விவிலிய வழிகாட்டி: நீங்கள் ஏழையா.. செல்வந்தரா..?
புவி வாழ்வில் தான் கண்டுபிடித்த பணமும் பொருளுமே எல்லாவற்றையும்விடத் தனக்கு உயர்ந்ததாக இருக்கிறது என மனிதன் நம்புகிறான். கடவுள் தன்னை ஏழையாகப் படைத்துவிட்டதாகவும் தன்னைத் தொடர்ந்து சோதிப்பதாகவும் வறியவன் கதறுகிறான்.
கடவுளைத் திட்டித் தீர்க்கிறான். பணக்காரனோ கடவுள் தன் நிம்மதியைப் பறித்துத் தனக்கு நோய்களைக் கொடுத்துவிட்டதாகப் புலம்புகிறான். இவ்விருவருமே தங்கள் நிலையிலிருந்து செய்ய வேண்டியதைச் செய்து வந்தால் ஏழையைச் செல்வந்தனாகவும், செல்வந்தனை நிம்மதியோடும் கடவுள் வாழ வைப்பார்.
இயேசுவின் சீடர்களில் ஒருவராகிய யாக்கோபு சொல்வதைப் பாருங்கள். “தாழ்ந்த நிலையிலுள்ள ஒரு சகோதரன் தனக்கு ஏற்பட்டுள்ள உயர்வை எண்ணி மகிழ்ச்சி அடையட்டும். பணக்காரனாக இருக்கும் சகோதரன் தனக்கு ஏற்பட்டுள்ள தாழ்வை எண்ணி மகிழ்ச்சி அடையட்டும்; ஏனென்றால், புல்வெளிப் பூவைப் போல் அவன் காய்ந்துபோவான். உச்சிவெயில் கொளுத்தும்போது, புல் வாடி வதங்கி, பூ உதிர்ந்து, அதன் அழகிய தோற்றம் மறைந்துபோகும். அதேபோல், பணக்காரனும் தன்னுடைய போக்கில் போகும்போதே வாடி மறைந்துபோவான்”(யோக்கோபு 1:9-13).
சோதனையும் பாவத்தின் கருத்தரிப்பும்
சோதனைகளைச் சகித்துக்கொண்டே இருக்கும் மனிதன் சந்தோஷமானவன்; ஏனென்றால், அவன் பரலோகத் தந்தையினால் சரியான நேரத்தில் அங்கீகரிக்கப்படும்போது அவனைப் புகழ் வந்துசேரும். சோதனை வரும்போது, “கடவுள் என்னைச் சோதிக்கிறார்” என்று யாரும் சொல்லக் கூடாது.
தீய காரியங்களால் கடவுளைச் சோதிக்க முடியாது, அவரும் யாரையுமே சோதிப்பது கிடையாது. ஒவ்வொருவனுடைய கெட்ட ஆசைதான் அவனைக் கவர்ந்திழுத்து, சிக்கவைத்து, சோதிக்கிறது. பின்பு அந்த ஆசை கருத்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கிறது; பாவம் கடைசியில் மரணத்தை விளைவிக்கிறது” என்கிறார் யாக்கோபு.
கவனிக்காமல் விட்ட களைகள்
நீங்கள் ஏழையோ செல்வந்தரோ ஒவ்வொருவரும் மற்றவர்கள் சொல்வதைக் காதுகொடுத்து கேட்பதில் தீவிரமாகவும், பேசுவதில் நிதானமாகவும், நியாயமாக கோபப்பட்டாலும் அதைத் தாமதமாகவும், கோபப்பட வேண்டியவர்களிடம் கோபத்தை மென்மையாகவும் வெளிப்படுத்துங்கள். இவையே நல்ல குணங்களின் அடிப்படையான தொடக்கம். பணக்காரர் தவறுசெய்தால் அவரிடம் கோபப்பட அஞ்சாதீர்கள் என்கிறது விவிலியம்.
ஆனால் உங்கள் கோபத்தை கொடூரமான தாக்குதலாகவும் மறைந்திருந்து காத்திருந்து தாக்குலாகவும் சரியான நேரத்துக்காகக் காத்திருந்து பழிவாங்கும் கொடூர கோபமாகவும் அதை உள்ளத்துள் வைத்து வளர்க்காதீர்கள். அத்தகைய கோபம் நல்ல கோதுமை வயலில் நீங்கள் கவனிக்காமல் விட்ட களைச் செடிகளைப் போன்றது. அறுவடை நாளில் உங்கள் களஞ்சியம் நிறைந் திருக்காது. கோபத்தின் அறுவடையும் அத்தகையதே! ஏனென்றால், கோபப் படுகிற மனிதனால் கடவுளுடைய நீதியை நடைமுறைப்படுத்த முடியாது.
ஆகவே, எல்லாவித அருவருப்பையும் துர்குணத்தையும் ஒதுக்கித் தள்ளிவிடுங்கள்; அதோடு, உங்கள் உயிரை மீட்பதற்கு வல்லமையுள்ள தேவ வார்த்தையைச் சாந்தமாக ஏற்றுக்கொண்டு உங்கள் உள்ளத்தில் பதிய வையுங்கள். தேவ வார்த்தையைக் கேட்கிறவர்களாக இருந்தால் மட்டும் போதுமென நினைத்துக்கொண்டு உங்களையே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள், அந்த வார்த்தையின்படி செய்கிறவர் களாகவும் இருங்கள்” எனப் போதிக்கிறது விவிலியம்.
கண்ணாடி பிம்பம் மறக்கப்படும்
ஏனென்றால், தேவ வார்த்தையைக் கேட்டுவிட்டு அதன்படி செய்யாத மனிதன், கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்கிறவனுக்கு ஒப்பாக இருக்கிறான்; அவன் தன்னைக் கண்ணாடியில் பார்த்துவிட்டுப் போனவுடனே தன் தோற்றம் எப்படி இருந்தது என்பதை மறந்துவிடுகிறான். ஆனால், தேவ வார்த்தைகளைல் கடைப்பிடிக்கிறவன், அதற்கேற்ற செயல்களைச் செய்கிறான்; அப்படிச் செய்வதால் அவன் சந்தோஷமானவனாக இருக்கிறான்.
தகுந்த முறையில் கடவுளை வணங்குவதாக நினைத்துக் கொண்டிருக்கிற ஒருவன் தன் நாவை அடக்காமல் தன் இருதயத்தை ஏமாற்றிக் கொண்டிருந்தால், அவனுடைய வணக்க முறை வீணானதாக இருக்கும். துன்பப்படுகிற யாருக்கும் உதவத் தயங்காத செல்வந்தனும் இரந்து வாழ்வதை ஒரு கட்டத்தில் உதறிவிட்டு உழைக்கத் தொடங்கும் ஏழையும் கடவுளின் பிள்ளைகளாக மாறிவிடுகிறார்கள்.
No comments:
Post a Comment