Friday, May 1, 2015

குழந்தையும் நாமும் குழந்தைகளிடம் ஒரு பழக்கம் உண்டு .

குழந்தையும் நாமும் -www.v4all.org
குழந்தைகளிடம் ஒரு பழக்கம் உண்டு .
ஒரு கிழிந்த பர்ஸை எடுத்துக்கொள்ளும் , அதில் உடைந்த வளையல் துண்டுகள் , கிழிந்த ரயில், பஸ் டிக்கெட்டுகள் , தீப்பெட்டி , சிகரெட் பாக்கெட் அட்டைகள் , பழைய கல்யாண பத்திரிக்கையில் இருக்கும் சாமி படங்கள், பழைய கைக்குட்டை , செல்லாத காசுகள் என்று வீணான, வீணாகிப்போன பொருட்களையெல்லாம் சேகரித்து வைத்திருக்கும்.
அதை ஒரு பொக்கிஷம் போலவே பாதுகாக்கும்.
அதனுடைய தோழி தோழர்களிடம் காட்டி பெருமைபட்டுக்கொள்ளும்.
குழந்தைகள் அதனை நம்மிடம் காட்டினால் நாம் குழந்தையை பார்த்து,
" குப்பையை எல்லாம் சேர்த்து வைத்திருக்கின்றாய் , எல்லாத்தையும் கீழே எடுத்து எறி " என்று சண்டை பிடிப்போம்.
ஆனால் குழந்தைகள் எறிந்து விடாது , அதனை பத்திரமாக வைத்துக் கொள்ளும். அவர்களுக்கு அது மிக பெரிய புதையல்.
ஆனால் நமக்கும் அது குப்பை என்று தெரியும்.
அதைப்போலவே . . .
“ கடன் நிறைய இருக்கின்றது , மகனை , மகளை படிக்க வைக்க முடியவில்லை. மனைவி சரியில்லை, கணவன் சரியில்லை, வேலை இல்லை , தொழில் இல்லை , எதிரிகள் தொல்லை , தாயார் , தந்தை என்னை பராமரிப்பதில்லை , மகன் , மகள் எங்களை காப்பாற்றவில்லை , நோயின் தாக்கம் மிக மோசமாக இருக்கின்றது ” நீங்கள்தான் எங்களை காக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளோடு வரும் நம்மைப் பார்த்து ஞானிகள் சொல்கின்றார்கள்.
குப்பைகளை மனம் முழுக்க நிறைத்து வைத்திருக்கின்றாயே அதனை வெளியேற்று , அதன்பின் உன் வாழ்க்கை பிரகாசமாகும்.
இறைவன் தந்த அருமையான பிறப்பினை அவலட்சணமாக்கி வைத்திருகின்றாயே என்று கடிந்து கொள்கின்றார்கள்.
அது குப்பை என்று நமக்கு புரிவதில்லை - குழந்தைகளைப் போலவே விட மறுக்கின்றோம் .
உண்மைதானே , நாமும் குழந்தைகளைபோலவே குப்பைகளை உள்வாங்கி புனிதத்தை வெளியேற்றி விட்டோம்.
எல்லோருக்கும் துன்பமும் இன்பமும் பொதுவானது என்பதை உணர்வோம் .
குப்பைகளை தவிர்ப்போம் – குணக்குன்றென நிமிர்வோம்.
ஓம் நமசிவய

No comments:

Post a Comment