“கல் உப்பு சாப்பிடுங்க...கோடீஸ்வரன் ஆகுங்க!”
‘செல்வந்தர் ஆவது நமது பிறப்புரிமை. இன்றே கற்றுக்கொள்ளுங்கள், செல்வத்தைப் பெருக்கும் பிரபஞ்ச சூத்திரம்’ என்று அழைத்தது ஒரு விளம்பரம். அந்த விளம்பரத்தில் இருந்த நிகழ்ச்சியின் பெயர் ‘பணவளக்கலை’. பங்குச் சந்தையில் எப்படி முதலீடு செய்வது, எந்த இடத்தில் நிலம் வாங்கினால் லாபம் மாதிரியான விஷயங்களைச் சொல்லித் தருவாங்கனு பார்த்தால், அவர்கள் சொல்வதெல்லாம் அடடடா, அப்பப்பா ரகம். இந்தப் பயிற்சியைச் சொல்லித்தரும் டாக்டர். ஆனந்த் ராம் பேசுவதை நீங்களும்தான் கேளுங்களேன்!
‘‘பணத்தை எப்படிப் பார்க்கணும், எப்படிப் பயன்படுத்தணும், செல்வத்துக்கு லட்சுமியையும், குபேரனையும் ஏன் குறியீடா வெச்சிருக்காங்க, பணத்துக்கான குறிக்கோளை எப்படி வைக்கணும்னு பல கேள்விகளுக்குப் பதில் சொல்லும்படி இருக்கும் என்னோட பயிற்சி. கோயில்ல உப்பைக் கொட்டிக் கும்பிடுறாங்களே, ஏன்? உப்பு இல்லாத மருத்துவமே உலகத்துல கிடையாது. உடம்பைச் சுத்தப்படுத்துற அற்புத மருந்து. தவிர, நம்ம உடம்புக்கு நல்ல வைப்ரேஷனையும் கொடுக்கும். கல் உப்பைத் தொடர்ந்து பயன்படுத்தினாலே நம் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் நடக்கிறதைக் கண்கூடா பார்க்கலாம். இது ‘பணவளக்கலை’ பயிற்சியில் முக்கியமான சப்ஜெக்ட் (?!). அடுத்து, மூளைக்கு என்ன தேவை? வலது மூளை எப்படி வொர்க் ஆகுது? இடது மூளை எப்படி வொர்க் ஆகுது? ரெண்டுல எந்த மூளைக்கு அதிக வேலை கொடுத்தா, உங்களுக்கு கான்சன்ட்ரேஷன் அதிகமாகும்னு சொல்லித் தருவோம். இதுக்கு எங்ககிட்ட மருந்துகள் இருக்கு. ஸ்பெஷலான இசையை ஒலிக்கவிடுவோம்’’ என்று அதிரடி அறிமுகம் தந்தவர் தொடர்ந்தார்.
‘‘பூமிக்கும், காந்தத்துக்கும் ஈர்ப்பு விசை இருக்கிற மாதிரி ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் ஈர்ப்பு விசை இருக்கு பாஸ். அதனாலதான் கோவையில இருக்கிற என்கிட்ட சென்னையில இருந்து நீங்க பேட்டி எடுத்துக்கிட்டு இருக்கீங்க. இந்த ஈர்ப்பு விசையை வெச்சு, தொழில்ல வாடிக்கையாளர்களை ஈர்ப்பது எப்படிங்கிற விஷயமும் என்னுடைய பயிற்சியில் இருக்கு. தொழில் பண்றவங்களுக்கு மட்டுமில்லை. கடன் கொடுத்தவங்க, கடன் வாங்கினவங்க, நகையை அடகு வெச்சவங்கனு அத்தனை பேருக்கும் ஐடியா கொடுக்கும் இந்த ‘பணவளக்கலை’ பயிற்சி. மொத்தம் நூறு நாள் சொல்லித் தருவேன். இந்த நூறு நாள்ல உங்க வாழ்க்கையை மொத்தமா மாத்திடலாம். கடன் கொடுத்தவங்களை சபிக்காம, அவங்களை வாழ்த்திப் பேசுங்கனு சொல்றேன். அப்படிப் பேசுனா, அவங்களோட நல் எண்ணங்கள் தூண்டப்பட்டு கடனைத் திருப்பிக் கொடுத்துடுவாங்க. இப்படிப் பல விஷயங்கள் பயிற்சியில இருக்கு பாஸ்’’ என்றவரிடம், பலன் பெற்றவர்களைப் பற்றி விசாரித்தேன்.
‘‘இதுவரை ஆயிரம் பேருக்குப் பயிற்சி எடுத்திருப்பேன். அதுல பாதிப்பேர் நல்லா பணம் சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஒரே ஒருநாள் பயிற்சியில கலந்துக்கிட்டு போனவங்களுக்குக்கூட பல வருடமா கைக்கு வராத கடன் உடனே கிடைச்சிருக்கு. காசைக் கொடுக்காம இழுத்தடிச்சுக்கிட்டு இருந்தவர் தேடி வந்து கொடுத்துருக்கார். பயிற்சிக்கு வர முடியாம, ‘பணவளக்கலை’ங்கிற எங்க புத்தகத்தைப் படிச்சவங்களுக்குக்கூட நிறைய அதிசயம் நடந்திருக்கு. நோட்டீஸ்ல நான் போட்டிருந்த ‘ரேட்’டைக் கட்டிட்டு ஒரு தடவை பயிற்சிக்கு வாங்க. வாழ்க்கை எங்கேயோ போயிடும்!’’ என மீண்டும் டாப் கியரில் தொடர்ந்தார் டாக்டர். ஆனந்த் ராம்!
- கே.ஜி.மணிகண்டன்
from - http://www.vikatan.com/article.php?module=magazine&aid=106610
ஆனந்தம். உங்களுக்கு சகல ஐஸ்வர்யமும் உண்டாகட்டும்.
பயிற்சி + முயற்சி + தொடர்ச்சி = வெற்றி
urs
Jc.Dr.Star Anand Ram
Money Attraction Coach
9790044225
No comments:
Post a Comment