Friday, May 22, 2015

வியப்பூட்டும் வேலண்டைன் கதைகள் !

வியப்பூட்டும் வேலண்டைன் கதைகள் !- www.v4all.org 

1. வேலண்டைன் தினம் வேலண்டைன் எனும் பாதிரியாரால் வந்தது என்பதே பொதுவான நம்பிக்கை. ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் எண்ணம். திருமணம் செய்து கொள்ளவேண்டும் என துடித்த ஆண்களுக்கு உதவினார் வேலண்டைன். அரச கட்டளையை மீறி திருமணங்கள் நடத்தி வைத்தார். 
 மன்னனுக்கு விஷயம் தெரிய வந்தபோது வேலண்டைனைப் பிடித்து மரண தண்டனை விதித்தார். அவர் கொல்லப்பட்ட நாள் தான் பிப்ரவரி 14. இது நடந்தது கி.பி 270. வேலண்டைன்ஸ் டே குறித்து உலவும் கதைகளில் பெரும்பாலானவர்கள் நம்பும் கதை இது.

2. அமெரிக்கா இந்த ஆண்டைய காதலர் தினத்தை ஒரு ஹாலிவுட் திரைப்படத்துடன் கொண்டாடுகிறது. “வேலண்டைன்ஸ் டே” எனும் பெயரில் வெளியாகும் இந்தப் படத்தை பிரபல வார்னர் பிரதர்ஸ் தயாரிக்கிறது. ஜெஸிகா அல்பா, கேத்தி பேட்ஸ், ஜூலியா ராபர்ட்ஸ், ஜெஸிகா பேல் ஆகியோர் நடித்துள்ளனர். கேரி மார்ஷல் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் காதலும், காமமும் இழையோடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா ?

3. காதலர் தினத்தை யார் ரொம்ப ஆர்வமாய் வரவேற்பது ? காதலர்கள் என்பது உங்கள் பதிலென்றா அது தவறு. உண்மையில் காதலர் தினத்தை பெரிதும் எதிர்பார்ப்பது வியாபாரிகள் தான். வாழ்த்து அட்டைகள், பரிசுகள், சாக்லேட்கள், மலர்கள், சிடிக்கள், புத்தகங்கள் என அன்றைய தினத்தின் பிஸினஸ் பல பில்லியன் டாலர்கள். ஹால்மார்க் எனும் ஒரு நிறுவனம் காதலர் தினத்துக்காக வெளியிடும் வாழ்த்து அட்டைகளின் எண்ணிக்கை மட்டுமே ஆண்டுக்கு 20 கோடி !

4. அமெரிக்காவில் சராசரியாக இந்த காதலர் தினத்தன்று செலவாகும் ரோஜாக்களின் எண்ணிக்கை சுமார் 22 கோடி. பூக்களைப் போட்டி போட்டு வாங்குவது ஆண்கள் தான். 73 சதவீத விற்பனை அவர்களால் தான் நடக்கிறது. பூவுக்கே பூ கொடுக்கிறேன் என காதலுடன் பூ நீட்டுகிறார்கள் ஆண்கள். அப்படியானால் பெண்கள் ? வாழ்த்து அட்டைகள் வாங்குவதில் அவர்கள் தான் முதலிடத்தில் நிற்கிறார்களாம்!.

5. காதலர் தினத்தன்று சந்திக்கும் ஆணைத் திருமணம் செய்து கொள்வோம் எனும் நம்பிக்கை பண்டைக் காலத்தில் பரவியிருந்தது. அதனால் தன் மனதுக்குப் பிடித்தவரைச் சந்திக்க வேண்டுமே என பெண்கள் காத்திருப்பார்களாம். தனக்கு ஒரு காதலி கிடைப்பாளா என ஆண்களும் காதலர் தினத்தன்று அங்கும் இங்கும் அலைந்து திரிவார்களாம்.

6. கிரீட்டிங் கார்ட் பரிமாறும் வழக்கம் பதினேழாம் நூற்றாண்டிலேயே ஆரம்பமாகி விட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அது கிளைவிட்டுப் பரவியது. இன்றைக்கு அது மிகப்பெரிய வணிகத் தளமாகவும் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. உலக அளவில் கிறிஸ்மஸ் தினத்துக்கு அடுத்தபடியாக ஒரு பில்லியன் எண்ணிக்கை தாண்டி வாழ்த்து அட்டைகள் விற்பனையாவது காதலர் தினத்தில் தான். இமெயில், எஸ் எம் எஸ், இ-கார்ட், இண்டர் நெட் என ஹைடெக் வாசமடிக்கும் டிஜிடல் உலகம் இது. ஆனாலும் எந்த டெக்னாலஜியாலும் வாழ்த்து அட்டைகளை முழுமையாய் அழிக்க முடியவில்லை என்பது வியப்பு !

7. அமெரிக்கா போன்ற பல மேலை நாடுகள் வேலண்டைன்ஸ் தினத்தை காதலர்கள் மட்டும் கொண்டாடுவதில்லை. நண்பர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். வகுப்பறைகளையல்லாம் அலங்கரித்தும், ஆசிரியர்களுக்குப் பரிசுகள் கொடுத்தும் மாணவர்கள் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவில் வேலண்டைன் நாளில் வாழ்த்து அட்டை வாங்குவதில் ஆசிரியர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பது வியப்பான உண்மை. இதற்கான புண்ணியத்தைக் கட்டிக் கொள்பவர்கள் ஆறு வயதுக்கும் பத்து வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்கள்.

8. சீனர்களின் காதலர் தின கதை சுவாரஸ்யமானது. சுவர்க்கத்தின் சக்கரவர்த்திக்கு ஏழு மகள்கள். ஏழாவது மகளான ஸி நூ அழகிகளுக்கெல்லாம் அழகி ! பேரழகி. ஒரு நாள் ஏழு சகோதரிகளும் நதியில் குளித்துக் கொண்டிருந்தார்கள். நுவூ எனும் இளைஞன் அவர்களைப் பார்த்தான். குறும்புத் தனமாக எல்லாருடைய ஆடைகளையும் எடுத்துப் போய்விட்டான். ஆடைகள் இல்லாமல் வெளியே வரமுடியாமல் சகோதரிகள் தவித்தனர். கடைசியில் தங்கள் கடைசித் தங்கையான ஸி நூ வை அவனிடம் சென்று ஆடை வாங்கி வர அனுப்பினார்கள். ஈரம் சொட்டச் சொட்ட பிறந்தமேனியாய் வந்து நின்ற அவளைப் பார்த்து, கண்டதும் காதல் கொண்டு, பின்னர் கல்யாணமும் செய்து கொள்கிறான் அவன். விஷயம் தெரிந்த மன்னருக்கு வந்ததே கோபம். இருவரையும் வானத்தின் இரண்டு மூலைகளில் கொண்டு போய் விட்டார். அவர்கள் ஏழாவது மாதத்தின், ஏழாவது நாளில் மட்டும் தான் சந்தித்துக் கொள்ள முடியும். அந்த நாள் தான் சீனர்களின் காதலர் தினம்.

9. காதலர் தினத்தில் காதலர்கள் வாழ்த்துக்களும், கவிதைகளும் எழுதும் போது உலகப் புகழ் பெற்ற காதலர்களைப் போல நாம் வாழ வேண்டும் என குறிப்பிடுவது வழக்கம். அவர்கள் குறிப்பிடும் பட்டியலில் வருபவர்கள் பெரும்பாலும் இவர்களில் ஒருவர் தான். ரோமியோ – ஜூலியட், லைலா – மஜ்னு, ஹீர் – ரன்ஹா, கிளியோ பாட்ரா – மார்க் ஆண்டனி, ஷாஜஹான் – மும்தாஜ்.

10. காதலர் தினத்தை மையமாகக் கொண்டு எக்கச்சக்கமான மூட நம்பிக்கைகள் உலவி வருகின்றன. காதலியர் தங்கள் மனம் கவர்ந்தவர்களின் பெயர்களையெல்லாம் ஒரு பாத்திரத்தில் எழுதிப் போடுவார்கள். பாத்திரத்தைக் குலுக்கி எடுக்கும் போது வரும் பெயர் தான் அவளுடைய கணவன். இது பதினேழாம் நூற்றாண்டுகளில் நிலவி வந்த பாப்புலர் வழக்கம்.

11. காதலர் தினத்தன்று காதலியின் கண்ணில் எந்தப் பறவை தென்படுகிறதோ அது அவளுடைய கணவனின் தன்மையைச் சொல்லும் என்பது காதலர் தினத்தன்று உலவி வந்த பண்டைய நம்பிக்கைகளின் ஒன்று. புறாவைக் காண வேண்டுமே என பெண்கள் பதறுவார்களாம். காரணம் புறாவைக் கண்டால் காதல் வாழ்க்கை ஆனந்தமாய் இருக்குமாம். கணவன் மிகவும் இரக்கமும், அன்பும், நேசமும் உடையவனாக இருப்பானாம் !

12. காதலர் தின பூக்களைப் பொறுத்தவரையில் சிவப்பு ரோஜாவுக்கு தான் முதலிடம். சிவப்பு ரோஜா சர்வதேச அளவில் காதல் மொழி பேசுகிறது. சிவப்பு ரோஜா கொடுத்தால் “காதல்” எனும் ஒரே மீனிங் தான் உலகெங்கும். சிவப்பு ரோஜா கொடுக்காத காதலர்கள், காதலியரின் பிரியத்துக்குரிய பூக்களைப் பரிசளிக்கிறார்கள். உலக அளவில் அதிகம் விற்கப்படுவதும், பரிமாறப்படுவதும், நேசிக்கப்படுவதும் சிவப்பு ரோஜாவே தான்.

13. ரோமில் பண்டைக்காலத்தில் கொண்டாடப்பட்ட ஒரு விழா லூப்பர் கேலியா. வாழ்க்கை வளமாக வேண்டும் என பாகான் கடவுளை வேண்டும் விழா இது. பிப்பிரவரி 13 முதல் 15 வரை கொண்டாடப்படும் இந்த விழா ரோம் நகரில் மிகப் பிரபலம். இதை கி.பி 490 களில் போப் கெலேஷியஸ் தடை செய்தார். ஆனாலும் மக்கள் இந்த விழாவை விடவில்லை. இந்த விழாவின் வீரியத்தைக் குறைக்கவும், இதை ஒரு கிறிஸ்தவ விழா மூலம் செயலிழக்கச் செய்யவும் போப் தீர்மானித்தார். எனவே பிப்பிரவரி 14ம் நாளை புனித. வேலண்டைன் நாள் என அறிவித்தார் என்பது பொதுவாக நம்பப்படும் வரலாறு.

14. இலக்கியங்களில் தவிர்க்க முடியாதவர் சேக்ஸ்பியர். அவருடைய காதல் பாடல்கள் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவை. அவருடைய புகழ் பெற்ற காவியங்களில் ஒன்று ஹேம்லெட். அதில் “நாளை வேலண்டைன்ஸ் டே” என்று துவங்கும் ஒரு காதல் கவிதைப் பாகம் வருகிறது. நான்காவது பாகத்தின் ஐந்தாவது காட்சியில் வரும் இந்தப் பாடல் 1600 களில் வேலண்டைன்ஸ் டே பிரபலமாய் இருந்திருக்கிறது என்பதன் இலக்கியச் சாட்சிகளில் முக்கியமானது இது.

15. கிழக்கு இங்கிலாந்தின் நார்போக் பகுதியில் வேலண்டைன்ஸ் தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்மஸ் காலத்தில் கிறிஸ்மஸ் தாத்தா வீடுகளில் பரிசுகள் தரும் வழக்கத்தை ஒத்திருக்கிறது இது. பிரியத்துக்குரிய வீடுகளின் பின்வாசல் கதவைத் தட்டி இனிப்புகளை வைத்துச் செல்கின்றனர். அப்படி இனிப்புகளை வைப்பவர்களை “ஜேக்” என்று அழைக்கின்றனர். யார் இனிப்பை வைத்தது என்று தெரியாமல் பலர் அதை பயத்துடன் சாப்பிடுவதும் உண்டு.

16. பிரான்ஸ் நாட்டில் வேலண்டைன்ஸ் தினத்தை சிம்பிளாக புனித.வேலண்டைன் என்று அழைக்கிறார்கள். ஆனால் கொண்டாடுவதென்னவோ மற்ற நாடுகளைப் போலத் தான். ஸ்பெயினில் இந்த நாளை சேன் வேலன்டின் என்கின்றனர். ஸ்வீடனில் இந்த நாளை “எல்லா இதயங்களின் தினம்” என்று அழைக்கின்றனர். போர்ச்சுக்கல் நாட்டில் இந்த நாளின் பெயர். டயா டாஸ் நமோரோடோஸ். அதாவது பாய்பிரண்ட் மற்றும் கேள் பிரண்ட் தினம் !

17. பின்லாந்தில் வேலண்டைன்ஸ் டே மிக வித்தியாசமானது. இது காதலர் ஸ்பெஷல் தினம் அல்ல. இந்த நாளை அவர்கள் ஸ்டேவான்பாவியா என்று அழைக்கின்றனர். இதற்கு நண்பர்கள் தினம் என்பது பொருள். நண்பர்களாய் இருப்பவர்கள் இந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். இனிப்புகள், பரிசுகள், வாழ்த்து அட்டைகள் என எல்லாம் உண்டு. வேறு வேறு இடங்களில் இருக்கும் நண்பர்களெல்லாம் ஒரே இடத்தில் கூடி கும்மாளமடிப்பது இதில் ஹைலைட்.

18. பிப்பிரவரி 14ல் என்ன விசேஷம் என்று கேட்பார்கள் பிரேசிலில். அவர்களுக்கு நோ வேலண்டைன்ஸ் டே. ஆனால் அவர்கள் ஜூன் 2ம் தியதி காதலர் தினம் கொண்டாடுகிறார்கள். காதலர்கள் மற்றும் தம்பதியர்கள் வாழ்த்து அட்டை, சாக்லேட், பரிசு, முத்தம் இத்யாதி எல்லாவற்றையும் பரிமாறிக் கொள்ளும் நாள் இது. ஐயோ, அப்போ பிப்பிரவரி 14ல் ஒண்ணுமே இல்லையா என பதட்டப்படாதீர்கள். அந்த நாளை ஒட்டி அவர்கள் ஒரு விழா கொண்டாடுகிறார்கள். அதை ஹாலிடே ஆஃப் செக்ஸ் என்று அழைக்கிறார்கள் ! அப்புறம் என்ன ?

19. இந்தியாவுக்கும் காதலுக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. இந்திய இலக்கியங்களில் காதல் மைய இடம் பிடிக்கின்றன. உலகையே பிரமிக்க வைக்கும் காதல் சின்னமான தாஜ்மஹால் இந்தியாவில் இருக்கிறது. உலகத்தின் முதல் செக்ஸ் கல்வி நூலான காமசூத்ராவின் பிறப்பிடமும் இந்தியாவே தான். இருந்தாலும் வேலண்டைன்ஸ் டே அன்று கலவரம், மண்டை உடைப்பு, சட்டை கிழிப்பு எல்லாம் நடப்பதும் நம் நாட்டில் தான். இத்தனை களேபரங்களையும் தாண்டி காதலர் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது. குறிப்பாக ஆசியாவில் காதலர் தின மார்க்கெட் அதிகம் உள்ள இடங்களில் முக்கிய இடம் இந்தியாவுக்கு.

20. சவுதி அரேபியாவில் காதலர் தினம் தடை மத அமைப்புகளால் தடை செய்யப்ட்டிருக்கிறது. இது இஸ்லாமிய சட்டங்களுக்கு விரோதமான விழா என்பது அவர்களுடைய நம்பிக்கை. இந்த விழா ஆண்களும் பெண்களும் சந்தித்து சில்மிசங்களில் ஈடுபட வழி வகுத்து விடும். ஏற்கனவே திருமணமான பெண்கள் சபலமடைய வழி வகுத்துவிடும் போன்றவையெல்லாம் அவர்கள் சொல்லும் காரணங்களில் சில. இருந்தாலும் திருட்டுத் தனமாக அங்கே காதலர் தினத்தைப் பலர் கொண்டாடுகின்றனர். ரகசியமாய் பூங்கொத்துகள் ஆர்டர் செய்து, அதை நள்ளிரவிலேயே மனசுக்குப் பிடித்தவர்களுக்கு கொண்டு சேர்த்து விடுகிறார்கள். பலர் இந்த நாளில் பெஹ்ரைன், எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்குப் பறந்து வேலண்டைன்ஸ் டே கொண்டாடி விட்டு சைலண்டாகத் திரும்பி விடுவதும் உண்டு.

21. “எனக்கொரு கேள் பிரண்ட் வேணுமடா” என காலம் காலமாகப் பாட்டுப் பாடியும் யாரும் மாட்டாத அப்பாவிகள் என்ன செய்வார்கள் ? அவர்களுக்கு ஆறுதல் சொல்ல ஒரு நாள் இருக்கிறது. ஏப்பிரல் 14. அந்த நாளின் பெயர் பிளாக் டே, கருப்பு தினம். தென் கொரியாவில் இந்த விழா பிரபலம். அதாவது பிப்பிரவரி 14ம் நாள் எந்த பரிசும் கிடைக்கவில்லையே, எந்தக் காதலியும் கரம் கோர்க்கவில்லையே என புலம்பும் சிங்கிள் பார்ட்டீஸ் இரண்டு மாசம் கண்ணைக் கசக்கியபின் கொண்டாடும் விழா. இந்த விழாவில் கொரியன் நூடுல்ஸ் சாப்பிடுவது ஒரு முக்கிய அம்சம். அதற்கு ஊற்றப்படும் சாஸ் கருப்பு கலரில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் !

22. கிரீட்டிங் கார்ட் இல்லாமல் வேலண்டைன்ஸ் டே இல்லை எனும் நிலை தான் அமெரிக்காவில். வேலண்டைன் வாழ்த்து அட்டைகள் தான் பல வாழ்த்து அட்டை கம்பெனிகளையே வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டும் விற்பனையாகும் வாழ்த்து அட்டைகளில் 25% வாழ்த்து அட்டைகள் வேலண்டைன் வாழ்த்து அட்டைகள் தான் எனப்து புள்ளி விவரக் கணக்கு.

23. செல்போனில் தனது காதலை வீடியோவாய் பதிவு செய்து உள்ளம் கவர்ந்த கள்வனுக்கோ கள்ளிக்கோ செல்போனிலேயே அனுப்பி விடுவது லேட்டஸ்ட் காதல் சொல்லும் முறை. சிலர் அதை அப்படியே அலேக்காக யூ டியூப் போன்ற இணைய தளங்களிலேயே பதிவு செய்து உலகுக்குத் தங்கள் காதலை உரக்கச் சொல்கிறார்கள்.

24. வேலண்டைன்ஸ் டே ஒரு நல்ல வியாபாரக் களம் என்பதைக் கண்டு முதலில் வாழ்த்து அட்டை உருவாக்கிய பெருமை எஸ்தர் ஏ ஹௌலாண்டா மவுண்ட் ஹோலியோக் –ஐச் சாரும். 1840ல் அமெரிக்காவில் இவர் வாழ்த்து அட்டைகள் உருவாக்கி விற்பனை செய்தார்.

25. ஜப்பானின் வேலண்டைன்ஸ் டே என்றாலே நினைவுக்கு வருவது சாக்லேட்! ஜப்பான் கடைகளெல்லாம் வேலண்டைன்ஸ் டேக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே சாக்லேட்களால் குவியும். வித விதமான வகைகளில், பாக்கெட்களில் விற்பனையாகும் சாக்லேட்களை வாங்குவது பெண்கள் தான். ஜப்பானில் பெண்கள் தங்கள் மனதுக்குப் பிடித்த எல்லா ஆண்களுக்கும் சாக்லேட் கொடுப்பார்கள். அதனால் யாராவது சாக்லேட் தந்தால் உடனே காதல் என்று டூயட் பாட முடியாது ! காதலர்களுக்குக் கொடுக்க பெண்கள் கடைகளிலிருந்து சாக்லேட் வாங்க மாட்டார்களாம். ஸ்பெஷலாக வீட்டிலேயே எக்ஸ்குளூசிவ் ஆக தயாராக்கி கையோடு ஊட்டியும் விடுவார்களாம்.

26. கொரியாவில் பிப்பிரவரி 14 தான் காதலர் தினம். காதலியர் தங்கள் காதலர்களுக்குச் சாக்லேட் பரிசளிப்பது தான் இந்த நாளின் விசேஷம். ஆனால் காதலர்கள் அந்த நாளில் காதலியருக்கு சாக்லேட் கொடுக்க மாட்டார்கள். என்ன கொடுமை இது என புலம்பிய கொரியா மார்ச் 14ம் தியதியை வயிட் டே, வெள்ளை தினம், என கொண்டாடுகிறது. இந்த நாளில் காதலர்கள் காதலியருக்கு சாக்லேட்களை வட்டியும் முதலுமாக வாங்கிக் கொடுக்கவேண்டும் !

27. காதலர் தினத்தின் இன்னொரு ஸ்பெஷல் டின்னர். மேலை நாடுகளைப் பொறுத்த வரையில் மங்கலான மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் காதல் வழியும் கண்களுடன் டின்னர் சாப்பிடுவது இந்த நாளின் முக்கிய அம்சம். கடற்கரை உணவகங்கள், கப்பல் ரெஸ்டாரண்ட்கள், மொட்டை மாடி ரெஸ்டாரண்ட்கள் போன்ற ஸ்பெஷல் இடங்கள் பல வாரங்களுக்கு முன்பே புக் ஆகி விடுமாம். வேலண்டைன் சாப்பாட்டின் போது ஷான்பைன் அருந்தாமல், வைன் அருந்தவேண்டும் என்பது எழுதப்படாத வழக்கம்.

28. அமெரிக்க ஆண்களில் 74 சதவீதம் பேர் வேலண்டைன்ஸ் டே கொண்டாடுகிறார்கள். கிறிஸ்மஸ், ஈஸ்டர், ஹாலோவீன் இந்த மூன்று நாட்களுக்கு அடுத்தபடியாக சாக்லேட் அதிகம் விற்பனையாவது வேலண்டைன்ஸ் டேயில் தான். சுமார் 1105 மில்லியன் டாலர்கள் பணத்தை சாக்லேட் வாங்கியே செலவழிக்கிறார்களாம்.

29. அமெரிக்க பெண்கள் தங்களுக்கு பாய் பிரண்ட் இல்லை என்பதை கொஞ்சம் கௌரவக் கொறச்சலாகப் பார்க்கிறார்கள். அதனால் பாய் பிரண்ட் இல்லாத பார்ட்டிகள் தங்களுக்குத் தாங்களே பூக்களை அனுப்பிக் கொள்கிறார்கள். அப்படியே வீட்டுக்கு டெலிவரி வரும் போது, ஓ.. மை ஸ்வீட் ஹார்ட் என பில்டப் கொடுத்து வாங்குகிறார்கள். அமெரிக்காவில் சுமார் 15 சதவீதம் பெண்களுக்கு இப்படித் தான் வேலண்டைன் பூக்கள் வருகின்றனவாம் !

30. ரிச்சர்ட் காட்பரியை வேலண்டைன்ஸ் தினத்தில் ஒரு முறை நினைவில் கொள்ளுங்கள். அவர்தான் 1800ல் முதன் முதலாக வேலண்டைன் சாக்லேட் பாக்ஸை அறிமுகப்படுத்தி வைத்தவர். அவர் ஆரம்பித்த பழக்கம் உலகெங்கும் பரவி விட்டது. அமெரிக்காவில் மட்டும் ஒவ்வோர் வேலண்டைன் தினத்திலும் செலவாகும் சாக்லேட் பாக்ஸ்களின் எண்ணிக்கை 3.6 கோடி !

31. ஓர்லான்ஸ் பகுதியின் மன்னனான சார்லஸ் 1415ல் லண்டன் சிறையில் கிடந்தார். சிறைத் தனிமையில் தனது மனைவியை ரொம்பவே மிஸ் பண்ணினார் மனுஷன். அதனால் ஒரு கவிதை எழுதி வேலண்டைன் தினத்தன்று மனைவிக்கு அனுப்பினார். அது தான் நமக்குத் தெரிந்த மிகப் பழமையான வேலண்டைன் காதல் கவிதை. அவர் போட்டது தான் இன்று மானே, தேனே பொன்மானே என எல்லோரும் எழுதித் தள்ளும் வேலண்டைன் கவிதைகளின் பிள்ளையார் சுழி.

32. வேலண்டைன்ஸ் தினத்தை விடுமுறை நாளாக்கி காதலர்களின் மனதில் லவ் வார்த்தவர் இங்கிலாந்து மன்னன் எட்டாம் ஹென்றி. 1537ல் இவர் வேலண்டைன் தினத்தை அதிகாரபூர்வ விடுமுறை நாளாக்கினார். எட்டாம் ஹென்றி மன்னன் காதல் விளையாட்டுகளில் அதீத ஆர்வம் உடையவர் என்பது தான் அதன் சீக்ரட் காரணம்.

33. காதலர் தினத்தில் காதலி சிணுங்குவாளோ இல்லையோ எல்லா செல்போன்களும் சிணுங்கோ சிணுங்கென்று சிணுங்கும். நல்ல வேளை கிரகாம்பெல் போனைக் கண்டு பிடித்தார். கிரகாம்பெல், காதலர் தினம், தொலைபேசி இந்த மூன்றுக்கும் ஒரு தொடர்பு உண்டு. தொலைபேசியின் காப்புரிமைக்காக 1876ம் ஆண்டு அவர் விண்ணப்பித்தார். அந்த நாள் பிப்பிரவரி 14 ! அட என்ன ஒரு தீர்க்கத் தரிசி அவர் !

34. காதலர் தின பரிசை யாரெல்லாம் வாங்குவார்கள் ? நீங்கள் சிந்தித்துப் பார்க்க முடியாத இடத்தில் இருப்பது செல்லப் பிராணிகள். மேலை நாடுகளில் 3 % செல்லப் பிராணிகள் தங்கள் எஜமானர்களிடமிருந்து காதலர் தின பரிசுகளைப் பெற்றுக் கொள்கிறதாம் !

35. வாழ்த்து அட்டைகள் தயாரிப்பதில் மிக முக்கியமான ஒரு நிறுவனம் ஹால்மார்க். ஹால்மார்க் நிறுவனத்தில் 1330 வகையான வேலண்டைன் ஸ்பெஷல் கார்ட் வகைகள் இருக்கின்றன. காமத்துப் பால் உட்பட 1330 குறள்கள் எழுதியவர் நமது வள்ளுவர். ஆனலும் இந்த 1330 க்கும் திருக்குறளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

36. ஐ லவ் யூ – என்றால் மனசுக்குள் மழையடிக்கும். ஆனால் ஐ லவ் யூ என்றால் மனதுக்குள் திகிலடித்த ஒரு நிகழ்வும் உண்டு. ஐ லவ் யூ எனும் ஒரு வைரஸ் 2000 ஆண்டில் முப்பது இலட்சம் கம்ப்யூட்டர்களுக்கு மேல் பாதித்து செயலிழக்க வைத்து விட்டது. ஐ லவ் யூ என்று தலைப்பிட்டு எந்த மெயில் வந்தாலும் மக்கள் அலறோ அலறென்று அலறினார்கள் ! கம்ப்யூட்டர் வைரஸ் வரலாற்றில் இந்த ஐ லவ் யூ வைரஸ் நிரந்தர இடத்தையும் பிடித்து விட்டது.

37. காதல் என்றாலே சட்டென மனதுக்குள் வரும் சிம்பல் இதயம். அதற்குப் பல காரணங்கள் உண்டு. இதயத்தில் ஆன்மா குடி கொண்டிருப்பதாக பண்டைக்காலத்தில் மக்கள் நம்பினார்கள். பலர் இதயத்தில் தான் அறிவும், உணர்ச்சியும் இருப்பதாக நம்பினார்கள். இதயத்தில் தான் உண்மை குடிகொண்டிருப்பதாக நம்பியவர்களும் உண்டு. சிவப்பு நிற இதயம் காதலின் இருப்பிடம் என கிரேக்கர்கள் நம்பினார்கள். அதனால் தான் மன்மத அம்பு இதயத்தில் பாய்ந்தால் தன்னிலை இழந்து காதல் வசப்பட்டு விடுவதாக பண்டைக்கால மக்கள் நம்பினார்கள். ஹார்ட் மேட்டர் இது தான்.

38. சேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் உலகப் புகழ் பெற்ற காதலர்கள். அந்தக் காதலர்கள் “வாழ்ந்த வெரோனா இத்தாலியில் உள்ளது. அங்கே ஒவ்வோர் காதலர் தினத்தன்றும் சுமார் ஆயிரம் காதல் கடிதங்கள் ஜூலியட்டுக்கு வருமாம். எல்லாம் ஜூலியட் மேல் காதல் கொள்ளும் இளைஞர்கள் எழுதிப் போடும் கடிதங்கள் !

No comments:

Post a Comment