Saturday, May 30, 2015

சுவாமி அரவிந்தர்-நற் சிந்தனைகள்

சுவாமி அரவிந்தர்-நற் சிந்தனைகள்

*நமது வழி பூரணத்தை அடையும் வழியாக இருக்கட்டும், விட்டுவிட்டு ஓடிவிடும் வழியாக இருக்க வேண்டாம்; போரில் வெற்றி பெறுதல் நமது நோக்கமாக இருக்கட்டும், எல்லாப் போராட்டத்திலிருந்தும் தப்பிச் செல்லுதலாக இருக்க வேண்டாம்.

*யோகத்தின் மூலம் நாம் பொய்மையிலிருந்து உண்மைக்கும், பலவீனத்திலிருந்து சக்திக்கும், துன்பம் துயரத்திலிருந்து பேரின்பத்திற்கும், அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரத்திற்கும், மரணத்திலிருந்து அமர நிலைக்கும், இருளிலிருந்து ஒளிக்கும், குழப்பத்திலிருந்து தெளிவிற்கும், அபூரணத்திலிருந்து பூரணத்திற்கும், பிரிவிலிருந்து ஐக்கியத்திற்கும் உயராம்.

*நமது அஞ்ஞானத்தினால், புறத் தோற்றத்தைக் கொண்டு தவறான முடிவு செய்துவிடுகிறோம்; இரகசியமாக உள்ளே உறையும் இறைவனைக் காணத் தவறிவிடுகிறோம். ஆனால் ஞானிகள் இந்தத் தவற்றைச் செய்வதில்லை. அவர்கள் பார்வை அகங்காரத்தால் மறைக்கப்படாததால் அவர்கள் உண்மையைக் கண்டு கொள்கின்றனர்; இங்கு குறுகிய மனித இயற்கையில் கட்டுண்டிருப்பவனே இறைவனாக நாம் வணங்கும் எல்லையற்ற பரஞ்சோதிப் பொருள் என்பதை அறிகின்றனர். படைப்புகளுக்கு மேல், உலகங்களுக்கு அப்பால், அவனுடைய பரமேஸ்வர நிலையை அவர்கள் உணர்கிறார்கள். அதே சமயம் உலகிடை அந்தர்யாமியாக இருக்கும்போதும் அவன் சர்வேஸ்வரனே என்பதையும் அறிந்துகொள்கிறார்கள். உலகில் நானாவிதமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்காகத் தன்னிச்சையாகவே இறைவன் தன் சக்திகளைச் சுருக்கிக் கொள்கிறான்.

*உன்னுள் உள்ள வலிமையைத் தெளிவாக உணர முயல். அதை முன்னுக்குக் கொண்டு வர முயல். நீ செய்வதெல்லாம் உனது சொந்த செயலாயில்லாமல், உன்னுள் உள்ள உண்மையின் செயலாயிருக்கட்டும். நீ உயிரோடிருக்கும் ஒவ்வொரு மணி நேரமும் அவ்வுண்மையின் சாந்நித்தியத்தால் ஒளிபெறட்டும், உனது ஒவ்வொரு சிந்தனையும் அந்த ஒரே ஊற்றிலிருந்து தெய்வீக ஊக்கம் பெறட்டும்; உனது திறன், நற்குணம், பண்பு எல்லாம் உன்னுள் கோயில் கொண்டுள்ள அந்த அமரசக்தியின் பணிக்கே ஆகட்டும். இதற்காக முயல்வாயாக.

*உனது ஆத்மாவையே அனைத்திலும் காண்; எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் பகைக்காதே. உலக அரங்கில் உன் பங்கை வலிமையோடும், துணிவோடும் ஆற்றிடு. அவ்வாறே நீ உனது உண்மையான இயல்பின்படி இருப்பாய், வெற்றியானாலும், தோல்வியானாலும், சாவானாலும், சித்ரவதையானாலும் அனைத்திலும் தெய்வமாகவே இருப்பாய் - தெய்வத்திற்குத் தோல்வி ஏது? சாவு ஏது?

*மீண்டும் உனக்குச் சொல்கிறேன், வலிமையுடையவனும், துணிவுடையவனுமே கடவுளை அடைவான். கோழையும், பலவீனனும் கடவுளை அடைவதில்லை.

*நம்பிக்கை மனிதனுக்கு இன்றியமையாதது. நம்பிக்கையின்றி ஆன்மீகப் பாதையில் முன்செல்ல முடியாது. ஆனால் நம்பிக்கையை ஒருவன் மீது திணிக்கக்கூடாது. அது சுயமாக உணர்ந்து வரவேண்டும் அல்லது அந்தராத்மாவின் மறுக்க முடியாத வழிகாட்டுதலாக வரவேண்டும்.

*வாழ்வில் இறைவனை வெளிப்படுத்துவதே மனிதனுக்கு விதிக்கப்பட்ட மகத்தான வேலை. விலங்கிற்குரிய உயிர்த் தத்துவமும் செயல்களும் அவன் தொடக்கம், ஆனால் அவன் அடைய வேண்டிய இலக்கோ முழு தெய்வத்தன்மையாகும்.

*நம் உள்ளேயே மெய்ப்பொருளைக் காண வேண்டும். அவ்வாறே பூரண வாழ்வின் மூலத்தையும் அடித்தளத்தையும் நம் உள்ளேயே காணவேண்டும். புற அமைப்புகள் எதுவும் அதைத் தரமுடியாது. உலகிலும் இயற்கையிலும் உண்மையான வாழ்வைப் பெறவேண்டுமானால் உள்ளே உண்மையான ஆன்மாவை அடைய வேண்டும்.

www.happy4all.org

No comments:

Post a Comment