ட விஷயங்களை அறிமுகம் செய்தது. பொது பங்கு வெளியீடு வந்ததும் இந்த ஆண்டுதான். (பேஸ்புக் போட்டியை சமாளிக்க முடியாமல் சமீபத்தில் ஆர்குட் மூடப்பட்டது)
2004-ம் ஆண்டு கூகுள் பங்குச் சந்தையில் பட்டியலிட்ட போது அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4052 கோடி டாலர்தான். ஆனால் தற்போதைய சந்தை மதிப்பு 37,649 கோடி டாலராகும்.
ஆண்ட்ராய்டு, யூடியூப், மோட்டோரோலா என இதுவரைக்கும் 170க்கும் மேற்பட்ட நிறுவனங்களை கூகுள் கையகப்படுத்தி இருக்கிறது. இந்தியாவைச் சேர்ந்த இன்மொபி நிறுவனத்தைக் கையகப்படுத்தப் போவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
டேட்டா பாதுகாப்புக்காக உலகத்தின் பல்வேறு இடங்களில் 9 லட்சம் சர்வர்களை வைத்திருக்கிறது.
வேலை செய்வதற்கு பணியாளர்கள் விரும்பும் இடமாக கூகுள் இருக்கிறது. பார்சூன் பத்திரிகை வெளியிடும் அறிக்கையில் கூகுள் தொடர்ந்து ஆறு வருடங்களாக முதல் இடத்தில் இருக்கிறது.
கூகுள் பிளே ஸ்டோரில் 14 லட்சம் செயலிகள் (ஆப்ஸ்) பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. அதேபோல ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள்தான் அதிகம்.
தவிர கூகுள் பிளஸ், கூகுள் கிளாஸ், இன்டர்நெட் பலூன், டிரைவர் இல்லாத கார் என கூகுள் நிறுவனத்தின் புதுமைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
No comments:
Post a Comment